Published:Updated:

பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிப்பு... விவசாயிகளிடம் பலிக்காத பி.ஜே.பியின் பாச்சா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி

த்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி நாடெங்கும் கோரிக்கை எழுந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளில் நிலவும் கடும் குளிரிலும் தொடர்ந்து 40 நாள்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது விவசாயிகள் போராட்டம். விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 7 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டக் காலத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பிறகு, பேச்சுவார்த்தை தொடங்கியது.

கூடாரங்கள்
கூடாரங்கள்

அந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது, ‘3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்ட பூர்வமாக்க வேண்டும்’ என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

மத்திய அரசு தரப்பில், ‘3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருவாய் உயரும். 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வெளியேறினர். அதனால் 7-ம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெருப்பு மூட்டி குளிர் காயும் விவசாயிகள்
நெருப்பு மூட்டி குளிர் காயும் விவசாயிகள்

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால், ஆளும் பா.ஜ.க அரசுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் அரங்கேறி வருகிறது.

சமீபத்தில், டெல்லி, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்கத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகள் கடும் குளிர், மழையில் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் அமைத்துள்ள கூடாரங்கள் மழையிலிருந்து காத்தாலும், தரையில் தண்ணீர் தேங்குவதால் பெரும்பாலான கூடாரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. விறகுகள், உடைகள் நனைந்து பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். போராட்டக் களத்தில் விவசாயி களுக்கு உதவும் விதமாக மருத்து வர்கள், செவிலியர்கள், முடிதிருத்துபவர்கள் எனப் பலதரப்பினரும் உதவி வருகிறார்கள்.

நல்லா கவுண்டர்
நல்லா கவுண்டர்

டெல்லி சென்று வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டரிடம் பேசினோம். “டெல்லிக்குள் நுழையும் இடங்களில் தடுக்கப்படும் விவசாயிகள் அங்கேயே இருக்கிறார்கள். நாங்கள் போகும்போது 17 கி.மீ தூரம் இருந்தது கூட்டம். நாளுக்கு நாள் அதிகரித்து, கடுமை யான குளிரிலும் 27 கி.மீ தொலைவுக்கு டிராக்டர்களுடன் விவசாயிகள் குவிந்து வருகிறார்கள். இந்தப் போராட்டத்தைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கும் மத்திய அரசு, பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. வேளாண் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற முடிவோடுதான் போராட்டம் நடந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா வரிசையில் இப்போது குஜராத் விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கிறார்கள்.

பொங்கலுக்குப் பிறகு, தமிழக விவசாயிகளின் சார்பில் 100 டிராக்டர்களுடன் போராட்டக் களத்துக்குச் செல்லவிருக்கிறோம். ‘விவசாயம்தான் தனது முதுகெலும்பு’ என்று உலக அரங்கில் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அரசு, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை மட்டம்தட்டும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. பல தரப்பினர் ஆதரவு கொடுத்தும், அரசியல் நோக்கில் வரும் யாரையும் விவசாயிகள் போராட்டத்துக்குள்ளே அனுமதிப்பதில்லை. இந்தக் கொள்கையுடன் இருப்பவர்களைத்தான் பின்னணியில் எதிர்க்கட்சிக்காரர்கள் இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது.

பேச்சுவார்த்தையில்
பேச்சுவார்த்தையில்

இரண்டு நாள்களுக்கு முன்பு வரை, விவசாயிகளுக்குள் பிளவை உண்டாக்கி போராட்டத்தை முடிக்க பா.ஜ.க அரசு முயற்சி செய்தது. அதையும் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார்கள், விவசாயிகள். எத்தனை மாதங்கள் ஆனாலும், விவசாயிகள் பின்வாங்கமாட்டார்கள் என்பது அவர்கள் பேச்சில் தெரிகிறது. மத்திய அரசு விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் வியாபாரி களுக்குச் சாதகமாகவே நடந்துகொள்கிறது. இதுவரை அவர்களுக்கான ஒரு தீர்வை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு