Published:Updated:

கருகிய நாற்றுகள்... கதறும் விவசாயிகள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

அரசு அலட்சியம் அநியாயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலட்சியம் அநியாயம் ( தே.சிலம்பரசன் )

அம்பல மேடை

கருகிய நாற்றுகள்... கதறும் விவசாயிகள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

அம்பல மேடை

Published:Updated:
அரசு அலட்சியம் அநியாயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலட்சியம் அநியாயம் ( தே.சிலம்பரசன் )

‘அநியாயமா இருக்கே? இதை யார்கிட்ட போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள்...

முப்போகமும் விளைவித்து, அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம். போதிய மழையின்மை, ரசாயன உரங்களின் விலை உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கும் மத்தியில் விவசாயம் செய்பவர்கள் இம்மாவட்டத்து விவசாயிகள்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருக்கை கிராமத்து விவசாயிகளின் சோகம், அவர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் ஒரு கணம் வருந்த செய்கிறது. தனியார் விதை நிறுவனத்தின் விதை நெல்லை வாங்கி நடவு செய்த இந்தக் கிராமத்து விவசாயிகள், சில நாள்களில் நாற்றுகள் கருகிப்போனதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது அத்தியூர் திருக்கை கிராமம். ‘கடன் பெற்று விவசாயம் செய்து விட்டோம். இனி என்ன செய்யப் போகிறோமோ..?’ என்ற வருத்தத்துடன் அமர்ந்திருந்த அந்தக் கிராமத்து விவசாயிகள் சிலரைச் சந்தித்தோம். விரக்தியின் விளிம்பிலிருந்த அவர்கள், தங்களின் ஆதங்கத்தைக் கொட்டத் தொடங்கினார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக நம்மிடம் பேசிய செந்தில் அதிபன் என்ற விவசாயி,

பாதிக்கப்பட்ட விவசாயிகள்
பாதிக்கப்பட்ட விவசாயிகள்


ஓர் அடி உயரத்துக்கு மேல வளரவேயில்லை

“எங்க கிராமத்துல மட்டும் 61 விவசாயிகள் இந்த விதைநெல் மோசடியால பாதிக்கப்பட்டிருக்காங்க. எம்.பி.ஆர்.606 (MPR 606) என்ற தனியார் நிறுவனத்தின் ஹைபிரிட் விதை நெல்லை வாங்கி, சித்திரைப் பருவத்தில நடவு செஞ்சோம். அன்னியூர், கொசப்பாளையம், கண்டாச்சிபுரம், விழுப்புரம் ஆகிய ஊர்கள்ல இருக்கிற உரக்கடைகள்ல (அக்ரோ சர்வீஸ் சென்டர்) இருந்துதான் இந்த விதை நெல்லை வாங்கினோம். ஒரு கிலோ விதை நெல் 86 ரூபாய். மண் வளத்துக்கு ஏத்தமாதிரி ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 கிலோ வரை வாங்கி நாற்றுவிட்டு நடவு செஞ்சோம். 15 நாள் வரைக்கும் நல்லா வளர்ந்து வந்தது. அதுக்கு அப்புறமா ஓர் அடி உசரத்துக்கு மேலே வளரவே இல்ல. பயிரோட முனை காயத் தொடங்கிடுச்சி. ஏதோ வளர்ச்சி பிரச்னை அப்படினு, உரம் எல்லாம் கூட வாங்கி போட்டுப் பார்த்துட்டோம். எந்தப் பயனும் இல்லை. அதோட பயிர் கருக தொடங்கிடுச்சி.

‘‘கூடுதலாக ரெண்டு தடவை மருந்து அடிச்சு, தீனி போட்டும் பாத்துட்டோம். எந்த மாறுதலும் கிடைக்கல. பயிரை வீணா விட்டுடக்கூடாதுன்னு கடைசி வரைக்கும் போராடி பார்த்துட்டோம்.’’61 விவசாயிகள்... 120 ஏக்கர்

வழக்கமா, நெல் நட்டதுக்கு அப்புறம் ரெண்டு தடவை மருந்து அடிப்போம். ரெண்டு தடவை தீனி (உரம்) வாங்கி போடுவோம். இந்த மாதிரி கூடுதலாக ரெண்டு தடவை மருந்து அடிச்சு, தீனி போட்டும் பாத்துட்டோம். எந்த மாறுதலும் கிடைக்கல. பயிரை வீணா விட்டுடக்கூடாதுன்னு கடைசி வரைக்கும் போராடி பார்த்துட்டோம். இந்த விதை நெல்லை வாங்கி நடவு பண்ணிய 61 விவசாயிகளுடைய, 120 ஏக்கர்லயும் இதே நிலைமைதான். இதுக்கு முன்னாடி, இதே விதையைப் பயன்படுத்தி ரெண்டு முறை விவசாயம் பண்ணியிருக்கோம். நல்ல விளைச்சல் கிடைச்சது. ஏக்கருக்கு 34 மூட்டை முதல் 42 மூட்டை வரைக்கும் விளைஞ்சது. வியாபாரிகள்மூலம், ஒரு மூட்டை 1,400 ரூபாய் வரை விலை போச்சு. இதே சித்திரை போகத்துலயும் போன முறை நடவு செஞ்சு அறுவடை பண்ணியிருக்கோம்.

செந்தில் அதிபன்
செந்தில் அதிபன்


தனியார் நிறுவனம் செய்த தவறு

பொதுவா கோடைக்காலத்தில குறுகிய காலத்துப் பயிரைத்தான் தேர்வு செய்வோம். இந்த நெல்லும் 105 நாள்கள் வளர்ச்சி கொண்டதுதான். அரிசி மிகவும் சன்னமாய் இருக்கும். இந்தப் பாக்கெட்டிலேயே ‘மூன்று போகத்திற்கும் ஏற்றதுதான்’னு போட்டு இருக்கு. நல்ல விளைச்சல் இருக்கிறதால பக்கத்து கழனிக்காரங்க பேச்சு முறையில பேசிக்கிட்டோம். அதே நம்பிக்கையில இந்த முறையும் இந்த விதை நெல்லை வாங்கி பயிர் செஞ்சோம். மொத்தமும் காய்ஞ்சு போச்சு. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வெச்சு, சரியான விதை நெல்லைப் பக்குவப்படுத்திக் கொடுக்கல அந்தத் தனியார் நிறுவனம்.

விளைச்சல் இப்படி ஆனதால, கடந்த ஜூன் 10-ம் தேதி உதவி வேளாண்மை அலுவலகத்திற்குப் போய் முறையிட்டோம். அதன்படி ஏ.ஓ-வும் வந்து பார்த்துட்டு, திண்டிவனம் விதை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தகவல் தெரிவிச்சார். விதை ஆராய்ச்சியாளர்கள் வந்து பார்த்துட்டு, சோதனை செய்யுறதற்கான பயிர் மாதிரிகளை எடுத்துக்கிட்டுப் போனாங்க. சோதிச்சு பார்த்துட்டு, ‘விதைதான் பிரச்னை’ அப்படின்னு சொன்னாங்க” என்றார்.

கருகிய பயிர்
கருகிய பயிர்


அதைத் தொடர்ந்து விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் செளந்தரராஜனிடம் பேசினோம்.

“இந்த விதைக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு. விவசாயிகள் பயிர் சுழற்சி செய்யாமல் இருந்துள்ளனர். இந்த ஊரில் மட்டும்தான் இந்தப் பாதிப்பு இருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏதும் இல்லை. நடவு செய்தவுடன் மழை பெய்ததால் நோய் தாக்கம் வெகுவாகப் பரவி இருக்கிறது. மாதிரிச் சோதனை முடிவில், ‘விதை தான் பிரச்னை’ எனச் சொல்லவில்லை. நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ‘விதை உறை அழுகல் நோய், பாக்டீரியா இலை கதிர்கள் நோய்’ பாதித்துள்ளதாகத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடமாக இதுவரை நாங்கள் 40 ஏக்கரைத்தான் கண்டறிந்துள்ளோம். கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் இருக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

விவசாயிகள்
விவசாயிகள்

ஆனால், விவசாயிகள் சொல்லும் பரப்பளவில் பாதிப்பில்லை. சம்பந்தப்பட்ட கடைகள்மூலம், பாதிக்கப்பட்ட 23 ஏக்கர் நிலங்களுக்கு நிவாரணம் வாங்கி கொடுத்துள்ளோம். 17 ஏக்கர் நிலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட 40 ஏக்கர் விவசாயிகளும் ரசீது வைத்துள்ளார்கள். கொசப்பாளையம், கண்டாச்சிபுரத்தில் இயங்கும் சம்பந்தப்பட்ட 2 கடைகளின் விதை விற்பனை செய்யும் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். விதை வினியோகஸ்தருடைய(டீலர்) விதையை விற்பனை செய்யத் தடை செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம்” என்று சொல்லி முடித்தார்.

விதைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

தனியார் நிறுவனங்களில் விதையை வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக, விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் செளந்தரராஜன் தெரிவித்த கருத்துகள் இங்கே...

விதைப் பொட்டலத்தில் முதலாவதாக விதைக்கும் பருவம், முளைக்கும் திறனைப் பார்க்க வேண்டும். அதேபோல, உண்மைநிலை அட்டையில் முழு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். இந்த அட்டை விற்பனை செய்யும் கடைகளில் விற்பனையாளர்மூலம் காண்பிக்கப்பட வேண்டும். அதேசமயம் ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். அதில் வாங்குபவர் மற்றும் விற்பவரின் கையொப்பம் இருக்க வேண்டும். விதைப் பொட்டலத்தில் உள்ள லாட் நம்பர், காலாவதி எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் விதை வாங்கும்போது அரசு பதிவுச் சான்றிதழ் இருக்கிறதா.. எனப் பார்க்க வேண்டும். இதுவே முக்கியமானது. முளைப்புத்திறன் விவரத்தைச் சரிபார்க்க வேண்டும். விதை விற்பனை செய்யப்படும் கடைகளின் வெளியில், விதை விவரப் பலகை கட்டாயம் வைக்கப்பட வேண்டும். அதில், விலையும் இருப்பும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்கிறோம்!

விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை விழுப்புரம், வேளாண்மை இணை இயக்குநர் ரமணனிடம் கொண்டு சென்றோம்.

“நாங்க அந்த விதையைப் பரிந்துரை செய்வதில்லை. எப்படி அதை வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அது தமிழ்நாட்டு நெல் ரகமே கிடையாது. இந்த விதை, ஆந்திரா, குஜராத் பகுதியிலிருந்து வருகிறது. யாராவது சொல்வதை வைத்து வாங்கி நடவு செய்துவிடுகிறார்கள். சில சமயம் இதுபோன்று பிரச்னையாகிவிடுகிறது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் பேசி, யார் மூலம் விதை விற்கப்பட்டதோ அவர்கள் மூலமாகவே நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். எப்போதும், விதைப்பதற்கு முன்பு விவசாயிகள் ஆலோசனை பெறுவது நல்லது. இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் இது தொடர்பாக அறிக்கை கேட்டிருக்கிறார்கள். விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism