Published:Updated:

நீங்கள் கேட்டவை: நேரடி நெல் விதைப்புக் கருவியால் மகசூல் குறையுமா?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை: நேரடி நெல் விதைப்புக் கருவியால் மகசூல் குறையுமா?

புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘நேரடி நெல்விதைப்புக் கருவி மூலம் சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்குமா, நெல்மணிகளைப் பறவைகள் கொத்தித் தின்றுவிடும் என்கிறார்களே?’’

செ.பாண்டி, தூத்துக்குடி.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநராகப் பணிபுரிந்தவரும், இப்போது விவசாயத்தில் முன்னோடியாக இருப்பவருமான பேராசிரியர் ஜி.பெருமாள் பதில் சொல்கிறார்.

‘‘சித்திரவாடி என்கிற ஊர், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம். இங்குள்ள நயாதிருப்பதி கோயில் வளாகத்தில்தான், என்னுடைய விவசாயப் பணியும் ஆன்மிகச் சேவையும் நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் முதல் முறையாக நேரடி நெல் விதைப்பு செய்தோம். 25 ஆண்டுகளாக மரம், செடி கொடிகளின் இலை, தழைகள் பயன்படுத்தப்பட்டுச் செழிப்பாக்கப்பட்ட நிலம். இதுவரை களைக்கொல்லியோ, மண் நுண்ணுயிர்களை அழிக்கக் கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை உரங்களையோ அபரிமிதமான அளவில் பயன் படுத்தியதில்லை.

நேரடி நெல்விதைப்புக் கருவி
நேரடி நெல்விதைப்புக் கருவி

எங்கள் பண்ணையின் சீதோஷ்ண நிலை மற்றும் பருவநிலைக்குத் தக்கபடி, கோ-51 நெல் சாகுபடி செய்தோம். இதற்கு முன்பு, இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிகமான களைகள் மண்டிக்கிடந்தன. அதைக் கட்டுப்படுத்தவே நெல் சாகுபடி செய்ய முடிவு செய்தோம். நாற்றுவிட்டு, நடவு செய்வதைக் காட்டிலும் நேரடி நெல் விதைப்பில் பல நன்மைகள் உண்டு. இதை என் பணிக் காலத்திலேயே பார்த்துள்ளேன். அதை எனது நிலத்தில் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. பண்ணையில் இருந்த 5 டன் தொழுஉரத்தைக் கொட்டி உழவு செய்தோம். இதைத்தவிர, வேறு உரம் போடவில்லை. டிரம் சீடர் என்று சொல்லப்படும், நேரடி நெல் விதைக்கும் கருவியைக் கொண்டு விதைத்தோம். 1 ஏக்கர் 80 சென்ட் நிலத்தில் விதைக்க, ஆரம்பத்தில் 40 கிலோ விதைநெல் (இப்போது ஏக்கருக்கு 10 கிலோ விதைநெல் போதுமானது) தேவைப் பட்டது. இரண்டரை மணி நேரத்தில் விதைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இதனால், விதைப்புக்கான செலவு வெகுவாகக் குறைந்தது. நாற்று நடவு செய்யும்போது ஏற்படும் மிதியடி பள்ளங்கள் தவிர்க்கப்பட்டன. நிலத்தின் அனைத்துப்பகுதிக்கும், நீர் சீராகச் சென்று சேர்ந்தது.

ஜி.பெருமாள்
ஜி.பெருமாள்

சத்துப் பொருள்கள் நிரம்பிய மேல் மண் பகுதியில் விதைகள் விதைக்கப்பட்டன. இதனால், விதைகள் முளைக்கும்போதே, ஆரோக்கியமாக வளர்ந்தன. விதைத்த 3-ம் நாள் வயலில் பசுமை படர்ந்தது. நாற்றுவிட்டு நடவு செய்யும்போது, மண்ணின் ஆழத்தில் வேர்கள் சென்றுவிடும். எனவே, மேல் மண்ணில் உள்ள சத்துகள் நெற்பயிர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. நேரடி நெல் விதைப்பு மூலம் தகுந்த இடைவெளியில் விதைப்புச் செய்யப் பட்டதால், களையெடுக்கும் வேலையும் குறைந்தது. அடிப்படையில் நெற்பயிர் புல் வகையைச் சேர்ந்தது என்பதால், காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்தோம். நெல் வயலுக்குத் தளும்பத் தளும்பத் தண்ணீர் பாய்ச்சுவதைக் காட்டிலும், காயவிட்டுக் காயவிட்டுத் தண்ணீர் பாய்ச்சினால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நெற்பயிர் திடக்காத்திரமாக வளர்ந்து நின்றதால், பூச்சி, நோய்கள் தாக்குதல் அறவே இல்லை. ஆகையால், பூச்சிக்கொல்லி தெளிக்கும் வேலையும் செலவும் மிச்சமானது. சரியான நேரத்துக்கு மணியடித்ததுபோல, விதைத்த 107-ம் நாள், நெல் அறுவடைக்குத் தயாராகிவிட்டது. அறுவடை செய்த பிறகு, 40 மூட்டை (80 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. எனவே, நேரடி நெல் விதைப்பு முறையில், தயக்கமில்லாமல் சாகுபடி செய்யலாம். இப்போதும் தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு மூலம்தான் சாகுபடி செய்து வருகிறேன்.

புறா பாண்டி
புறா பாண்டி

பறவைகள் கொத்தும் அளவுக்கு மேலே விதை நெல் தெரியாது. வயலை நன்றாக உழவு செய்து விதைத்தால், சேற்றில் விதை மூடிக்கொள்ளும். ஆகையால், பறவைகள் கொத்திவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனது நேரடி நெல் விதைப்பு சம்பந்தமான செய்தி 2018-ம் ஆண்டுப் பசுமை விகடன் இதழில் வெளிவந்தது. இதன் பிறகு சுமார் 1,000 பேருக்கு மேல், இது சம்பந்தமாக என்னிடம் பேசியிருப்பார்கள்; இன்னும் பேசி வருகிறார்கள். வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி என்ற வகையிலும் இப்போது ஒரு விவசாயி என்ற வகையிலும் இதன் பயன் பாட்டைப் பற்றி மக்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.’’

தொடர்புக்கு, ஜி.பெருமாள்,

செல்போன்: 94432 40074.


‘‘முள் சீத்தா எதற்குப் பயன்படுகிறது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் 8 வயது கொண்ட முள் சீத்தா மரம் உள்ளது. பூ பூக்கின்றன; காய்கள் நிற்பதில்லை. என்ன காரணம்?

ஜி.இ.ஏ.கோயில்பிள்ளை, காட்பாடி

முள் சீத்தா
முள் சீத்தா

சென்னையைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் ‘பம்மல்’ இந்திரகுமார் பதில் சொல்கிறார்.

“தற்போது, முள் சீத்தா குறித்த விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவக் குணம் கொண்ட முள் சீத்தாவின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்ப வெப்ப நாடுகளில் பரவலாகக் காணப்படும். விதைப் பரவல் மூலம் இயற்கையாகவே தமிழ்நாட்டில் உள்ள தோட்டங்களிலும் வேலி களிலும் ஆற்றுப் படுகை களிலும் வளர்ந்து நிற்கின்றன. சிறிது இனிப்பும் துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று சுவையும் மணமும் கொண்டது. வெண்மையான தோற்றத்தில் சதைப்பற்றுடன் இருக்கும். அமேசான் காடுகளில் இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன்படுத்திக் குணம் கண்டு வருகிறார்கள். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றைப் பக்குவப்படுத்தி உணவாகச் சாப்பிடும் வகையில் தயார் செய்து பயன்படுத்தியுள்ளார்கள். இதன் மருத்துவக் குணங்கள் பற்றிப் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. புற்றுநோயைத் தடுக்கும் சக்தி, முள் சீத்தாவுக்கு உண்டு என்றும் கண்டறிந்துள்ளனர்.

நடவு செய்த 3-4 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும். இதன் பழத்தைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்கிறார்கள். இதை டீத்தூளில் தினமும் கலந்து குடிக்கலாம். என் அனுபவத்தில் முள் சீத்தா நிழல் விரும்பி பயிர். எனவே, சூரிய ஒளி நேரடியாகப் பட்டால், சரியாக வளராது. காய்ப்புக்கும் கூட வராது. எனவே, நேரடியாக மரத்தின் மீது வெயில் விழுவதைத் தடுக்க ஏற்பாடு செய்யவும். அடுத்து, மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து தெளித்து வாருங்கள். விரைவில் முள் சீத்தா காய்க்க வாய்ப்புகள் உள்ளன.”

தொடர்புக்கு, ‘பம்மல்’ இந்திரகுமார்,

செல்போன்: 99410 07057.

‘பம்மல்’ இந்திரகுமார்,
‘பம்மல்’ இந்திரகுமார்,

‘‘தமிழ்நாட்டுக்கான அபிடா அலுவலகம் எங்கு உள்ளது?’’

கே.பாலகிருஷ்ணன், சின்னசேலம்.

‘‘வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)

வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதியினை ஊக்குவித்து மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.’’

தொடர்புக்கு,
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல அலுவலகம்,
இரண்டாம் தளம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32.

செல்போன்: 99865 93017

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism