Published:Updated:

வெங்காயம், முருங்கையை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்

மானியம்

பிரீமியம் ஸ்டோரி
ந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெறவிருந்த வேளாண் மானியக் கோரிக்கை குறித்த விவாதம், கொரோனோ பரவல் காரணமாக மார்ச் 23-ம் தேதி நடைபெற்றது.

அதில் தமிழக வேளாண்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

வெங்காயம்
வெங்காயம்
 • அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து உருவாகும் விவசாயக்குழுக்களுக்கு 2020-21-ம் ஆண்டில் சமுதாய ஆழ்துளைக் குழாய் கிணறு, பம்பு செட்டுகளுடன்கூடிய நுண்ணீர்ப் பாசன வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும். வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படாமலிருக்க, விவசாயிகள் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 • காய்கறிச் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஆர்வலர்குழு மற்றும் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு 150 காய்கறிச் சேகரிப்பு மையங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் 4 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

முருங்கை
முருங்கை
 • உழவர்-உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருள்களுக்கு சென்னையில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்த, சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் உழவர்-உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான வர்த்தக மையம் 15 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

 • தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து வெங்காயம் கிடைக்கும் வகையில், வெங்காயச் சாகுபடிப் பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். முருங்கைச் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.

 • விவசாயிகளுக்குத் தரமான காய்கறி விதைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தொழில் முனைவோர்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ் 330 மெட்ரிக் டன் காய்கறி விதைகளை உற்பத்தி செய்வதற்காக 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 • கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில், கரும்புச் சாகுபடிக்கு ஏற்ற வேளாண் இயந்திரங்களின் வாடகை மையங்கள் 10 இடங்களில் அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

வேளாண் விளைபொருள்களின் தரத்தை மேம்படுத்தி மதிப்புக் கூட்டுவதற்காக, பருப்பு உடைக்கும் சிறிய இயந்திரங்கள், சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய்ச் செக்குகள், பழம், காய்கறிகள் கழுவும் இயந்திரங்கள், அரவை இயந்திரங்கள், சுத்தப்படுத்தித் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகள் போன்ற அறுவடைக்குப் பின்செய்நேர்த்தித் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் மானியத்தில் விநியோகிப்பதற்காக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 • குறைந்த போக்குவரத்துச் செலவில், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், குளிர்ப்பதன மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இனிவரும் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தைச் சார்ந்த சந்தையாக அறிவிக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள், போக்குவரத்துச் செலவினங்கள் குறையும் என்பதோடு, விளைபொருள்கள் வீணாவதும் குறையும். மேலும், விளைபொருள்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். தமிழ்நாட்டு மாணவர்களிடையே தோட்டக்கலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் தோட்டக்கலை தொழில்நுட்பங்களைப் பற்றி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்
 • தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்குத் திறமையான வேலையாட்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவிவருகிறது. எனவே, தேங்காய் பறிக்கும் பணி இயந்திரமயமாக்குவதற்கு டிரக் மூலம் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை 10,000 தென்னை விவசாயிகளுக்குச் செயல் விளக்கம் செய்து காண்பிப்பதற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

 • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அடர் நடவு முந்திரிச் சாகுபடி திட்டம் 6 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக இந்த மாவட்டங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மண் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் உழவர் - உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான வர்த்தக மையம் அமைக்கப்படும். தோட்டக்கலை தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 • தமிழக விவசாயிகளுக்குத் தரமான இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு ஆய்வகங்களுக்குப் புதிய கட்டடங்களும், மறுசீரமைப்புப் பணிகளும் 6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயிர்களில் மகசூலை அதிகரிக்க, மண்ணில் கிடைக்காத நிலையிலுள்ள சாம்பல் சத்துகளைக் கரைத்து, பயிருக்கு அளிக்கும் புதிய உயிர் உரம் மற்றும் அசோபாஸ் உயிர் உர உற்பத்திக்காக 1 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கும்.

 • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை பருத்தி விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 • வேளாண்மையில் முக்கியத் தகவல்களை உடனுக்குடன் பெற்று விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காகவும், அரசு, பல்கலைக்கழகம் மற்றும் ஊடகங்களுக்கு வேளாண் சார்ந்த தகவல்களை முழுமையாக வழங்குவதற்கும், ஊடகங்களில் செய்திகளுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், உழவன் செயலி மற்றும் அக்ரிஸ்நெட் வலைதளத்தை மேலும் மேம்படுத்திடவும், பல்வேறு விளம்பர சாதனங்கள் மூலமாக வேளாண் தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் கணினி சார்ந்த தகவல் தொழில்நுட்பத்துடன்கூடிய வேளாண் தகவல் பிரிவு, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும்.

 • விதைப் பரிசோதனை அலுவலர்கள் தங்கள் பணியைச் செம்மையாக மேற்கொள்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் விதைப் பரிசோதனை அலுவலர்களுக்குப் புதிய வாகனம் வழங்குவதற்கு 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு. தற்போது மாநிலத்தில் 29 விதைப் பரிசோதனை நிலையங்கள் ஏழு விதைப் பரிசோதனை அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

 • ஒவ்வொரு விதைப் பரிசோதனை அலுவலரும் 3 முதல் 5 விதைப் பரிசோதனை நிலையங்களை நிர்வகித்து வருகிறார்கள். எனவே, விதைப் பரிசோதனைப் பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு இந்த அலுவலர்களுக்குப் புதிய வாகனங்கள் 56 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்...

உள்ளிட்ட 31 விதமான அறிவிப்புகள் வேளாண் மானியக் கோரிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு