Published:Updated:

சம்பா நெல் கொள்முதலில் ஆர்வம் காட்டாத அரசு! - கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்

நெல் வயல்
நெல் வயல்

`வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, உணவு அமைச்சர் காமராஜ் இரண்டு பேருமே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும் கூட, சம்பா நெல் கொள்முதலுக்கான முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படலை’.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி தொடங்கிவிட்டது. ஆனால், இதைக் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு உண்மையான ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இவை தற்போது அறுவடைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இதைக் கொள்முதல் செய்வதற்கான ஆயத்த பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இதனால் தங்களுக்கு பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், ``கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்துல, சம்பா நெல் சாகுபடி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னாடியே முத்தரப்பு கூட்டம் நடத்தி, கொள்முதல் கொள்கை உருவாக்கப்படுவது வழக்கமாக இருந்துச்சு.

விமலநாதன்
விமலநாதன்

அந்தக் கூட்டத்துல வேளாண்மைத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், மூன்று மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்குவாங்க. விவசாயிகளின் ஆலோசனைகளின்படி நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகள் நடக்கும்.

எந்தெந்தக் கிராமங்கள்ல, புதிதாகக் கொள்முதல் நிலையம் திறக்கணும், ஏற்கெனவே உள்ள கொள்முதல் நிலையத்துல, எந்தளவுக்கு கொள்திறனை அதிகரிக்கணும்... இதுமாதிரி இன்னும் பல்வேறு அம்சங்கள் அங்க பேசப்படும். கொள்முதல் நிலைய பணியாளர்களின் முறைகேடுகள், ஊழல் பத்தி பேசப்படும். இதனால் ஓரளவுக்குக் கொள்முதல் ஒழுங்காக நடக்கும். ஆனால் எடப்பாடி, தமிழக முதல்வராக வந்ததுல இருந்தே சம்பா நெல் கொள்முதல் கொள்கைக்கான முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுறதே இல்லை. இதனால் விவசாயிகள் பல பிரச்னைகளைச் சந்திக்கிறாங்க. ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் வரைக்கும் கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள்கிட்ட லஞ்சம் கேட்குறாங்க. ஒரு கிலோவுல இருந்து இரண்டு கிலோ வரைக்கும் நெல்லும் எடுத்துக்குறாங்க. இதுமாதிரி இன்னும் பல பிரச்னைகள்.

Vikatan

சாக்கு இல்லை, இருப்பு வைக்க இடம் இல்லைனு சொல்லி விவசாயிகள் நெல்லை திருப்பி அனுப்புற கொடுமையும் நடக்கும். இதனால் விவசாயிகள், வியாபாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். விவசாயிகள்கிட்ட குறைவான விலைக்கு நெல்லை வாங்கி, அதைக் கொள்முதல் நிலையத்துலயே வியாபாரிகள் வித்துடுவாங்க. சம்பா நெல் அறுவடை தொடங்குவதற்கு முன்னாடியே முத்தரப்பு கூட்டம் நடத்தினால்தான், இதுல உள்ள பிரச்னைகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உணவு அமைச்சர் காமராஜ் இரண்டு பேருமே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும் கூட, சம்பா நெல் கொள்முதலுக்கான முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படலை” என கொந்தளிப்புடன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு