Published:Updated:

வேண்டும் ‘வேளாண் அமைச்சரவை!’

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

வேண்டும் ‘வேளாண் அமைச்சரவை!’

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, வேளாண்மைத் துறைக்கென்று தனி நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைக் கடந்த ஆண்டுச் சமர்ப்பித்த தி.மு.க. அரசு, இரண்டாவது ஆண்டாகவும் அதைத் தொடர்ந்திருக்கிறது. கடந்த 19-ம் தேதியன்று 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பற்பல அறிவிப்புகளுடன் 33,007.68 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

எத்தனை கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், தனி நிதிநிலை அறிக்கையின் பலன்கள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்குச் சென்று சேரும்போதுதான், இது முழுமை பெறும்.

‘கடந்த பட்ஜெட்டில் 86 திட்டங்களை அறிவித்தோம். அதில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிட்டுவிட்டோம்’ என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாணை வெளியிட்டுவிட்டதாலேயே திட்டங்களின் பலன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்துவிடாது என்பதுதான் கடந்தகால வரலாறு. நலத்திட்டங்களின் பலன்கள் சிந்தாமல், சிதறாமல் விவசாயிகளுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னோடி விவசாயிகள், வேளாண் செயற்பாட்டாளர்கள் என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்க வேண்டும். அந்தக் குழுக்கள் நிறை, குறைகளை ஆய்வுசெய்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.

வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வரும் ஒடிசாவில் ‘வேளாண்மை அமைச்சரவை’ (Agriculture Cabinet) என்று ஒரு குழு இருக்கிறது. முதல்வர் தலைமையில் வேளாண் அமைச்சர், முன்னோடி விவசாயிகள், வல்லுநர்கள் அடங்கிய இந்த ‘அமைச்சரவை’தான், மாநிலத்தின் வேளாண் சார்ந்த திட்டங்களை உருவாக்குவது மற்றும் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. ஒடிசா மாநில வேளாண்மை, வளர்ச்சிப் பாதையில் நடைபோட இதுவும் முக்கியக் காரணம்.

தனி பட்ஜெட்டுக்கு வித்திட்ட தமிழக முதல்வர், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்

வேண்டும் ‘வேளாண் அமைச்சரவை!’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism