Published:Updated:

டெல்லி முற்றுகை... பீதியில் பிஜேபி அரசு... கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கலக்கும் விவசாயிகள்!

போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
‘மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன’ என்ற ரீதியில் நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்.முக்கியமாக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியை முற்றுகையிட்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் இந்திய விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடங்கி வைத்த இந்தப் போராட்ட பெரு நெருப்பின் வெப்பம் ஐ.நா வரை பரவியிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாம் தமிழர் அமைப்பினர்
நாம் தமிழர் அமைப்பினர்

காந்தி தேசத்தில் அமைதி வழியில் போராடும் விவசாயிகளுக்கு எதிரான அரச வன்முறையை ஏவிவிட்டும் விவசாயிகளை அடக்க முடியவில்லை. விவசாயிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு, மக்கள் வரிப்பணத்தில் போட்ட தேசிய நெடுஞ் சாலைகளை வெட்டிச் சேதப்படுத்தி விவசாயிகளைத் தலைநகருக்குள் நுழையாமல் தடுக்கிறது. ‘மோடி ஜி, இதுதான் விவசாயிகள்மீது உங்கள் அக்கறையா? இதுதான் உங்கள் மனதின் குரலா?’ என்ற ‘சிங்’குகளின் கேள்விக்குப் பதில் இல்லை. டெல்லியின் கடும் குளிர் மற்றும் பல்வேறு உபாதைகளுக்கும் இடையில் வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் இதுவரை மூன்று விவசாயிகள் உயிரிழந்திருக் கிறார்கள்.

பேட்டியளிக்கும் செல்லமுத்து
பேட்டியளிக்கும் செல்லமுத்து

அறவழியில் போராடும் இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ‘விவசாயிகளுக்கு அறவழியில் போராட உரிமையுண்டு’ என அறிக்கை மூலம் ஆதரவு தெரிவித்திருக்கிறது ஐ.நா சபை. ஆனால், இந்தியப் பிரமதர் இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை அழைத்தும், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த ஒப்புதலும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது மத்திய அரசு. விவசாயிகளும் சளைக்காமல் போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் மோ(ச)டி யிடமிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பணியில் முன்கள வீரர்களாகக் களமாடி வருகிறார்கள் விவசாயிகள். ராணுவத்தை வைத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் எல்லையோரங்களில் இருப்பதுபோல வேலி அமைத்திருக்கிறது அரசு. ஆனால், எதற்கும் அஞ்சாமல் டெல்லியில் குவிந்துகொண்டே இருக்கிறார்கள் விவசாயிகள். ‘நீங்கள் என்ன எங்களைத் தடுப்பது, நாங்கள் உங்களைத் தடுக்கிறோம்’ என டெல்லியை ஒட்டு மொத்தமாக முற்றுகையிட்டுள்ளார்கள் விவசாயிகள்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம். ‘‘டெல்லிக்குப் போகும் முக்கியச் சாலைகள் அனைத்திலும் விவசாயிகள் இருக்கிறார்கள். டெல்லியிலிருந்து யாரும் வெளியே வர முடியாது. யாரும் உள்ளே செல்ல முடியாது. மிகத் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது போராட்டம். டெல்லியைச் சுற்றி ஒரு லட்சம் டிராக்டர்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துகிறேன் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்த மோடி, அதை நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் இருப்பதையும் பறிப்பதுபோல், 3 சட்டங்களை இயற்றியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மத்திய அரசு தங்கள் பிடிவாதத்தை விட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அதுவரை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள். போராட்டத்தால் டெல்லியை விட்டு யாரும் எங்கும் செல்ல முடியாது. இந்தப் போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் விவசாயிகள் அனுமதிக்கவில்லை. நாங்களும் கட்சி ரீதியாகப் போகவில்லை. தமிழகத் திலிருந்து வந்த உழவர் பாசறை தோழர்களோடு சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம்’’ என்றார்.

உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கு.செல்லமுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘டெல்லியின் மூன்று முக்கியமான சாலைகள் முழுக்க விவசாயிகள் நிறைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாலை யிலும் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு விவசாயிகள் இருக்கிறார்கள். சாலையின் இரண்டு பக்கம் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவிலிருந்து பால், காய்கறிகள், கோதுமை மாவு, தண்ணீர் பாட்டில் என லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. போராட்டத்தில் உள்ள விவசாயிகள் ஒற்றுமையாக இருக் கிறார்கள். அவர்களே சமைத்து, பரிமாறி உண்டு வருகிறார்கள். மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, ‘வேளாண் சட்டங்களில் உங்களுக்கு வேண்டாத ஷரத்துகளைச் சொல்லுங்கள் எடுத்துவிடலாம். கூடுதலாகச் சேர்க்க நினைப்பதைச் சேர்த்து விடலாம்’ என்று சொன்னால் பிரச்னை முடிந்துவிடும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. தங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள்’’ என்றார் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு