Published:Updated:

"மழையால் பாதிக்கப்பட்டோம்; இப்ப உரத் தட்டுப்பாட்டால் தவிக்கிறோம்!"- கையறு நிலையில் டெல்டா விவசாயிகள்

டெல்டா
News
டெல்டா

உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். தங்களது தலையில் காலி உர சாக்குகளை முக்காடுபோல அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக நூதனப் போராட்டமும் நடத்தினர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால், வயல்களில் வெள்ளநீர் தேங்கி, விவசாயிகளை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்த பயிர்களைக் காப்பாற்ற, விவசாயிகள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உயிர்ப்பிக்க, தேவையான உரம் கிடைக்காததால் கையறு நிலையில் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள்
விவசாயிகள்

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்குத் தேவையான உரங்கள் கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் திண்டாடிவருகிறார்கள். வேளாண்மைத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு இதுகுறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான் உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். தங்களது தலையில் காலி உர சாக்குகளை முக்காடுபோல அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக நூதனப் போராட்டமும் நடத்தினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், "கடந்த சில மாதங்களாகவே தமிழக வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இல்லை. இவர்களின் மெத்தனத்தின் காரணமாக, கடந்த குறுவை பட்ட நெற்பயிர்களுக்கு, விவசாயிகள் பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய முடியாத நிலை உருவானது. அதற்கு அடுத்ததாக சம்பா, தாளடி பட்ட நெல் சாகுபடியின் போது, தொடர்ச்சியாக பல நாள்கள் கனமழை பெய்ததால், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதனால் பயிர் இன்ஷூரன்ஸ் செய்வதற்கான காலகெடுவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தோம். அதையும் நிறைவேற்றவில்லை.

சுகுமாறன்
சுகுமாறன்

பயிர் இன்ஷூரன்ஸுக்கு பிரிமியம் செலுத்தக்கூடிய இணையதளத்தில் சர்வர் பிரச்னையாலும் நிறைய விவசாயிகளால், சம்பா நெற்பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய முடியாத நிலை. தற்போது உரத் தட்டுப்பாடும் விவசாயிகளை உலுக்கி எடுக்கிறது. தமிழக வேளாண்மைத்துறை இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கான உரத் தேவையை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தி, ஒதுக்கீட்டைப் பெற்றிருக்க வேண்டும். இதனை ஒழுங்காகச் செய்யாததால்தான் இங்குள்ள விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ”தமிழ்நாட்டுக்குத் தேவையான உரங்களை வழங்குவதில் மத்திய அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால், வேண்டுமென்றே காலதாமதப்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான உரங்கள் துறைமுகங்களில் இறங்கியுள்ளன. இதை மூட்டையாகக் கட்டி பல்வேறு பகுதிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டியதும் மத்திய அரசின் கடமைதான். ஆனால், பல்வேறு காரணங்களால், தொழிலாளர்கள் கிடைக்காததால், இதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது, மாற்றுப்பாடுகளைச் செய்து, விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

வீரசேனன்
வீரசேனன்

ரசாயன உரங்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. முன்பு 1040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், 1700 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இனிமேல் விற்பனை செய்யப்பட உள்ள உரங்களுக்குத்தான். ஆனால், தட்டுப்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி, தனியார் உரக்கடைக்காரர்கள் இப்போதே 1700 ரூபாய்க்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ”டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பிலிருந்து நெற்பயிர்களை மீட்டு வர வேண்டுமெனில் பொட்டாஷ் உரம் மிக அவசியம் தேவைப்படுகிறது. முன்பு 1,040 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது கடுமையாக விலை உயர்த்தப்பட்டு, ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்டாஷ் உரத்தின் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு குறைக்க வேண்டும். இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு உரங்கள் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயம்
விவசாயம்

அதேநேரத்தில் தனியார் உரக் கடைகளில் உரங்களைப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனால் மேலும் கூடுதல் விலை கொடுத்து விவசாயிகள் உரத்தை வாங்கி நெற்பயிரைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர். இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே விவசாயிகளுக்கு தேவையான உரங்களைத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். ரசாயன உரங்களைப் பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, அங்குள்ள உரங்களைப் பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொட்டாஷ் உர விலை உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டுமெனில், உரங்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொட்டாஷ் உரம் இந்த வார இறுதிக்குள் அனைத்துத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இவர், ”தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 4,356 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் முழுவதற்குமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பொட்டாஷ் உரத்தேவை 14,900 டன். தற்போது பொட்டாஷ் உரம் 4,945 டன் இருப்பு உள்ளது.

விவசாயம்
விவசாயம்

36,500 டன் பொட்டாஷ் உரம், இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடித் துறைமுகத்தில் கடந்த 8-ம் தேதியன்று பெறப்பட்டுள்ளது. தற்போது தேவைப்படும் 14,900 டன் ஐபிஎல் பொட்டாஷ் உரம் தூத்துக்குடித் துறைமுகத்தில் சிப்பமிடப்பட்டு, ரயில் மற்றும் லாரி மூலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,795 டன் ஐபிஎல் பொட்டாஷ் உரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.

மொசைக் நிறுவனத்தின் டிசம்பர் ஒதுக்கீடான 3,000 மெ.டன் பொட்டாஷ் உரத்தில், 1,275 மெ.டன் உரம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து திருச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரயில் மூலம் நகர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் அனைத்துத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் பொட்டாஷ் உரம் அனுப்பி வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்காக விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.