Published:Updated:

`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

வறட்சி
வறட்சி

வட்டியை உடனே கட்ட வேண்டும் என விவசாயிகளை கூட்டுறவு சங்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, கடனுக்கான வட்டியை உடனே கட்ட வேண்டும் என விவசாயிகளை கூட்டுறவு சங்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

வயல்
வயல்
ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்கொலைகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, 5 ஏக்கருக்குக் குறைவாக வைத்திருக்கும் குறு விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது.

5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள பெரிய விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவில்லை. `வறட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே’ என கேள்வி எழுப்பிய விவசாயிகள், தங்கள் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய, தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்கான வட்டியை உடனே கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

வயல்
வயல்

இது தொடர்பாகப் பேசிய தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன். ``வறட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். இதில், சிறியது பெரியது என ஏதும் இல்லை. பயிர்க்கடன் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதிகாரிகள் இப்படி நடந்துகொள்வது சரியில்லை. விவசாயிகளை அணுகும் அதிகாரிகள், `வாங்கிய கடனைக் கட்டுங்கள் இல்லை, வட்டியைக் கட்டுங்கள்..’ எனக் கூறுகிறார்கள். வழக்கு தொடர்பாக விவசாயிகள் கூறினால், `அது எங்களுக்குத் தேவையில்லை. கடனைக் கட்டுங்கள்…’ எனக் கூறுகிறார்கள். இதனால், விவசாயிகள் புலம்புகிறார்கள்” என்றார்.

இது தொடர்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் இது தொடர்பாக பேச மறுத்துவிட்டனர்.

`புதர்மண்டிக் கிடக்கும் எம்.ஜி.ஆரின் கனவு!'- சண்முகா நதியால் கலங்கும் தேனி கிராமங்கள்
அடுத்த கட்டுரைக்கு