Published:Updated:

கான்கிரீட் கால்வாய்... கதறும் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

கான்கிரீட் கால்வாய்... கதறும் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

வானம் பார்த்த பூமியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், சமீபத்திய மழையில் முளைத்த புற்களைப் பறித்துத் தனது ஆட்டுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். தோட்டத்தில் தக்காளி பறித்துக்கொண்டு அந்த வழியாக வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ஏரோட்டியைப் பார்த்ததும் அங்கு வந்தார்.

‘‘என்னய்யா பண்ணிட்டு இருக்க... வயல் ஞாபகத்துல காட்டுல களை எடுத்துட்டுத் திரியுற’’ சிரித்துக்கொண்டே கேட்டார் காய்கறி.

‘‘வர வர உனக்குக் குசும்பு அதிகமாகிடுச்சு கண்ணம்மா. நான் ஆட்டுக்குப் புல்லு பிடுங்கிக் கொடுத்துட்டு இருக்கேன். நீ... களையெடுத்துட்டு இருக்கியான்னு கேக்குற. சரி கண்ணம்மா... இன்னும் நீ யாவாரத்துக்குப் போகலயா’’ என்று கேட்டார் ஏரோட்டி.

‘‘எங்கிட்டுப் போறது. தக்காளிக்கு விலை கிடைக்கமாட்டேங்குது. அதனால இதை உள்ளூர்லயே கேக்குறவங்களுக்குக் கொடுக்கலாம்னு எடுத்துட்டுப் போறேன். விற்பனை மூலமா வந்தா வரவு... இல்லைன்னா செலவுன்னு போக வேண்டியதுதான். சம்சாரி பொழப்புல இதெல்லாம் சகஜம்தானேய்யா’’ யதார்த்தத்தை எடுத்துச்சொன்னார் காய்கறி.

‘‘என்னமோ தக்காளியைச் சும்மா கொடுக்கப்போற மாதிரி பேசுற... காசுக்குத்தான விக்கப்போற’’ நக்கலாகக் கேட்டார் ஏகாம்பரம்.

‘‘நான் உள்ளூர்காரங்களுக்குக் காசு வாங்காமத்தான் கொடுக்கப்போறேன்யா...இப்ப பாரு உன் ஆட்டுக்குட்டிக்குக் கூடக் கொடுக்குறேன்’’ என்ற காய்கறி, கூடையிலிருந்து கொஞ்சம் தக்காளியை எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தார். “விலையில்லா விளைபொருள் கொடுக்குறீங்களோ?’’ குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்க்க, குடையை ஊன்றியபடி நின்றுகொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

‘‘வாங்க வாத்தியாரே... என் ஆடு இலவசமாக் கொடுக்குற எதையும் சாப்பிடாது. பார்த்தீங்களா இன்னும் மோந்துப் பார்த்துட்டுதானே இருக்குது’’ என்றதும் இருவரும் சிரித்தனர்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு



‘‘நான் ஒண்ணு உங்ககிட்ட கேக்கணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க. ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போடுவாங்க... அதுல விவசாயத்துக்கும் சில அறிவிப்புகள் வரும். அதைச் செய்யுறாங்களா...செய்றதில்லையாங்கிற விஷயத்துக்குள்ள நான் போகல. ஆனா, ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும், இந்த வருஷம் புதுசா விவசாயத்துக்குத் தனி பட்ஜெட்னு சொல்லிகிட்டு இருக்காங்களே... இதுக்கும் பொது பட்ஜெட்டுக்கும் என்ன வித்தியாசம். தனி பட்ஜெட்னால விவசாயிகளுக்கு என்ன நல்லது நடக்கும்? அதை மட்டும் விளக்கமா சொல்லுங்க வாத்தியாரே’’ தனது சந்தேகத்தைக் கேட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ஏரோட்டி.

‘‘எனக்கும் இந்தச் சந்தேகம் இருந்துச்சு... சொல்லுங்க வாத்தியாரே’’ ஏரோட்டி கருத்தை வழிமொழிந்தார் காய்கறி. “தனி பட்ஜெட் தாக்கல் பண்றதால பல வழிகள்ல நன்மை இருக்கு. பொது பட்ஜெட்ங்கிறது விவசாயத்துக்கான பொறுப்பை அடுத்தவங்க தோள்ல சுமத்துறது. தனி பட்ஜெட்ங்கிறது பொறுப்பைத் தன்னோட தோள்ல தூக்கி சுமக்குறது. அதனாலதான் தனி பட்ஜெட் வேணும்னு கேக்குறாங்க. இதன் மூலமா நிறைய நன்மைகள் கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘இத்தனை வருஷம் இல்லாம இப்ப முதல்முறையா விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் வர்றதைப் பாராட்டலாம். அதே நேரத்துல அதுல போடக்கூடிய திட்டங்கள் பெயரளவுக்கு இல்லாம ஆக்கபூர்வமா இருக்கணும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘நீ சொல்றதும் சரிதான்யா... இப்பதான் தமிழக அரசு ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா குழு அமைச்சிட்டு இருக்குது. மாநில வளர்ச்சிக்குழு, பொருளாதார ஆலோசனைக்குழுனு அமைச்சிருக்கு. அதுல சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இத்தனை வருஷம் இல்லாம, இப்பதான் அந்தந்தக் குழுவுல அரசியல்வாதிகளைத் தாண்டிச் சிலபேர் உறுப்பினர்களாக்கி இருக்காங்க. அதே மாதிரி விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் போடுற அரசாங்கம், விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்குறவங்க, விவசாயச் சங்கப் பிரதிநிதிகள்னு சிலபேர் கொண்ட குழுவை அறிவிச்சா நல்லா இருக்கும். அப்பதான் விவசாயிகளுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்ப முடியும்’’ என்றார் வாத்தியார்.

.‘‘இருபுறக் கரைகளையும் பலப்படுத்தி, மதகுகளைச் சீரமைத்து முறையாகத் தூர்வாரினாலே, கடைமடையின் எல்லைவரைக்கும் தண்ணீர் போகும்.’’


‘‘அது நடந்தா மகிழ்ச்சிதான் வாத்தியாரே...ஆனா, இப்ப நடந்துகிட்டு இருக்க ஒரு வேலை காரணமா ஆழ்துளைக் கிணறுகள் அழிஞ்சிப்போயிடும்னு கதறுறாங்க தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள். அதையும் கவர்மென்ட் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கணும்’’ என்றார் காய்கறி.

‘‘இதென்னம்மா புதுக்குழப்பம்’’ யோசித்தவாறே கேட்டார் ஏரோட்டி. ‘‘அது ஒரு நீண்டகாலப் பிரச்னை. கல்லணைக் கால்வாயைப் புனரமைக்கணுங்கறது தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளோட நீண்ட நாள் கோரிக்கை. அதுக்கான நிதி ஒதுக்கி இப்ப வேலை நடந்துகிட்டு இருக்குது. இந்த நிலையில கால்வாய்ல சிமென்ட் தளம் அமைக்கணும். அப்பத்தான் எங்க பகுதிவரைக்கும் தண்ணி வரும்னு கடைமடை விவசாயிகள் கேக்குறாங்க. ஆனா, கால்வாய்ல சிமென்ட் தளம் அமைச்சா நிலத்தடி நீர் பாதிக்கப்படும், கிணறுகள் வறண்டு போகும்னு கால்வாய் தலைப்பகுதியில இருக்க விவசாயிகள் சொல்றாங்க. இந்த நிலையில கான்கிரீட் தளம் அமைக்குற பணி நடந்துகிட்டு இருக்குது. இதுக்கு தலைப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்குறாங்க. ஆனா, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்ல இது மாதிரி கான்கிரீட் தள கால்வாய் அமைச்சு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, நீதிமன்றம் தலையிட்டுக் கால்வாய்ல சிமென்ட் தளத்தை எடுக்கச் சொல்லியிருக்காம். அதனால விவசாயிகள் பயப்படுறாங்க. இந்த நிலையில ‘இருபுறக் கரைகளையும் பலப்படுத்தி, மதகுகளைச் சீரமைத்து முறையாகத் தூர்வாரினாலே, கடைமடையின் எல்லைவரைக்கும் தண்ணீர் போகும். நிலத்தடி நீர்மட்டமும் குறையாது’னு நீர்மேலாண்மை வல்லுநர்கள் சொல்றாங்க. இந்த விஷயத்துல அரசாங்கம்தான் தெளிவான முடிவு எடுக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்களாம்’’ பேசி முடித்து மூச்சு வாங்கினார் காய்கறி.

‘‘அரசாங்கம் என்ன செய்யப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்ற வாத்தியார், ‘‘என்ன கண்ணம்மா... குறிப்பிட்ட நேரத்துக்குக் கொண்டுபோனாதான தக்காளியைக் கொடுக்க முடியும்’’ என வாத்தியார் சொல்லவும், ‘‘அட ஆமாம்...பேச்சுல நேரம் போனதே தெரியல. நான் கிளம்புறேன்’’ என்று காய்கறி கிளம்ப, “அப்ப நானும் வீட்டுக்குப் போறேன் ஏகாம்பரம்’’ என வாத்தியாரும் நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism