Published:Updated:

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சல்யூட்... விவசாயிகளுக்கு கெட் அவுட்! - வங்கிகள் செய்வது சரிதானா?

"வங்கிகள்ல பயிர்க்கடன் கிடைச்சாதான், நெல் சாகுபடி செய்ய முடியும். கிடைக்கலைனா, ஒண்ணு... சாகுபடியைக் கைவிடணும். இல்லைனா, கந்து வட்டிக்கடன்காரங்கிட்டதான் போயி நின்னாகணும். கடந்த சாகுபடிக் காலங்கள்ல அதுதான் நடந்துச்சி."

விவசாயி
விவசாயி

விவசாய உற்பத்தி சீராக நடைபெற்றால்தான் நாட்டின் பொருளாதார சக்கரம் சீராகச் சுழலும். காலத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடியைச் சரியான பருவத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகவும், இதற்கான செலவுகளுக்கு விவசாயிகள் எந்த விதத்திலும் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும்தான் வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்கும் கொள்கை உருவாக்கப்பட்டது.

விவசாயி
விவசாயி
படங்கள்: ம..அரவிந்த்
‘கிடைச்சிடுச்சு... ஆனா கிடைக்கலை...’ பலனளிக்காத பயிர்க் காப்பீடு!

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் தற்போது அதைக் காற்றில் பறக்கவிட்டு, தங்களைப் புறக்கணிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

3 ஆண்டுகளாகப் பயிர்க் கடன் கிடைக்காமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆதங்கப்படுகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் விவசாய சங்கங்கள் இறங்கியுள்ளன. தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன்,

சுகுமாறன்
சுகுமாறன்

‘’மாநில அரசோட கட்டுப்பாட்டுல உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள்லயும் பயிர்க் கடன் கிடைக்கலை... தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள்லயும் கடன் கிடைக்கலை. மூணு வருஷமா இதே நிலை தொடர்ந்துக்கிட்டிருக்கு. கண்துடைப்புக்காக ஒரு சிலருக்கு மட்டும் கடன் கொடுக்குறாங்க. மத்திய, மாநில அரசுகள் உடனடியா இந்தப் பிரச்னையில தலையிட்டே ஆகணும். இயற்கை இடர்பாடுகளால, நாலஞ்சு வருசமா இங்க விவசாயம் வெற்றிகரமா நடக்கலை. தொடர்ச்சியா வருவாய் இழப்பை சந்திச்சதனால, அன்றாட குடும்பச் செலவுகளுக்கே விவசாயிகள் திணறிக்கிட்டிருக்காங்க.

இந்தச் சூழ்நிலையில, வங்கிகள்ல பயிர்க் கடன் கிடைச்சாதான், நெல் சாகுபடி செய்ய முடியும். இது கிடைக்கலைனா, ஒண்ணு... சாகுபடியைக் கைவிடணும், இல்லைனா, கந்து வட்டிக் கடன்காரங்கிட்டதான் போயி நின்னாகணும். கடந்த சாகுபடிக் காலங்கள்ல அதுதான் நடந்துச்சு. இந்த வருஷம் இயற்கையோட கொடையால, நல்லா மழை பேஞ்சிருக்கு. அதனால, சம்பா நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமா இருக்காங்க. ஆனா, இதுக்கான செலவுகளுக்கு கையில பணம் இல்லை. பயிர்க்கடன் கொடுக்க, வங்கி அதிகாரிகள் மறுக்குறாங்க. ஏற்கெனவே கடன் வாங்கி, தவணை நிலுவையில இருக்குற விவசாயிகளுக்குப் புதுக் கடன் கொடுக்க மாட்டோம்னு சொல்றாங்க. இது, தமிழக அரசின் அரசாணைக்கு எதிரானது.

விவசாயி
விவசாயி
படங்கள்: ம.அரவிந்த்

2017-ம் வருஷம் தமிழ்நாட்டுல கடுமையான வறட்சி ஏற்பட்டப்போ, சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களையும் தமிழக அரசு வறட்சிப் பகுதியா அறிவிச்சுது. அதோட, வங்கிகள்ல விவசாயிகள் வாங்கியிருக்கக்கூடிய குறுகிய கால கடன்கள், மத்திய கால கடன்களாகக் கருதப்படும். கடன் நிலுவைத் தொகையை மூன்று ஆண்டுகளில் சம தவணையாக திருப்பிச் செலுத்தலாம்னு அரசாணை வெளியிடப்பட்டது. அதனால, விவசாயிகள் செலுத்திக்கிட்டு இருக்குற தவணைகள், நிலுவையாகக் கருதாமல், நடைமுறைக் கடனாகக் கருதப்பட்டு, அதே விவசாயிக்கு, அதே புல எண்ணுக்குப் புதிய பயிர்க் கடன் கிடைக்கவும் அந்த அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்துனாலதான், தமிழக அரசு குறுகிய கால கடன்களை மத்திய கால கடன்களாகவே அறிவிச்சி அரசாணை வெளிட்டுசு. ஆனா, வங்கி அதிகாரிகள் அந்த அரசாணையை மதிக்கவே இல்லை. விவசாயிகளைத் தட்டிக்கழிக்க பலவிதமான சூழ்ச்சிகளைக் கடைபிடுக்கிறாங்க. பயிர்க் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும்கூட, புதுக் கடன் கிடைக்கிறது பெரும்பாடா இருக்கு.

Vikatan

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரைக்கும் பல விவசாயிகள் குத்தகை நிலங்கள்லதான் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. கோயில், தனியார், அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்கள் இது. குத்தகை நிலங்களாக இருந்தாலும்கூட, இதில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கொடுக்கணும்னு விதிமுறை இருக்கு. ஒரு குறிப்பிட்ட நிலத்துல யார் சாகுபடி செய்றாங்கங்கிறதுக்கான சான்றிதழைக் கிராம நிர்வாக அலுவலர் கொடுப்பார். சாகுபடியாளர், அதை வங்கியில கொடுத்து பயிர்க் கடன் வாங்குறதுதான் வழக்கம். ஆனால், வருவாய்த்துறை இப்ப புதுசா ஒரு நடைமுறையைக் கடைபிடிக்குது. சாகுபடியாளார், நிலத்தின் உரிமையாளர்கிட்ட இருந்து கையெழுத்து வாங்கிக்கிட்டு வந்தால்தான், கிராம நிர்வாக அலுவலர் சான்று கொடுக்கணும்னு விதிமுறை உருவாக்கப்பட்டிருக்கு. இது சாத்தியமே இல்லை. இதுல ஏகப்பட்ட சவால்கள் இருக்கு. விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கொடுக்காமல் தவிர்க்க, அதிகாரிகள் விதவிதமா யோசிக்கிறாங்க.

டெல்டா மாவட்டங்கள்ல, நிர்வாகச் சீர்கேடு அதிகமாகிக்கிட்டே இருக்கு. இதனால்தான் விவசாயிகளுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பயிர் இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்காமல் போயிடுச்சு. இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துட்டோம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லுது. ஆனா, அது விவசாயிகளுக்கு வந்து சேரலை. நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கோம். இப்ப பயிர்க் கடனுக்காகவும் நீதிமன்றத்துல வழக்கு தொடரப்போறோம்” என்றார்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

இக்குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசியபோது, ‘’தகுதியுள்ள விவசாயிகள் எல்லாருக்குமே பயிர்க் கடன் கொடுக்கப்பட்டிருக்கு. ஒரு சிலர் விடுபட்டிருந்தால், அவங்களுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை நமது வங்கிகள் வாரி வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வாராக்கடனாகவே போய்விடுகின்றன. ஆனால், விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதென்றால் மட்டும், ஏனோ வங்கிகளுக்கு கசக்கிறது.