Published:Updated:

மந்த நிலையில் மாடித்தோட்ட திட்டம்...காலாவதி உரத்தைக் கொடுக்கும் தோட்டக்கலைத்துறை!

அம்பல மேடை
பிரீமியம் ஸ்டோரி
அம்பல மேடை

அம்பல மேடை

மந்த நிலையில் மாடித்தோட்ட திட்டம்...காலாவதி உரத்தைக் கொடுக்கும் தோட்டக்கலைத்துறை!

அம்பல மேடை

Published:Updated:
அம்பல மேடை
பிரீமியம் ஸ்டோரி
அம்பல மேடை

‘அநியாயமா இருக்கே? இதை யார்கிட்ட போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள்...

“மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்குத் தேவை யான காய்கறி வளர்ப்புப் பைகள், விதைகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். மேலும், மாடித் தோட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் செய்வதற்கான கிட் மானிய விலையில் வழங்கப்படும்” என்று தோட்டக்கலைத்துறை மாவட்டம்தோறும் மாடித் தோட்டத்தை ஊக்குவிக்க அழைப்பு விடுத்து வருகிறது.

ஆனால், “தோட்டக்கலைத்துறை சொன்னதுபோல மானிய விலையில் எதுவும் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்தும், தோட்டக்கலைத்துறையிடமிருந்து எந்த அசைவும் இல்லை. திரவப் பயிர் வளர்ச்சி ஊக்கி கேட்டதற்கு, காலாவதியான பாட்டிலைக் கொடுக்கின்றனர்” என்று தோட்டக்கலைத்துறை மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. பசுமை விகடன் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த புகார் இதோ...

ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியைச் சேர்ந்த கவிதா. சில ஆண்டுகளுக்கு முன்பு மாடித்தோட்டம் அமைத்த கவிதாவுக்கு தோட்டக்கலைத்துறை கசப்பான அனுபவங்களையே வழங்கி வருகிறது. இதுகுறித்து கவிதா கூறுகையில், “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகவே யோசித்து வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்தேன். தக்காளி, கத்திரிக்காய், கீரை வகைகள் என்று எங்களுக்குத் தேவையான வகையில் தோட்டத்தில் விதைப்போம். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மானிய விலையில் கிட் (மாடித்தோட்ட தொகுப்பு) கொடுக்கிறார்கள் எனத் தகவல் வந்தது. தாலுகா அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்தேன். கிடைக்கவில்லை. சில முறை அவர்களை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டேன். ‘இன்னும் வரவில்லை’ என்ற அலட்சிய பதில்தான் வந்தது.

அதனால், மீண்டும் ஒருமுறை நேரடியாகச் சென்று பதிவு செய்தேன். என்னுடைய நண்பர்களும் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கும் இதே நிலைதான். திரவப் பயிர் வளர்ச்சி ஊக்கி கேட்டபோது, ‘பாதி விலையில் கொடுக்கிறோம்’ என்று கூறினர். ‘ஏன்?’ என்று கேட்டபோதுதான், அது காலாவதியாகியிருந்தது தெரியவந்தது. நாங்கள் பார்த்தபோதே, அது காலாவதியாகி இரண்டு மாதங்களாகியிருந்தன. “ஏன் காலாவதியானதை எல்லாம் கொடுக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு, “அதெல்லாம் பிரச்னை இல்லை. இது நல்ல ஆற்றலுடன்தான் இருக்கும்” என்று பதிலளித்தனர். மாடித்தோட்டத்தில் விளை வித்ததைத்தான் எங்கள் வீடுகளுக்கு பயன் படுத்துகிறோம். அதனால், அதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டோம்.

அம்பல மேடை
அம்பல மேடை

சொட்டுநீர்ப் பாசன கருவிக்குப் பதிவு செய்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. ‘பதிவு செய்த ஆர்டர்படி கொடுப்போம்’ என்று ஆரம்பத்தில் கூறினர். தொலைபேசியில் எப்போது தொடர்புகொண்டு கேட்டாலும், ‘இல்லை’ என்ற பதில்தான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. மாதம் ஒருமுறை இப்படி விசாரித்துக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில், அவர்களைத் தொடர்பு கொள்வதையே விட்டுவிட்டேன். எனக்குத் தெரிந்து ஈரோடு மாவட்டத்தில் இந்த மானிய விலை கிட் யாருக்குமே கிடைப்பதில்லை. இதனால், வெளியில் சற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். எங்கள் வீட்டிலும் இதைப் பார்த்து சோர்ந்து விட்டனர். அரசு ஒரு விஷயத்தை அறிவிப்பாக வெளியிடும்போது, அது எல்லோருக்கும் சென்று சேருகிறதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டிய துறையே அலட்சியமாக இருந்தால் எப்படி?

இந்தநிலை தொடர்ந்தால், அவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்களோ? வேறு முறைகேடு நடக்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அரசு அந்த சந்தேகங் களுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் எல்லோருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அழுத்தமாக.

அலைபேசியை எடுங்க... அத்தனையும் படம் புடிங்க... அப்படியே அனுப்புங்க... வாட்ஸ் அப் எண்: 99400 22128

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தோட்டக் கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, “எங்களிடம் பதிவு செய்தவர் களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து, விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். காலாவதியான பொருளை கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வற்றையும் முறைப்படி, காலாவதி தேதி போன்றவற்றை சரிபார்த்துதான் கொடுத்து கொண்டிருக்கிறோம். அதனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்திருந்தால், என்னிடம் தொலைபேசியிலோ, நேரிலோ பேசியிருக்கலாம். நான் உடனடியாக கவனித் திருப்பேன். நீங்கள் சொல்லிதான் நான் இந்த விஷயம் குறித்து கேள்விப்படுகிறேன். பதிவு செய்து ஓராண்டுக்கு எல்லாம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இங்கு இல்லை. திட்டம் வந்தவுடன், முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக வழங்கிவிடுவோம். எங்களிடம் ஒருவர் பதிவு செய்தால், 3-6 மாதங்களுக்குள் வழங்கிவிடுவோம். அவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள். இந்தாண்டுக்கான திட்டம் தொடங்கியவுடன், அவர்களுக்கு உடனடியாகக் கொடுத்துவிடுகிறோம், இனி இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்றார்.

இதையடுத்து கவிதாவிடம் தோட்டக்கலை உதவி இயக்குநர் சொல்லியதைத் தெரிவித்தோம். “நான் உடல்நிலை காரணமாக ஓய்வில் இருக்கிறேன். கண்டிப்பாக அவருடன் பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டம்

நபார்டு அதிகாரி தொடர்பு கொண்டார்!

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தாய்மண் பாரம்பரிய வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நீர்வாகச் சீர்கேடு குறித்து கடந்த இதழில்(25.4.21) கட்டுரை வெளியிட்டிருந்தோம். ‘பங்கு தொகை செலுத்தியவர்களுக்கு ஷேர் சர்டிபிஃகேட் வழங்கப்படவில்லை. இதன் அலுவலகம் மற்றும் அங்காடி பூட்டிக் கிடப்பதாக’ விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தார்கள். கட்டுரை வெளியான பிறகு என்ன விளைவு ஏற்பட்டுள்ளது என்று தாய்மண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் பேசியபோது “நபார்டு வங்கியின் திருவாரூர் மாவட்ட வளர்ச்சி அதிகாரி விஸ்வந்த் கன்னா எங்களைத் தொடர்புகொண்டு ஏப்ரல் 16-ம் தேதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக அக்கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism