Published:Updated:

தஞ்சை: `மழை பெய்தும் பயனில்லை!’ - ஏரி சீரமைப்பு முறைகேட்டால் கலங்கும் விவசாயிகள்

ஆச்சான் ஏரியில் விவசாயிகள் போராட்டம்
ஆச்சான் ஏரியில் விவசாயிகள் போராட்டம்

``சீரமைப்பு பணிக்காக உடைக்கப்பட்ட மதகு, இவ்வளவு நாள்களாகியும் கட்டப்படாததால், மழைநீரை இந்த ஏரியில் சேமிக்க முடியலை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் இருக்கோம்.”

நேரடி ஆற்றுப்பாசனம் மற்றும் நிலத்தடிநீருக்கு வாய்ப்பில்லாத விவசாயிகளுக்கு, ஏரி, குளங்கள்தான் முக்கிய நீராதாரமாக இருந்து வாழ்வளிக்கிறது. இதனால்தான் மானாவரி பகுதிகளில் மழைநீரை தேக்கி வைத்து, விவசாயத்துக்குப் பயன்படுத்த, மன்னர்கள் காலத்தில் ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பழங்கால ஏரிகள் அதிகம். இப்பகுதி விவசாயிகளைப் பொறுத்தவரை இதுதான் இவர்களின் உயிர் மூச்சு. இங்குள்ள ஏரிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதால், இப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளாக, விவசாயம் முடங்கியதால், வேதனையில் தவிக்கிறார்கள்.

காவிரி உரிமை மீட்ப்பு குழு
காவிரி உரிமை மீட்ப்பு குழு

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி விவசாயிகள்,``இந்தப் பகுதியில் உள்ள சூக்குடி ஏரி, முனியன் ஏரி, ஆச்சான் ஏரி, நாகையா ஏரி, கட்டினி ஏரி, காதாட்டி ஏரி உள்ளிட்ட 7 ஏரிகளையும் நம்பிதான் இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையே இருக்கு. நபார்டு வங்கியின் நிதியுதவியில் 2.32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த ஏழு ஏரிகளையும் சீரமைப்பதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஏரியையும் தனித் தனி ஒப்பந்ததாரர்கள்கிட்ட ஒப்படைத்தால், தாமதமாகும்னு சொல்லிதான், தொகுப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரே ஒப்பந்ததாரர்கிட்ட, இந்தப் பணிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்படைச்சாங்க. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கவுள்ள பெரும்பாலான ஏரிகள்ல சீரமைப்பு பணிகள் நிறைவடையவே இல்லை. செங்கிப்பட்டியில் உள்ள சூக்குடி ஏரியில் மட்டும்தான் ஓரளவுக்கு பணிகள் முடிவடைஞ்சிருக்கு. மற்ற ஏரிகள்ல திட்ட மதிப்பிட்டபடி சொன்ன அளவுக்கு வேலைகள் நடக்கலை. குறிப்பாக, ஆச்சாம்பட்டியில் உள்ள ஆச்சான் ஏரியில், கரைகள் அகலப்படுத்துதல் மற்றும் உயரப்படுத்தும் பணிகள் நேர்மையாக நடக்கலை. சீரமைப்பு பணிக்காக உடைக்கப்பட்ட மதகு, இவ்வளவு நாள்களாகியும் கட்டப்படாததால், மழைநீரை இந்த ஏரியில் சேமிக்க முடியலை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் இருக்கோம்” என வேதனையோடு தெரிவித்தார்கள்.

இதில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் வலியுறுத்துகிறார்கள். இதுகுறித்து பேசிய இதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``ஆச்சான் ஏரியின் சீரமைப்புக்கு 40.26 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீடு. ஆனால், இதில் சொல்லப்பட்டுள்ள அளவுக்கு பணிகள் முழுமையாக நடக்கலை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே பணிகள் நிறைவடைஞ்சிருக்கணும். இன்னும் நிறைய வேலைகள் மிச்சமிருக்கு. ஆனால், பணிகள் நிறைவடைஞ்சிட்டதாகச் சொல்லி, இயந்திரங்களையும் வாகனங்களையும் இங்கிருந்து ஒப்பந்ததாரர் கொண்டு போகப் பார்த்தார். ஆனால், ஊர்மக்கள் சிலர் மறியல் செஞ்சி தடுத்துட்டாங்க. உரிய காலத்துக்குள்ளும், முழுமையாகவும் பணிகளைச் செய்ய வைப்பது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு. `காலதாமத்துக்காக ஒப்பந்ததாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிருச்சிருக்கோம்’னு அதிகாரிகள் சொல்றாங்க.

இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இரண்டு ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் தேக்க முடியாததால், பல நூறு ஏக்கர்ல நடக்க வேண்டிய விவசாயம் முடங்கிக்கிடக்கு. விவாயிகளுக்கு ஏற்பட்ட வாழ்வாதார இழப்பை எப்படி ஈடு செய்ய முடியும்” எனக் கேள்வியெழுப்பினார்.

`சச்சின் உள்ளிட்ட செலிபிரிட்டிகளுக்கு விற்கப்பட்ட ஏரி நிலம்?’ - அதிரவைத்த ரியல் எஸ்டேட் மோசடி

குற்றச்சாட்டுகள் குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திலீபனிடம் கேட்டபோது,``பணிகள் இப்பவும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. இதுல ஏற்பட்ட தாமதத்துக்காக, ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிச்சிருக்கோம். திட்டமதிப்பீட்டில் சொன்னபடி, பெரும்பாலான பணிகள் நேர்மையாகச் செய்யப்பட்டிருக்கு. இதில் எந்த ஒரு முறைகேடும் நடக்கலை. மிச்சமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு