Published:Updated:

பிரதம மந்திரி கிசான் சம்மான் 1,000 கோடி ஊழல்!

விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயி

பணத்தை அள்ளிய அதிகாரிகள் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள்..!

பிரச்னை

சிறு, குறு ஏழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டம், தமிழில் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒரு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நான்கு மாத இடைவெளியில் தலா 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரதம மந்திரி கிசான் சம்மான் 1,000 கோடி ஊழல்!

இந்நிலையில்தான் விவசாயமே செய்யாத நபர்களும் இத்திட்டத்தில் பணம் பெறுவதாகப் புகார்கள் எழுந்தன. இத்திட்டத்தில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுத் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பரவலாக விவசாயிகளுக்குச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனடிப்படையில் கடந்த 2019 மே மாதத்துக்குப் பிறகு, வருவாய்த் துறைக்குப் பதிலாக வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேளாண் அதிகாரிகளே பயனாளிகளைத் தேர்வு செய்யலாமென விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு ரகசிய குறியீட்டு எண்ணும் வழங்கப்பட்டது. இந்த விதிமுறை திருத்தம்தான் முறைகேடுகளுக்குக் காரணமாக அமைந்தது.

பல மாவட்டங்களில் வேளாண் அதிகாரிகள், தனியார் நெட் சென்டர்களின் உதவியுடன் ‘ஆதார் மற்றும் ரேஷன் அட்டையுடன் தலைக்கு ரூ.500 கமிஷன் கொடுத்தால் பிரதமரின் பணம் வரும். குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அனைவருக்கும் பணம் நிச்சயம். எங்களுக்கு ரூ.500, உங்களுக்கு ரூ.1,500” எனப் புரோக்கர்கள் மூலம் ஆட்களைச் சேர்த்திருக்கிறார்கள். கடலூர் மாவட்டம், காரைக்காடு ஊராட்சி பிள்ளையார்மேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் உள்ள 300 பேர்களின் பெயர்களை ஆதார் அட்டையின் அடிப்படையில் இவராகவே விண்ணப்பித்துவிட்டு வீடு வீடாகச் சென்று ரூ.1,000 கமிஷன் கேட்டிருக்கிறார். அப்போது எழுந்த பிரச்னையின் அடிப்படையில்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவசாயப் பிரதிநிதிகள்மூலம் தகவலை அறிந்த வேளாண்துறை இயக்குநர் ககன்தீப் சிங் பேடி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழுக்களை அமைத்திருக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி, 1.4.2020 தேதிக்குப் பிறகு, கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் தாமாக இணைந்த 80,040 பேரின் ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வருவாய் மற்றும் வேளாண் அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்திருக்கின்றனர்.

ககன்தீப் சிங் பேடி, கோ.மாதவன், சுந்தர விமல்நாதன்
ககன்தீப் சிங் பேடி, கோ.மாதவன், சுந்தர விமல்நாதன்

5 லட்சம் நபர்கள்! 1,000 கோடி ஊழல்!

இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களிலும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளன. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.மாதவன், “திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநரின் ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்திதான் முறைகேடுகள் நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தத் திட்டம் வருவாய்த்துறையிடமிருந்து நெட் சென்டர்களுக்குக் கைமாறியதுதான் இவ்வளவு முறைகேடுகளுக்கும் காரணம். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தமிழகம் முழுக்கச் சுமார் 5 லட்சம் பெயர்கள் போலியாகப் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகப் பணம் பெற்றிருக் கிறார்கள். தமிழகம் முழுவதும் இது நடைபெற்றாலும் விழுப்புரம், கடலூர், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், ஈரோடு தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில்தான் அதிகளவில் போலி நபர்கள் பதிவு செய்யப்பட்டிருக் கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.79 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் பயனடைந்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, சுமார் 60,000 பேர் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தெந்த நெட் சென்டர்களில் போலிப்பெயர்கள் பதிவு செய்யப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் அந்த மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள், நெட் சென்டர் உரிமையாளர்கள், புரோக்கர்கள் எனச் சுமார் 1,000 பேருக்கு மேல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால் சி.பி.சி.ஐ.டி விசாரணை வைத்தால்தான் உண்மை தெரியவரும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.பி.ஐ விசாரணை தேவை

இதுகுறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “இந்தியாவில் வேறு எங்குமே இதுபோன்ற முறைகேடு நடைபெறவில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாயோடு, தெலங்கானாவில், மாநில அரசின் பங்களிப்பாகக் கூடுதலாக 4,000 சேர்த்து, ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆந்திராவில் விவசாயிகள் உதவித்தொகையாக 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் முறைகேடு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் நடந்துள்ளது.

விவசாயி
விவசாயி

இந்த முறைகேட்டில் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். எனவே, சி.பி.ஐ விசாரித்தால்தான் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கண்டுபிடித்துத் தண்டிக்க முடியும். பணத்தையும் மீட்க முடியும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், சி.பி.ஐ விசாரணைக்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக, எங்களது சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மட்டுமே இந்த முறைகேடு நடந்துள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக, அங்குள்ள விவசாயிகளிடமிருந்து தகவல் வருகிறது. எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டம், நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் விவசாயிகளுக்குக் கிடைக்காமல் இருக்கிறது. குறிப்பாக, குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் இது வழங்கப்பட வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டங்களெல்லாம் நேர்மையாக நடை பெறுகிறது. அதற்கான ஆவணங்களைக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறையினரே, பயனாளிகளைத் தேர்வு செய்கிறார்கள். அதே நடைமுறை இதிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தற்போது நடைபெற்றுள்ள முறைகேடு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். இதுகுறித்துத் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏன் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுவில்லை? விவசாயிகளுக்கான திட்டம்தானே... எது நடந்தால் நமக்கென்ன என வேடிக்கை பார்க்கிறார்களா” என ஆதங்கப்பட்டார்.

நடவடிக்கை நிச்சயம்!

துகுறித்துத் தமிழக அரசின் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடியைத் தொடர்புகொண்டோம். “உண்மையான விவசாயிகளுக்குப் பணம் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேபோலப் போலியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெயர்களை நீக்குவதுடன், அதற்குத் துணை போன அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். 10 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர்களும் உறுதியளித்திருக்கிறார்கள்” என்றார்.

ஆய்வு முடிவில்தான் உண்மை தெரியும்!

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசியபோது, “விவசாயிகளே நேரடியாக விண்ணப்பிக்கும் திட்டம் இது. இதில் அதிகாரிகளுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ தொடர்பு கிடையாது. முறைகேடு நடந்திருப்பதாக விவசாயச் சங்கங்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். பதிவு செய்துள்ள பயனாளர்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களுக்கு வேளாண்துறைச் செயலரும் இயக்குநரும் உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆய்வுப் பணியின் முடிவில்தான் தவறு நடந்தது உண்மையா என்று தெரியவரும்” என்று முடித்துக் கொண்டார்.