Published:Updated:

8,000 கிடை மாடுகள்... 1,000 ஏக்கர் விளைநிலங்கள்... 50 நாள்களில் வளப்படுத்த பிரமாண்ட ஏற்பாடு!

கிடை மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
கிடை மாடுகள்

கால்நடை

8,000 கிடை மாடுகள்... 1,000 ஏக்கர் விளைநிலங்கள்... 50 நாள்களில் வளப்படுத்த பிரமாண்ட ஏற்பாடு!

கால்நடை

Published:Updated:
கிடை மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
கிடை மாடுகள்

விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் நாட்டு மாடுகள் மூலம் கிடை அமைத்து மண்ணை வளப்படுத்தும் வழக்கம் தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில்தான் விவசாயிகளிடம் இதன் மகத்துவத்தை நேரடி யாக உணரச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காகவும், கிடை அமைப்பதை மிகவும் வேகமாகப் பரவலாக்கம் செய்வதற்காகவும் ஒரு பிரமாண்ட முயற்சியில் இறங்கியுள்ளார்கள், மதுரையில் செயல்படும் தொழுவம் அமைப்பினர்.

நாட்டு மாடுகள் பாதுகாப்பு, கீதாரிகளின் வாழ்வாதார மேம்பாடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தி ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். பல தலைமுறைகளாகப் பெரும் எண்ணிக்கையில் கிடை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வளர்த்து மேய்ச்சலில் ஈடுபட்டு வரக்கூடிய கீதாரிகள், தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, இது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல் கிறார்கள். மேலும் தமிழகம் முழுவதுமுள்ள கீதாரிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

விளைநிலங்களில் கிடை அமைக்க, விவசாயிகளுக்கும் கீதாரிகளுக்கும் இடையே பாலமாகத் தொழுவம் அமைப்பினர் செயல்படுகிறார்கள். கிடை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் பாலில் மதிப்புக்கூட்டிய பொருள்கள், சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருள்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கீதாரிகளுக்கு வழங்கி வருகிறார்கள். இந்நிலையில்தான் 8,000 கிடை மாடுகளைக் கொண்டு, பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய 1,000 ஏக்கர் நிலத்தில் கிடை அமைக்கும் பிரமாண்ட முயற்சியில் இறங்கியுள்ளார்கள் தொழுவம் அமைப்பினர்.

பெரி.கபிலன்
பெரி.கபிலன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெரி.கபிலன், ‘‘தமிழ்நாட்டுல தொன்று தொட்டு இருந்துகிட்டு இருக்குற மேய்ச்சல் தொழில் இப்ப அழியும் தறுவாயில இருக்கு. இதனால் பாரம்பர்ய கிடை மாடுகள், ஆட்டினங்களோட எண்ணிக்கை வேகமா குறைஞ்சுகிட்டு வருது. இந்தத் தொழிலையே சார்ந்து காலம் காலமாக வாழ்ந்துகிட்டு வரும் கீதாரிகளோட வாழ்க்கையும் ரொம்ப பரிதாபகரமான நிலையில இருக்கு. தங்களோட கால்நடைகளோடு உணர்வு பூர்வமாகக் கலந்து, வாழ்ந்துகிட்டு இருக்குற கீதாரிகளோட அயராத உழைப்புனாலதான் பல தலைமுறைகளாக இங்கவுள்ள விவசாய நிலங்கள் வளமாகி உயிர்ப்புத் தன்மையோடு இருந்துகிட்டு இருக்கு. ஆனா, சமீபகாலமாக இந்தக் கீதாரிகளுக்குச் சமூகத்துல உரிய மரியாதை இல்லாமல் போய்விட்டது. கீதாரிகளைப் பொருளாதார ரீதியாவும் சமூக ரீதியாவும் முன்னேற்றம் அடைய வைக்கணுங் கற நோக்கத்தோடு கீதாரிகளை ஒருங்கிணைக் கக்கூடிய பணிகள்ல ஈடுபட ஆரம்பிச்சோம். குறிப்பா மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல உள்ள 130 கீதாரிகள் எங்களோட தொடர்புல இருக்காங்க. இவங்க எல்லார்கிட்டயும் மொத்தமா சேர்த்து 50,000 கிடை மாடுகள் இருக்கு.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

இவங்க வெவ்வேறு மாவட்டங்கள்ல அங்கங்க கிடை அமைக்குறதுதான் வழக்கம். இந்தச் சூழ்நிலையிலதான் ஒரே சமயத்துல நிறைய விவசாயிகளோட கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தணுங்கற நோக்கத் துனாலயும், ஒரு குறிப்பிட்ட பகுதியில நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை ஒட்டுமொத்தமா வளப்படுத்திக் காட்டணுங்கற எண்ணத்துனாலயும்தான் ஒரு வட்டாரத்தைத் தேர்ந்தெடுத்துப் பரவலா கிடை அமைக்க முடிவு செஞ்சோம். 8,000 புலிக்குளம் மாடுகள் மூலமா 50 நாள்களுக் குள்ள 1,000 ஏக்கர் நிலத்தை வளமாக்க திட்டமிட்டு, இதுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கோம்.

மதுரையைச் சுற்றியுள்ள மலையாளத் தான்பட்டி, பனைக்குளம், இடையப்பட்டி, திருவாதவூர், ஆமூர், இளமனூர், கோழிக்குடி, சின்ன உடைப்பு, மைக்குடி, நிலையூர், உ.வாடிப்பட்டி, கிருஷ்ணாபுரம், குலமங்கலம், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, பாசிங்காபுரம், குமாரம், நகரி ஆகிய கிராமங்கள்ல உள்ள விவசாயிகள்கிட்ட பேசி, இவங்களோட நிலங்கள்ல ஒரே நேரத்தில் கிடை அமைச்சோம். தினமும் சாயந்தரம் ஆறரை மணியில இருந்து மறுநாள் காலையில ஒன்பதரை மணி வரைக்கும் வயல்கள்ல கிடை இருக்கும். இப்படியே அடுத்தடுத்த வயல்கள்ல கிடை போடுவோம். மாடுகளோட கழிவுகளால மண்ணு நல்லா வளமாகி, பயிர்கள் ஆரோக்கியமா வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள்லயும் சாலையோரங்கள்லயும் காலை ஒன்பதரை மணியில இருந்து சாயந்தரம் ஆறரை மணி வரைக்கும் இந்த மாடுகள் மேய்ச்சல்ல இருக்குறதுனால பல்லுயிர் பெருக்கத்துக்கும் விதைப் பரவலுக்கும் உறுதுணையா இருக்குங்க. காடுகள், மலைப்பகுதிகள்ல தீ பரவாமல் தடுக்குறதுக்கு மேய்ச்சல் தொழில் மறைமுகமாகப் பயன்படுது. ஆனா, காலம் காலமாக மலைப்பகுதிகள்ல மேய்ச்சல்ல இருந்துகிட்டு இருந்த மலைமாடுகளை, இப்ப அங்க அனுமதிக்கக் கூடாதுனு சிலர் நீதிமன்றம் மூலம் தடை வாங்கியிருக்குறது வேதனையான விஷயம்.

ஒரு மாவட்டத்துக்கு 10,000 கிடை மாடுகள்

விவசாய நிலங்கள்ல கிடை அமைக் குறதையும், மேய்ச்சலையும் இயற்கைக்கு உதவக்கூடிய அறிவார்ந்த தொழிலாகப் பார்த்து மத்திய, மாநில அரசுகள் கீதாரி களுக்கு உதவி செய்யணும். ஒவ்வொரு மாவட்டத்துலயும் மேய்ச்சலுக்குச் செல்லக் கூடிய நாட்டு மாடுகள் 10,000 இருந்தால் போதும்; ரசாயன உரத்தால் மலடாகிப்போன மண்ணைச் சீக்கிரமே வளப்படுத்திடலாம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, இங்கவுள்ள எல்லாத் தொழில்களுக்கும் ஏதோ ஒரு வகையில அரசாங்கத்தோட உதவிகள் கிடைச்சது. ஆனா, மேய்ச்சல் தொழில்ல உள்ளவங்களுக்குத்தான் அரசாங்கத்தோட எந்த ஒரு உதவியுமே கிடைக்கலை. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நன்னமை செய்ய, இயல்பா அமைஞ்ச மேய்ச்சல் தொழில் அழிஞ்சிடாம காப்பாத்தி யாகணும். இல்லைனா கோடிக்கணக் கான ரூபாய் கொட்டி செலவு செஞ்சாலும், இந்த மண் வளத்தை மறுபடியும் உண்டாக்க முடியாது. இதனாலதான் எங்களோட தொழுவம் அமைப்புத் தீவிரமா செயல்பட்டுக்கிட்டு இருக்கு.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

எங்களோட செயல்பாடுகளைப் பத்தி கேள்விப்பட்டு, வெளிமாநிலங்கள்ல இருந்தும் கூட எங்களைத் தொடர்பு கொள்றாங்க. மேய்ச்சல் கால்நடைகள் தொடர்பா செயல் படக்கூடிய ஐ.நா சார்பு அமைப்புல எங்க ளோட தொழுவம் அமைப்பும் இணைஞ்சு செயல்பட்டுக்கிட்டு இருக்கு. கிடை அமைக் குறதுக்கான நாட்டு மாடுகளைப் பண்ணையில வச்சு வளர்த்தா, உரிய பலன் கிடைக்காது. மேய்ச்சல் தொழிலுக்குச் சமூக மரியாதையும் சட்டரீதியான அங்கீகாரமும் இருந்தாதான் இந்த மாடுகள் எதிர்காலத்துலயும் நிலைச் சிருக்கும். இதுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கிட்டே இருக்கோம். நபார்டு வங்கியின் உதவியோட, கீதாரிகளோட பொருளாதாரத்தை வளர்த்தெடுக் குறதுக்கான முயற்சியிலயும் ஈடுபட்டுருக்கோம். இதுக்காகத் தொழுவம் உற்பத்தியாளர் குழுவை உருவாக்கி யிருக்கோம்’’ என்றார்.

லிங்கம்
லிங்கம்

இந்தப் பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில் கிடை அமைத்துள்ள கீதாரி லிங்கம் என்பவரிடம் பேசியபோது, ‘‘கிடை அமர்த்த ஒவ்வொரு ஊரா சுத்தி வர்றோம். ஆனா, இது மூலமா எங்களோட உழைப்புக்கேத்த லாபம் கிடைக்குறதில்லை. எங்களை யாரும் மதிக்குறதும் இல்லை. நாடோடி மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்குற எங்களுக்கு அரசு உதவி செய்யணும்.

இப்ப தொழுவம் அமைப்பினர் எங்களுக்கு வழிகாட்டுறாங்க. அவங்க மூலமா கிடை அமைச்சுட்டு வர்றோம். பால், சாணம், சிறுநீருக்கு நல்ல விலை கிடைக்குது. நல்ல உணவுப் பொருளை விளைவிக்க மண்ணு நல்லாருக்கணும். அதுக்கு நாட்டு மாடு கிடை அவசியங்கறதை உணர்ந்து அரசாங்கமும் விவசாயிகளும் செயல்படணும்’’ என்றார்.

தொழுவம் அமைப்பினர்
தொழுவம் அமைப்பினர்உண்மையிலேயே போற்றுதலுக்கும் வரவேற்புக்கும் உரியதுமான முயற்சி இது. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தைக் காத்துநிற்கும் விஷயங்களில், கிடைபோடுதலுக்கு மிகமிக முக்கியமான பங்கிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே வந்துவிட்டது கிடை. இது திட்டமிட்டே செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மாழ்வார் போன்ற பலரும் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். பால் உற்பத்தி பெருக்கம் என்கிற பெயரில் வெளிநாட்டு மாடுகளை இறக்குமதி செய்ததாலும், ரசாயன உரத்தை விவசாயிகளின் தலையில் கொட்டி லாபம் பார்க்கவேண்டும் என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறியாலும் திட்டமிட்டே நாட்டுமாடுகள் அழிக்கப்பட்டன. இந்த உண்மை தெரியாமல் விவசாயிகளும் சிக்கிக்கொண்டுவிட்டனர். இனியாவது விவசாயிகள் விழித்துக்கொண்டு கிடை போடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல அரசாங்கமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். கிடைபோடுவது தொடர்பாக அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் விவசாயிகள், விவசாயம் செய்வதைதான் அரசும் விரும்புகிறது. மண்ணை வளப்படுத்திட இதுவும் நல்ல விஷயம்தான். அத்துடன் கீதாரிகளின் வாழ்வாதாதமும் மேம்படும். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.