Published:Updated:

வாழைத் தோட்டத்துக்கு நிவாரணம்... சம்பா தொகுப்பு திட்டம் வேண்டும்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

வாழைத் தோட்டத்துக்கு நிவாரணம்... சம்பா தொகுப்பு திட்டம் வேண்டும்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

கடைவீதியில் கூடைகளுடன் அமர்ந்திருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, மிகுந்த கரிசனத்தோடு ‘‘என்ன கண்ணம்மா, இப்படிச் சோர்ந்து போயி உட்கார்ந்துட்ட... சும்மா சுறுசுறுனு சுள்ளெறும்பாட்டம் ஓடியாடி வீடு வீடா போயி யாவாரம் பண்ணுவியே. இப்ப கடையைப் போட்டு உட்கார்ந்திட்டியா. உன்னைச் சொல்லியும் குத்தமில்ல. வயசாயிடுச்சுல்ல’’ என்று சொன்னதும், கடுப்பாகிப்போன காய்கறி, ‘‘என்ன வாத்தியாரய்யா சட்டுனு இப்படியொரு வார்த்தையைச் சொல்லிப்புட்டீங்க, அப்படியென்ன எனக்கு வயசாகிப் போச்சு’’ என முறைத்தார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘‘சரி, போனாப் போகுது விடு கண்ணம்மா’’ எனச் சமாதானம் செய்தார்.

‘‘ஆமா, நீ சொல்றதும் சரிதான் ஏகாம்பரம். ஊருல யாருக்குத்தான் வயசாகல’’ நக்கல் சிரிப்புடன் வாத்தியாரை காய்கறி பார்க்க...

‘‘சரி சரி... இதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது. நாட்டுல நடக்குற நாலு விஷயத்தைப் பத்திப் பேசுவோம்” என அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் வாத்தியார்.

‘‘நெல் சாகுபடி செஞ்சிருக்குற விவசாயிங் களுக்கு இப்ப யூரியா தேவைப்படுதாம். உரக்கடைக்காரங்ககிட்ட போயி கேட்டா, நுண்ணூட்ட உரம் வாங்கினாதான், யூரியா கொடுப்போம்னு அடம்பிடிக்குறாங்களாம். ஆனா, எங்களுக்கு அது தேவையே இல்லை. கூடுதல் செலவுனு விவசாயிங்க சொல்றாங்க’’ என்று வாத்தியார் சொல்ல,

‘‘வயித்து வலினு வைத்தியர்கிட்ட போனாராம் ஒருத்தரு... அவரோட துணைக் குப் போனவருக்கும் வைத்தியம் பார்ப்பேன்னு அடம்பிடிச்சாராம் வைத்தியரு. அந்தக் கதையாதான் இருக்கு. சரி நான் ஒரு சேதி சொல்றேன், கேக்குறீங்களா’’ எனக் குறுக்கிட்டார் காய்கறி.

‘‘திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர்னு தெக்குப் பகுதிகள்ல இந்தப் பருவத்துல மானாவாரியில மக்காச்சோளம், கம்பு, சூரியகாந்தினு இன்னும் சில பயிர்களைச் சாகுபடி செய்வாங்க. இதுக்கு வேளாண் மைத் துறையில மானிய விலையில் விதை, உரமெல்லாம் கொடுக்குறது வழக்கமாம்.

ஆனா, இதைக் காலதாமதப்படுத்தாம இப்பவே கொடுத்தாதான் பயனுள்ளதா இருக்கும். ரெண்டு வருஷமா உரிய நேரத்துல கொடுக்காம, ரொம்ப தாமதமா கொடுத் ததுனால, பயனில்லாம போயிடுச்சு. உரக் கடைக்காரங்களுக்கு ஓஹோனு யாவாரம் நடந்துச்சுனு அந்தப் பகுதி விவசாயிங்க ஆதங்கப்படுறாங்க.

எரிவாயு கிணறு
எரிவாயு கிணறு

ஆமா, வாத்தியாரய்யா, நீங்க தஞ்சாவூரு பக்கம் ஏதோ ஒரு வேலையா போயிட்டு வந்தேன்னு சொன்னீங்களே. இந்த வருஷம் அங்க சீக்கிரமாவே குறுவைக்குத் தண்ணி தொறந்ததுனால, அங்குள்ள விவசாயிங்க ரொம்பவே சந்தோஷமா இருக்காங்களாமே’’ எனக் கேட்டதும்

‘‘ஆத்துல தண்ணி தொறந்துட்டா போதுமா? இந்த வருஷம் மழை ரொம்ப அதிகமா இருக்கும்னு ஒரு பேச்சு இருக்கு. இதனால குறுவை நெல்லுப் பயிர்கள்ல மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்னு டெல்டா விவசாயிங்க கவலைப்படுறாங்க’’ என வாத்தியார் முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள்,

குறுக்கிட்ட ஏரோட்டி, ‘‘அதுக்குத்தான் இன்ஷூரன்ஸ் பண்ணியிருப்பாங்களே’’ என்று கேள்வியெழுப்பினார்.

‘‘போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் குறுவைக்கு இன்ஷூரன்ஸ் திட்டம் செயல் படுத்தப்படலையாம். இதனால அந்தப் பகுதி விவசாயிங்க தமிழக அரசு மேல வருத்தத்துல இருக்காங்க. இன்னொரு முக்கியமான பிரச்னையும் அங்க ஓடிக்கிட்டு இருக்கு. மன்னார்குடி பக்கத்துல பெரியகுடிங்கற ஊர்ல ஓ.என்.ஜி.சி-காரங்க 2013-ல ஒரு எரிவாயு கிணறு தோண்டினாங்களாம். அதுலயிருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு நிறைய எரிவாயு வெளியேறினதால, அதை அப்பவே மூடிட்டாங்களாம்.

இப்ப அந்தக் கிணற்றைத் திறந்து ஹைட்ரோ கார்பன் எடுக்குறதுக்கான முயற்சிகள்ல ஓ.என்.ஜி.சி அதிகாரிங்க இறங்கி யிருக்குறதா அந்தப் பகுதி விவசாயிங்க சொல்றாங்க. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிக்கப்பட்ட பகுதி. அதுமட்டுமல்லாம, நாங்க ஆட்சிக்கு வந்தா விவசாயிங்கள பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்னு வாக்குறுதி கொடுத்துதான் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாரு. இப்ப என்னடான்னா, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வருவாய்த் துறை அதிகாரிங்க முயற்சி பண்ணுறாங்க. இதுல கருத்து சொல்ல ஒண்ணுமே இல்லை. அந்தக் கிணற்றை அனுமதிக்க முடியாதுனு அங்கவுள்ள விவசாயிங்க எதிர்ப்பு தெரிவிச்சதுனால அந்தக் கூட்டத்தை ரத்து செஞ்சிட்டாங்களாம்.

இந்தப் பிரச்னை பெருசா போறதை பார்த்துட்டு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ‘ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்குத் தமிழ்நாட்டுல அனுமதி கிடையாது. அந்தக் கிணற்றை மூடும் நடவடிக்கைகள்ல ஓ.என்.ஜி.சி ஈடுபட்டுருக்கு’னு அறிக்கை வெளியிட்டுயிருக்காரு.

ஆனா, அவரு சொன்னத்துக்குப் பிறகும், மன்னார்குடியில கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியிருக்காங்க. இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு விவசாயிங்க வெளிநடப்பு செஞ்சிட்டாங்களாம் அப்படின்னா, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதனுக்கெல்லாம் தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா? இல்லை, தமிழக அரசுக்கு மன்னார்குடியில உள்ள அதிகாரிங்க கட்டுப்படுறதில்லையானு விவசாயிங்க குழம்பிப் போயி இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘விவசாயிங்களுக்கு ஆறுதலான ஒரு சேதி சொல்றேன் கேக்குறீங்களா’’ என்ற ஏரோட்டி,

“2018-ம் வருஷம் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தாசில்தார், அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு எல்லாம் சேர்ந்து அங்கவுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துறோம் என்ற பேர்ல, துரைசாமிங்கற விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்துல இருந்த ஏராளமான வாழை மரங்களை அழிச்சிட்டாங்களாம்.

அந்த விவசாயி அது சம்பந்தமா மாநில மனித உரிமை ஆணையத்துல வழக்குப் பதிவு பண்ணி இருந்திருக்காரு. அந்த வழக்கை விசாரிச்சு, இப்ப தீர்ப்பு சொன்ன மனித உரிமை ஆணையம், ‘பாதிக்கப்பட்ட விவசாயி துரைசாமிக்கு தமிழக அரசு இன்னும் 4 வாரங்களுக்குள்ளார 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கணும்’னு உத்தரவிட்டுருக்கு’’ என்றார்.

அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார்.

‘‘கடலூர் மாவட்டத்துல வடக்கு ராஜன் வாய்க்கால் ஓடுது. அங்க உள்ள குமாராட்சி, காட்டு மன்னார்கோயில் ஒன்றியங்கள்ல ஏராளமான கிராமங்கள், பாசனத்துக்கு அந்த வாய்க்கால் தண்ணியைத்தான் நம்பி இருக்காம். ஆனா, அந்த வாய்க்கால்ல கடந்த 26 வருஷமா குறுவைக்குத் தண்ணி திறக்குறதே இல்லைனு, அந்தப் பகுதி விவசாயிங்க நொந்து கிடக்குறாங்க. இதுவும் டெல்டா பகுதிதான். தஞ்சாவூர், திருவாரூர் உட்பட மத்த மாவட்டங்களுக்கு எல்லாம் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுது.

ஆனா, எங்களுக்குக் குறுவை சாத்திய மில்லை. பல வருஷமா வருவாய் இழப்பை சந்திச்சுக்கிட்டு இருக்கோம். அதனால எங்களுக்குச் சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டம் கொடுக்கணும்னு குமராட்சி, காட்டுமன்னார் கோயில் பகுதி விவசாயிங்க வலியுறுத்துறாங்க’’ என்றார்.

‘‘நியாயமான கோரிக்கைதான். அந்த விவசாயிங்களுக்குச் சீக்கிரம் நல்லது நடந்தா சந்தோஷம். சரி நான் கிளம்புறேன்’’ என ஏரோட்டி சொல்ல, அன்றைய மாநாடு கலைந்தது.