Published:Updated:

கரும்பு விவசாயிகளுக்குக் கசப்பான பட்ஜெட்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

கரும்பு விவசாயிகளுக்குக் கசப்பான பட்ஜெட்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

‘‘இந்தத் தடவை என்ன செய்யக் காத்திருக்குதோ இந்த மழை... போன வருஷம் பெய்ஞ்சு கெடுத்துட்டு, இந்தத் தடவை என்ன செய்யப்போகுதோ தெரியல. இப்பவே வெயிலு மண்டையைப் பொளக்குது. பயிர் பச்சையெல்லாம் காய்ஞ்சுப் போச்சு’’ வறண்டு போன பண்ணைக்குட்டையின் கரையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.

‘‘போன தடவை அடைமழை பெய்ஞ்சும் அதுக்குள்ள பல இடங்கள்ல தண்ணிக்குத் தட்டுப்பாடு ஆகிடுச்சு. காரணம் பெய்யுற மழையை நாம சரியா பராமரிக்காததுதான். உன்னோட இந்தப் பண்ணைக்குட்டை இப்படியிருக்கக் காரணம், பராமரிப்பு சரியில்லாததுதான்.

அரசாங்கம் 100 சதவிகிதம் மானியத்துல அமைச்சுத் தருதுன்னு நிலத்துல ஏதாவது ஓர் இடத்துல பண்ணைக்குட்டை அமைச்சிட வேண்டியது. பிறகு, தண்ணியே வரலன்னு புலம்ப வேண்டியது. நிலத்துல பெய்ற மழைத்தண்ணி வடிஞ்சு ஓடிவர்ற கீழ்பக்கமா தான் குட்டை அமைக்கணும். அதோட குட்டைக்குத் தண்ணி வழிஞ்சு வர்ற வழியில இருக்க வாய்க்கால், ஓடைகளைப் புதர், மண்மேடு இல்லாம சரியா பராமரிக் கணும்யா. அப்பத்தான் பண்ணைக்குட்டை அமைச்சதோட முழுமையான பயனை அனுபவிக்க முடியும்’’ என்று வாத்தியார் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே...

‘‘உங்களைக் களத்துமேட்டுல தேடிக்கிட்டு இருக்கேன். இங்க உட்காந்து இருக்கீங்களா?’’ என்ற குரல்கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்க்க, வரப்பு வழியாக அவர்களை நோக்கி வந்துகொண் டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘வா... கண்ணம்மா. வியாபாரத்துக்குப் போகாம எங்களைத் தேடி வந்திருக்க’’ ஆச்சர்யமாகக் கேட்டார் வாத்தியார்.

‘‘இவருகிட்ட கீரை கொஞ்சம் கேட்டிருந் தேன் வாத்தியாரே... அதான் வாங்கிட்டுப் போகலாம்னு பார்த்தா, இங்க வந்து உட்காந்திருக்காரு’’ என்றார் காய்கறி.

‘‘அதைப் பறிச்சு கட்டு கட்டி மோட்டார் பெட்டி மேல வெச்சிருக்கேன். போறப்ப எடுத்துக்கிட்டுப் போ கண்ணம்மா...’’ என்றார் ஏரோட்டி.

கரும்பு விவசாயிகளுக்குக் கசப்பான பட்ஜெட்!

‘‘சரிய்யா... எடுத்துக்கிறேன்’’ என்ற காய்கறி, ‘‘வேளாண் பட்ஜெட் அறிவிச்சுட்டாங்க. அதுல நமக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தாச் சொல்லுங்க வாத்தியாரே’’ ஆர்வமாகக் கேட்டார்.

“தி.மு.க அரசு அமைஞ்ச பிறகுதான் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடறாங்க. அந்த வகையில இது ரெண்டாவது வருஷ பட்ஜெட். அதுக்காக அரசாங்கத்தைப் பாராட்டியே ஆகணும். பல நல்ல திட்டங்கள் அறிவிச்சிருக்காங்க. பல தரப்பு விவசாயி களையும் அறிவிப்பு ஓரளவு திருப்திபடுத்தி யிருக்குது. ஆனா, முறையா செயல்படுத் துனாதான் திட்டத்தோட முழுமையான பலன் கிடைக்கும்.

கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு 195 ரூபாய் அறிவிச் சிருக்காங்க. ஆனா, அந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தல. காரணம் கரும்புக்கான விலைதான். இன்னிக்கு நிலைமையில தமிழ்நாட்டுல ஒரு டன் கரும்பு விலை 2,950 ரூபாய். ஆனா, உத்தரப் பிரதேசத்துல 3,500 ரூபாய், சத்தீஸ்கர்ல 3,550 ரூபாய்.

தேர்தல் நேரத்துல நாங்க ஆட்சிக்கு வந்தா ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் கொடுப் போம்னு இப்ப முதலமைச்சரா இருக்குற ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரு. வாய்வார்த்தையா போச்சேன்னு புலம்புறாங்க கரும்பு விவசாயிங்க’’ என்றார் வாத்தியார்.

“ஒரு வருஷம் வேர்வை சிந்தி உழைச்சு, கரும்பை வெட்டிக்கொடுத்தா ஆலையில காசு வாங்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது. அதுக்கு பயந்துகிட்டுதான் ‘போதும்டா இந்த வெள்ளாமை’னு எங்க வூட்டுக்காரரு கரும்பை கைவிட்டு ரெண்டு, மூணு வருஷம் ஆச்சு’’ என்று சலித்துக்கொண்ட காய்கறி, ‘‘மத்த மாநிலங்களைப் பார்த்தாவது நல்ல விலை கொடுத்தாதான கரும்பு விவசாயி கள் ஊக்கமா சாகுபடியில ஈடுபடுவாங்க... அதை விட்டுட்டு டன்னுக்கு 50 ரூபாய்… 100 ரூபாய்னு ஊக்கத்தொகை மட்டும் கொடுத்தா போதுமா... இது யானை பசிக்கு சோளப்பொறி கொடுக்குற மாதிரியில்ல இருக்கு’’ என்றார்.

‘‘நிலத்துல பெய்ற மழைத்தண்ணி வடிஞ்சு ஓடிவர்ற கீழ்பக்கமா தான் குட்டை அமைக்கணும். அதோட குட்டைக்குத் தண்ணி வழிஞ்சு வர்ற வழியில இருக்க வாய்க்கால், ஓடைகளைப் புதர், மண்மேடு இல்லாம சரியா பராமரிக்கணும்.’’

‘‘உண்மைதான் கண்ணம்மா. ஒரு டன் கரும்புக்கு வெட்டுக்கூலி போக விவசாயிக்குக் கிடைக்குறது 2,000 ரூபாய். ஆனா, ஆலைகளுக்கு எவ்வளவு கிடைக்குது தெரியுமா? ஒரு டன் கரும்புல இருந்து 3,800 ரூபாய் சர்க்கரை, 6,000 ரூபாய் எத்தனால் கிடைக்குது. இதுபோக மின்சாரம், பேப்பர் தயாரிப்பு மூலமா கிடைக்குற வருமானம் தனி. எல்லாம் சேர்த்தா சுமார் 10,000 ரூபாய் ஆலைகளுக்குக் கிடைக்குதாம்.

இந்த எத்தனால வாங்குற மதுபான நிறுவனங்கள், ஒரு டன் கரும்புல இருந்து கிடைக்குற எத்தனால்னு சொல்ற எரிசாராயம் மூலமா 30,000 ரூபாய் மதிப்புல மதுபானம் தயாரிக்குறாங்களாம். அதை வாங்கி அரசாங்கம், அதோட சாராயக் கடையில 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யுதாம். இப்படியொரு புள்ளிவிவரம் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள்ல சுத்திகிட்டு இருக்குது’’ என்றார் வாத்தியார்.

‘‘இவ்வளவு வருமானம் வந்தும் கரும்பு விவசாயிகளுக்கு, லாபம் கிடைக்கல. அரசாங்கம் இதை, தீவிரமா ஆய்வு பண்ணி, கூடுதல் விலையை சீக்கரமே அறிவிக்கணும். அப்பத்தான் விவசாயிகள் மனசு குளிரும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘நல்லா சொன்னய்யா... நான் போய் என் பொழப்பை பார்க்குறேன்’’ என்று காய்கறி நடையைக் கட்ட, வாத்தியாரும் ஏரோட்டியும் எழுந்து கிளம்பினார்கள். அத்தோடு முடிவுக்கு வந்தது மாநாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism