சமூகம்
Published:Updated:

“கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்!”

கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கடலூர்

முதல்வர் அறிவிப்புக்கு எதிராகக் கொதிக்கும் விவசாயிகள்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த கையோடு, ‘கடலூர் மாவட்டத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதுகுறித்து ஆலோசித்ததாக’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டரில் வெளியிட்ட தகவல், கடலூர் மாவட்ட விவசாயிகளைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது.

2017 ஜூலை 19 அன்று தமிழக அரசு வெளியிட்ட குறிப்பாணையில், ‘கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக, 45 கிராமங்களில் 22,938 ஹெக்டேர் விளைநிலங்கள் கையகப்படுத்தப் படும்’ எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்ப தற்காக ‘ஹால்டியா பெட்ரோல் கெமிக்கல்’ நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திரும்பினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஹால்டியா நிறுவனத் தலைவர் புர்னெண்டு சார்ட்டர்ஜி சந்தித்தார். ‘கடலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதுகுறித்து ஆலோசிக்கப் பட்டது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் கொந்தளிப்புக்குக் காரணம்.

விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் மங்கையர் செல்வன், ‘‘2008-ம் ஆண்டு மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது, கடலூரில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு நாகர்ஜுனா நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. அந்த நிறுவனம் பெரும்பாலான பணிகளை முடித்திருந்த நிலையில், ‘தானே’ புயலில் சிக்கி கடும் சேதம் அடைந்தது. அப்போது கிடப்பில் போடப்பட்ட திட்டமே தற்போது மறு உருவம் எடுத்திருக்கிறது.

நாகர்ஜுனா நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைத்தபோது, அந்தப் பகுதியில் ஆலை போக்குவரத்துக்காக சிறிய துறைமுகத்தைக் கட்டியது. உரிய ஆய்வை மேற்கொள்ளாமல் அதைக் கட்டியதால் அந்தப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனால், பெரியகுப்பம் பகுதியில் இருந்த மீனவர்களின் வலை பின்னும் கூடம், வலைகளைக் காயவைக்கும் கூடம் ஆகியவை கடலுக்குள் சென்றன. பேட்டோடை கிராமத்தில் ரேஷன் கடை ஒன்றும், சிறுவர் விளையாட்டு மைதானமும் கடல் அரிப்பில் சிதைந்துவிட்டன. சிறிய அளவில் கட்டப்பட்ட துறைமுகத்துக்கே இப்படியான விளைவுகள் என்றால், அங்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைத்தால் என்ன நடக்கும் எனச் சிந்தித்துப்பாருங்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

மங்கையர் செல்வன் - அருள் செல்வன் - வெங்கடேசன்
மங்கையர் செல்வன் - அருள் செல்வன் - வெங்கடேசன்

கடலூரைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் அருள் செல்வனிடம் பேசினோம். ‘‘கடலூர் மாவட்டம் தைக்கால் தோணித்துறையில் ஆரம்பித்து நாகை மாவட்டம் மாமாக்குடி வரை சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கின்றனர். என்.எல்.சி-யின் திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், என்.ஓ.சி.எல், சர்க்கரை ஆலைகள், சிப்காட் என ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகளால் நிலத்தடிநீர் முழுவதும் மாசடைந்துவிட்டது. மத்திய அரசின் நிலத்தடி நீர்வள ஆதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடிநீர் அபாயகரமானதாக மாறியிருப்பதுடன், அதில் அதிகளவில் கன உலோகம் கலந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 2,000 மடங்கு அதிகம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது, அதிக மாசுபாட்டைக் குறிக்கும் சிவப்புக் குறியீட்டின்கீழ் கடலூர் சிப்காட்டையொட்டியுள்ள கிராமங்களைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசின் நிலத்தடி நீர்வள ஆதார அமைப்பு. நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் தேவைதான். ஆனால், அந்த வளர்ச்சி யாருக்கானது என்பது முக்கியம்’’ என்றார்.

கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், ‘‘பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமையவிருப்பதாக அரசு கூறும் இடத்தில், ஏற்கெனவே நிலத்தடி நீரைச் சேமிக்கும் எண்ணற்ற மணல் குன்றுகள் இருந்தன. அவற்றை அழித்துவிட்டுத்தான் 2,100 ஏக்கரில் நாகர்ஜுனா எண்ணெய் நிறுவனம் கட்டப்பட்டது. இந்த நிலையில், அங்கு வரவிருக்கும் பெட்ரோலிய சுத்தகரிப்பு நிலையத்தால் கடலூர் மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும். அவர்கள் அமைக்கும் ராட்சச மோட்டார்களால் நிலத்தடி நீர் இன்னும் கீழே சென்றுவிடும். தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பல வருடங்களாக நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், விவசாயத்தை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கிறது’’ என்றார் வேதனையுடன்.

“கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்!”

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் பேசினோம். “தமிழக முதல்வரும் ஹால்டியா நிறுவனத்தின் தலைவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி யிருக்கிறதே தவிர, அந்தத் தொழிற்சாலை எந்த இடத்தில் அமையப்போகிறது என்பதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அந்தத் தொழிற்சாலை ஏற்கெனவே உள்ள நாகர்ஜுனா எண்ணெய் நிறுவன வளாகத்தில் செயல்படுத்து வதற்கான வாய்புகள்தான் அதிகம். அப்படி அமைந்தால், அதனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புமில்லை. மேலும், அதுகுறித்த அதிகாரபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை மாவட்ட நிர்வாகத்துக்கு வரவில்லை” என்றார்.