Published:Updated:

மூட்டைக்கு 50 ரூபாய்... தொடரும் நெல்கொள்முதல் கொள்ளை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

மூட்டைக்கு 50 ரூபாய்... தொடரும் நெல்கொள்முதல் கொள்ளை!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

புதிதாகத் திறந்திருக்கும் வாழைப்பழக் கடையில் காய்களை அடுக்கிக்கொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. அப்போது அந்த வழியாகப் பேசிக்கொண்டே வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘இதென்ன புதுசா ஒரு கடை திறந்திருக்கு’ என யோசித்துக்கொண்டே கடைக்குச் சென்றார்கள்.

‘‘அட... நம்ம கண்ணம்மா. என்னபுள்ள காய்கறி வியாபாரத்தை விட்டுட்டயா... இதென்ன வாழைக்காய் கடை புதுசா இருக்கு’’ ஆச்சர்யமாகக் கேட்டார் ஏரோட்டி.

‘‘எங்க வாழைத்தோப்புல தார் வெட்ட ஆரம்பிச்சுட்டோம். அது முழுக்க இயற்கை விவசாயத்துல விளைஞ்சது. நம்ம ஊர் மக்களுக்கும் இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பழங்கள் கிடைக்கட்டுமேன்னுதான் தோப்பு பக்கத்துலயே இந்தக் கடையைத் திறந்திருக்கேன். வந்ததுக்கு நீயும் ஏதாவது வாங்கிட்டுப் போய்யா’’ ஏரோட்டி யைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார் காய்கறி.

‘‘நல்ல முயற்சி... வாழ்த்துகள் கண்ணம்மா. விவசாயிகள் வியாபாரிகளா மாறணும்னு நம்மாழ்வார் அடிக்கடி சொல்லு வாரு... உன்னைப் பாக்கும் போதெல்லாம் அதுதான் எனக்கு நினைவுக்கு வருது. உன்னை மாதிரியே பல பகுதிகள்ல விவசாயிகள் அவங்களே விற்பனையில இறங்கிட்டாங்க. இது அதிகமானா இனி, வர்ற காலங்கள்ல விளைபொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயம் செய்றது சாத்தியமாகலாம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘எதிர்காலம் என்ன எதிர்காலம்... இப்பவே பல இடங்கள்ல விளைபொருளுக்கு விவசாயிகளே விலை வைக்க ஆரம்பிச் சுட்டாங்க. அது இன்னும் பரவலாகல. அவ்வளவுதான். தென்னை விவசாயிகள்ல பலபேர் இளநீரை விற்பனை பண்றாங்க. ஆனா, விவசாயிககிட்ட 10 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போற இளநீயை 40 ரூபாய்க்கு விக்குறாங்க. அதனால, இனிமே இளநீக்கு 22 ரூபாய்க்கு மேல கொடுத்தாதான் வெட்ட விடுவோம்னு உடுமலைப்பேட்டை பகுதியில இருக்க ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்துல முடிவு பண்ணி அறிவிச்சுட்டாங்க. அதோட சங்கத்தை முறையா பதிவு பண்ணிட் டாங்களாம். இந்தச் சங்கத்துல அனைத்து பகுதி இளநீர் உற்பத்தியாளர்களும் உறுப்பினராச் சேரலாம். அடுத்துத் தென்னை வளர்ச்சி வாரியத்திலயும் சங்கத்தைப் பதிவு செய்யப் போறாங்களாம். அந்தச் சங்க உறுப்பினர்களைப் பங்குதாரர்களா ஆக்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் அமைக்கப் போறாங்களாம். என்னையும் அந்தச் சங்கத்துல சேரச் சொல்லியிருக்காங்க. அதுல சேர்ந்தா மத்திய, மாநில அரசுகள் கொடுக்குற மானியங்களைக் கேட்டு வாங்குறதோடு, இளநீர் விலையையும் விவசாயிகளே நிர்ணயம் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்க’’ என்றார் ஏரோட்டி.

‘‘10 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போற இளநீயை 40 ரூபாய்க்கு விக்குறாங்க. அதனால, இனிமே இளநீக்கு 22 ரூபாய்க்கு மேல கொடுத்தாதான் வெட்ட விடுவோம்.’’


‘‘இப்படி இன்னும் நிறைய விவசாயிகள் உருவாகணும். அப்பதான் விவசாயத்துல விடியல் வரும்’’ என்றார் வாத்தியார்.

‘‘விடியல் ஆட்சி வரும்... விடியல் ஆட்சி வரும்னு பாட்டா பாடுனாங்க. இப்ப விடியல் வர்றதுக்குக் கட்சிக்காரங்களே இடைஞ்சலா இருக்காங்களே வாத்தியாரே... நெல் கொள்முதல் நிலையங்கள்ல நடக்குற கொள்ளை இனிமே நடக்காதுன்னு முதலமைச்சர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ரெண்டு பேரும் உறுதிக் கொடுத்தாங்க. ஆனா, இன்னும் இந்தக் கொள்ளை நடந்துகிட்டுதானே இருக்கு. செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்கல் கிராமத்துல நெல் கொள்முதல் மையம் வேணும்னு விவசாயிகள் போராடி கொண்டு வந்தாங்க. ஆனா, அங்கயும் மூட்டைக்கு 50 ரூபாய்க்கு மேல கேக்குறாங்களாம் ஆளும்கட்சிக்காரங்க. இம்புட்டுப் பணம் கொடுக்க முடியாதுன்னு விவசாயிகள் சொல்லிட்டாங்களாம்.

உடனே 10 நாளா நெல் கொள்முதல் செய்றதை நிறுத்திட்டாங்க. அதைக் கண்டிச்சு விவசாயிகள் பஸ் மறியல் பண்ணி, பஸ்ஸை சிறைபிடிச்சுப் போராட்டம் பண்ணியும் பிரச்னைக்கு விடிவு இல்ல. வர்ற 27-ம் தேதி உண்ணாவிரதம் அறிவிச்சிருக்காங்க’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘உண்மைதான்யா... கொள்முதல் நிலையம் விவசாயிகளை வாட்டி வதைக்கிற மாதிரியே கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும் 12 வருஷமா தொடர்கதையா இருக்கு. 2010-ம் வருஷம் மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை எடுத்துட்டுப் போறதுக்கு ஒரு திட்டம் போட்டாங்க. தமிழ்நாட்டுல கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரினு 7 மாவட்டங் கள்ல விளைநிலங்கள் வழியா குழாய் பதிக்க முயற்சி பண்ணுனாங்க. அதைத் தடுக்க 7 மாவட்ட விவசாயிகள் கடுமையா போராடுனாங்க. அதனால, ‘இந்தத் திட்டம் சாலையோரமா மட்டுமே செயல்படுத்தப் படும்’னு 2013-ம் வருஷம் சட்டசபையிலயே அறிவிச்சாங்க அன்னிக்கு முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா. அதோட அதைத் தீர்மானமாகவும் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வெச்சுட்டாங்க. உடனே, நீதிமன்றம் போன, கெயில் நிறுவனம், ‘இப்படி உத்தரவுப் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’னு தீர்ப்பு வாங்கிட்டாங்க. ஆனாலும், ஜெயலலிதா இருக்குற வரைக்கும் திட்டப் பணிகளைத் தொடங்கவேயில்லை கெயில் நிறுவனம்.

அவங்க இறந்த பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, கெயில் திட்டப் பணிகளைச் செய்ய போலீஸ், வருவாய்த் துறை ஒத்துழைக்கணும்னு சொல்லிட்டாரு. பிறகு, தேர்தல் நேரத்துல ஓட்டுக்குச் சிக்கலாகிடும்னு பயந்து வாய்மொழியா திட்டத்தை நிறுத்தி வெச்சிருந்தாரு. வாக்குப் பதிவு முடிஞ்சதும் கிருஷ்ணகிரி மாவட்டத்துல வேலையை ஆரம்பிச்சது கெயில். விவசாயிகள் போராட்டமும் தொடர்ந்துச்சு. இந்த நிலமையில, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பென்னாகரம் பகுதிகள்ல வருவாய்த்துறை, காவல்துறை உதவியோட திட்டத்துக்காக நிலத்தை அளக்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘அப்ப, திட்டம் சாலையோரமாதான் கொண்டு போவோம்னு எழுதிக்கொடுங்க’னு விவசாயிகள் கேட்டிருக்காங்க. உடனே ‘அப்படியெல்லாம் எழுதிக்கொடுக்க முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. அந்தச் சாலையோட நீளமே 2 கிலோ மீட்டர்தான். அதுக்குப் பிறகு விளைநிலம் வழியாதான் குழாய் கொண்டுபோக முடியும்.

‘‘10 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போற இளநீயை 40 ரூபாய்க்கு விக்குறாங்க. அதனால, இனிமே இளநீக்கு 22 ரூபாய்க்கு மேல கொடுத்தாதான் வெட்ட விடுவோம்.’’

இந்த விஷயம் தொடர்பா அமைச்சர்களிடம் பேசுறது, சட்ட போராட்டம் நடத்துறதுன்னு விவசாயிகளோட களத்துல இருக்காரு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன். போராட்டம் நடந்துகிட்டு இருக்கும்போதே கரியப்பனஅள்ளியைச் சேர்ந்த கணேஷ்ங்கிற விவசாயி, திட்டத்தை நிறுத்தணும்னு சொல்லித் தன்னோட நிலத்துல தூக்குப் போட்டுக்கிட்டாரு. உடனடியா அவர் சடலத்தைச் சாலையில வெச்சு விவசாயிங்க போராடுனாங்க. ஆனா, பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டி அடக்கம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டாங்க. எந்த ஆட்சி வந்தாலும், சம்சாரி நிலைமை இப்படித்தான்னு 7 மாவட்ட விவசாயிகளும் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்’’ சோகமாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘வாத்தியாரே, இது மாதிரி நிறைய பிரச்னைங்க இருக்கு. இந்த நிலைமை மாறணும். விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்னு நம்பிக்கையோட இருக்கோம்’’ என்ற ஏரோட்டி, “பழுத்து இருக்குல்ல அந்த வாழைத்தார் என்ன விலை? அதை நான் வாங்கிக்கிறேன்’’ என்று தாரை வாங்கிக் கொண்டு கிளம்ப, வாத்தியாரும் காய்கறியிடம் விடைபெற்றுக் கிளம்பினார்.

மதிப்புக்கூட்டும் மந்திரம்...

உலகச் சந்தையிலும் விற்பனை செய்யலாம்!

‘மதிப்புக்கூட்டும் மந்திரம்... கொட்டிக்கிடக்கும் விற்பனை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு கடந்த 10.04.2022 அன்று திருப்பூர் க்ளாஸிக் பார்ம்ஸ் பண்ணையில் நடைபெற்றது. பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சியில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்வில்
நிகழ்வில்

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளரும் க்ளாஸிக் போலோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான சிவராம் தலைமை வகிக்க, தமிழக வேளாண் விற்பனைத்துறையின் வேளாண் உதவி இயக்குநர் பிரபாகரன், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விளக்கிப் பேசினார்.

நிகழ்வில்
நிகழ்வில்

‘‘விளைபொருள்களை அப்படியே சந்தைப் படுத்துவதைவிட, அறுவடைக்குப் பிறகு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெறலாம். அதிலும் வேளாண் கழிவுப்பொருள்களைப் பற்றிப் பலரும் யோசிப்பதே இல்லை. ஆனாலும் அதையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் லாபத்தை அதிகமாக்கலாம். உதாரணமாக, நெல் உமி, தவிட்டிலிருந்து பிளாஸ்டிக் மாற்றான ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள் தயாரிக்கலாம். மாங்கொட்டையைத் தூக்கி வீசுகிறோம். அந்தக் கொட்டையை உடைத்து உள்ளேயிருக்கும் விதையைப் பொடியாக்கி விற்பனை செய்யலாம். இப்படி ஒவ்வொரு பொருளிலும் மதிப்புக்கூட்ட முடியும். முறையான பயிற்சி மேற்கொண்டால் அனைவராலும் அதைச் செய்ய முடியும். விளைபொருள் களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகிறது தமிழக அரசின் வேளாண் விற்பனைத்துறை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தப் பகுதியில் மட்டுமே விளையும் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி உலகச் சந்தையில் விற்பனை செய்யலாம்’’ என்றார்.

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism