Published:Updated:

கும்கி யானைகள் வந்தும் குறையாத யானைகளின் அட்டகாசம்; அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்!

கும்கி சின்னத்தம்பி

வனத்துறை விரட்டுகிறோம் என்ற பெயரில் யானைக் கூட்டத்தை கோபப்படுத்துகின்றனர். இதனால் மிரண்டுபோன யானைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னிவாடி, ஆத்தூர், பன்றிமலை உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றுகின்றன. மக்களோ பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கும்கி யானைகள் வந்தும் குறையாத யானைகளின் அட்டகாசம்; அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்!

வனத்துறை விரட்டுகிறோம் என்ற பெயரில் யானைக் கூட்டத்தை கோபப்படுத்துகின்றனர். இதனால் மிரண்டுபோன யானைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னிவாடி, ஆத்தூர், பன்றிமலை உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றுகின்றன. மக்களோ பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Published:Updated:
கும்கி சின்னத்தம்பி

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனத்திலிருந்து இறங்கிய யானைக் கூட்டம் விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே கன்னிவாடி வனச்சரக வனப்பாதுகாவலர் சுந்தரம் குட்டை கொம்பன் என்ற யானையை விரட்டியபோது அந்த யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள யானைகளை விரட்ட பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் இருந்து கும்கிகளான கலீம் மற்றும் சின்னத்தம்பி யானைகளை வரவழைத்தனர்.

கன்னிவாடி வனப்பகுதி
கன்னிவாடி வனப்பகுதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மே 1-ம் தேதி வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள் கன்னிவாடி அருகே கோம்பையில் உள்ள முத்துபாண்டி கோயில் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பாச்சலூர், பள்ளத்து கால்வாய், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து பல குழுக்களாக யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் விவசாய பகுதிகளிலும் அட்டகாசம் செய்து வருகின்றன.

முகாமில் குளிக்கும் கும்கி
முகாமில் குளிக்கும் கும்கி

கே.சி.பட்டி பகுதியில் இன்று காலை 9 யானைகள் சுற்றி வந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் தாண்டிக்குடி பகுதியில் யானைக்கூட்டம் வந்ததால் வேலைக்குச் சென்ற ஒருவர் யானையிடமிருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த மரத்தில் ஏறி எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தாண்டிக்குடி பகுதியில் உணவுக்காக விவசாயி ஒருவரின் வீட்டை உடைத்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யானைகளின் அட்டகாசத்தால் கொடைக்கானல் கீழ்மலைக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து யானைக் கூட்டத்தை வனத்தினுள் விரட்டி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கும்கி கலீம்
கும்கி கலீம்

இதுகுறித்து பண்ணைப்பட்டியைச் சேர்ந்த மா விவசாயி வடிவேலிடம் பேசியபோது, ``யானைக் கூட்டம் மலையடிவார கிழக்குப் பகுதியில் உள்ள தென்னை, மா உள்ளிட்டவற்றை அழித்து வருகிறது. இதோடு வீடுகளை உடைத்து அரிசி, உப்பு உள்ளிட்டவற்றையும் சாப்பிட்டு வருகின்றன. ஆனால், வனத்துறையினரோ கும்கிகளை அழைத்து வந்து மேற்குபகுதியான முத்துபாண்டி கோயில் அருகே முகாம் அமைத்துள்ளனர். கடந்த 12 நாள்களாகக் கும்கிகளுக்கு நாளொன்றுக்கு 50,000 ரூபாயும், அங்குள்ள குழுவுக்கு 50,000 ரூபாயும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். கும்கிகள் வரவழைக்கப்பட்ட பிறகும்கூட முகாம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகே கூட விளைநிலத்தில் புகுந்து 9 யானைகள் அட்டகாசம் செய்தன. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை.

விவசாயி வடிவேல்
விவசாயி வடிவேல்

கடந்த 3 ஆண்டுகளில் இதேபகுதியைச் சேர்ந்த 3 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர். பல ஏக்கர் தென்னை, மா மரங்கள் சேதமடைந்தன. அப்போதெல்லாம் வனத்துறையினரிடம் யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அண்மையில் வனத்துறையைச் சேர்ந்த ஒருவர் இறந்த பிறகே கும்கிகளை அழைத்து வந்துள்ளனர். இதுவும் வெறும் கண்துடைப்பாவே உள்ளது.

தோட்டங்களில் யானைச் சாணம்
தோட்டங்களில் யானைச் சாணம்

இந்த வனப்பகுதி பெரும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் வனத்துக்குள் யானைகளை விரட்ட முடியாத நிலை உள்ளது. ஆனால், வனத்துறை விரட்டுகிறோம் என்ற பெயரில் யானைக் கூட்டத்தைக் கோபப்படுத்துகின்றனர். இதனால் மிரண்டுபோன யானைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னிவாடி, ஆத்தூர், பன்றிமலை உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்'' என்றார்.

யானைகள் சேதப்படுத்தியுள்ள மா தோட்டம்
யானைகள் சேதப்படுத்தியுள்ள மா தோட்டம்

முகாமில் உள்ள வனத்துறையினரிடம் பேசியபோது, ``கடந்த இரண்டு வாரங்களாக யானைகளை கண்காணித்து வருகிறோம். மனிதர்களைத் தாக்குவது, அரிசிக்காக வீடுகளை சேதப்படுத்துவது என அட்டகாசம் செய்துகொண்டிருந்த குட்டைக் கொம்பனை காணவில்லை. அதைத் தேடுவதற்கு இரு குழுக்கள் அமைத்துள்ளோம். அந்தக் குழுக்கள் குட்டைக் கொம்பனைத் தேடி வருகின்றன. 8 யானைகளை ஆடலூர் வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளோம். தற்போது கும்கிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism