Published:Updated:

கதற வைக்கும் மின்சாரம்..! 30 சதவிகித செலவைக் குறைக்கும் நீர் மேலாண்மை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

கதற வைக்கும் மின்சாரம்..! 30 சதவிகித செலவைக் குறைக்கும் நீர் மேலாண்மை!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

‘‘என்னய்யா காலங்காத்தால கட்டையோட சண்டை போட்டுக்கிட்டு இருக்க’’
- வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒரு மரக்கட்டையைப் பிளக்கும் முயற்சியில் இருந்த ஏரோட்டி ஏகாம்பரத்தைப் பார்த்துக் கேட்டார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி

குரலைக் கேட்டு நிமிர்ந்துப் பார்த்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், “வாங்க வாத்தியாரே... மோட்டார் தரையில சமமா உக்காரல. தடதடனு ஆடிக்கிட்டு இருக்கு. அது ஆடாம இருக்க ஆப்பு செதுக்கிக்கிட்டு இருக்கேன்’’ என்ற ஏரோட்டி, வாத்தியாரைத் திண்ணை யில் அமரச் சொன்னார்.

‘‘இந்த வருஷம் அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியல. இப்பயெல்லாம் ஒவ்வொரு வருஷமும் வெக்கையோட அளவு கூடிக்கிட்டே இருக்கு’’ என்றபடி, துண்டால் விசிறிக்கொண்டார் வாத்தியார்.

‘‘என்ன வாத்தியாரே... வேலையேதும் இல்லையா... இந்த மனுஷன் கூட உக்காந்து இருக்கீங்க. அறுத்துத் தள்ளுவாரே’’ என்று நக்கலடித்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘ஆமா... அறுத்துக்கிட்டுதான் இருக்காரு... மரக்கடையை’’ என்று சிரித்த வாத்தியார், ‘‘என்ன கண்ணம்மா... தோட்டத்துலயிருந்து இப்பதான் தக்காளி பறிச்சுகிட்டு வர்ற எப்ப வியாபாரத்துக்கு போறது’’ என்றார்.

‘‘காலையிலயே என் வீட்டுக்காரர் வியாபாரத்துக்கு போயிட்டாரு வாத்தியாரே... மளிகைக் கடையில தக்காளி கேட்டாங்க. அதான் எடுத்துக்கிட்டு வர்றேன். கரன்ட் எப்ப வருது... எப்ப போகுதுன்னே தெரியல. ராத்திரியில 2 மணி நேரம், பகல்ல 3 மணி நேரம்தான் விவசாயத்துக்கு கரன்ட் கொடுக்குறாங்க. ஆனா, இத்தனை மணிக்கு வரும்னு தெரியாது. அதுவா வரும்... அதுவா போகும். அதுனால இப்பயெல்லாம் தோட்டத்தை விட்டு நகர முடியலீங்க... யாராவது ஒருத்தர் இருக்க வேண்டியிருக்கு’’ வேதனையோடு சொன்னார் காய்கறி.

‘‘கண்ணம்மா சொல்றது சரிதான்ங்க... ரெண்டு பேஸ் கரன்ட்ல என் மோட்டார் போயிடுச்சு. விவசாயத்துல இன்னிக்கு கரன்ட் பிரச்னைதான் பெரிய பிரச்னையா இருக்கு. தடையில்லா மும்முனை மின்சாரம் கொடுத்தா விவசாயம் நல்லாயிருக்கும். சரி, அதுதான் முடியலன்னாலும்... கொடுக்குறதையாவது தினமும் இத்தனை மணிக்குத்தான் வரும்னு சொல்லி, அது மாதிரியே கொடுக்கலாம்ல... அது இல்லாததால, வேற எந்த வேலையும் பார்க்க முடியல. கரன்ட் எப்ப வரும்னு காத்திருக்க வேண்டியிருக்கு’’ புலம்பினார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு கொடுத்திருக்காங்க. இன்னும் 50,000 விவசாயிகளுக்குக் கொடுக்கப் போறதா அறிவிக்குது அரசாங்கம். பாராட்டலாம். அதே நேரத்தில விவசாயத்துக்குக் கொடுக்கும் மும்முனை மின்சாரத்தை ஒழுங்கு பண்ணிட்டா நல்லாயிருக்கும். இப்ப புதுசா கொடுக்குற இலவச கரன்ட்டுக்கு மீட்டர் மாட்டுறாங்களாம். இதுவரைக்கும் இலவச கரன்ட்டுக்கு மீட்டர் இல்லை. இப்ப மாட்டுறதுனால விவசாயிகள்ல சிலபேரு பயப்படுறாங்க. கொஞ்ச நாள்ல எல்லா இலவச மின்சாரத்துக்கும் மீட்டர் மாட்டிடு வாங்களோ... அதுக்கு பிறகு இத்தனை யூனிட் வரைக்கும்தான் இலவசம்... அதுக்கு மேல பயன்படுத்துனா பணம் கொடுக்கணும்னு சொல்லிடுவாங்களோனு பயப்படுறாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘அப்படி செய்யவும் வாய்ப்பிருக்குல்ல... நீங்க மீட்டர்னு சொன்னதும் எனக்கும் அதுதான் தோணுச்சு. நம்ம கையில என்ன இருக்கு... நடக்குறது நடக்கட்டும். பெரியவங்க சொன்ன மாதிரி நீர்நிலைகளைப் பாதுகாக்காம போனதும், போர்வெல்லாப் போட்டுப் பூமியைத் துளைபோட்டு கொன்னதும்தான் தண்ணி ஆழமாப் போகக் காரணம். இல்லன்னா, உங்க கரன்டை நீங்களே வெச்சிக்கங்கனு சொல்லிட்டு கமலை பாசனம் பண்ணிட்டு போயிடலாம்’’ ஏக்க பெருமூச்சு விட்டார் ஏரோட்டி.

‘‘அந்தமான் போர்ட் பிளேயர்ல இருக்க மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தோட இயற்கை வள மேலாண்மைத்துறைத் தலைவர் வேல்முருகன், இதுக்காக ஒரு திட்டம் வெச்சிருக்காரு. நம்ம இயற்கை வளங்களைப் பாதுக்காக்குற அந்தத் திட்டத் தைத் தமிழ் நாட்டுல செயல்படுத்தணும்னு நினைக்குறாரு.

அதாவது, கிராமங்கள்ல இருக்குற சின்னச் சின்ன குளம், குட்டைகளை சீரமைச்சு, அதுக்கு தண்ணி வர்ற வழித்தடங்களைச் சரி பண்ணுனா நிலத்தடி நீரை சேமிக்கலாம். அதுக்கு அந்தந்த ஊர்ல இருக்க மக்கள் பங்களிப்போட இதைச் செய்யணும். 100 நாள் பணியாளர்களையும் பயன்படுத்திக்கலாம். மண், தண்ணீர், காடுகள் மூன்றையும் சரிபண்ணி, பராமரிக்குறது தொடர்பா பல ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒரு திட்டத்தைத் தயாரிச்சிருக்காரு. ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்கள்ல செயல்படுத்துற நீர் சேமிப்புத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்த குழுவுல இருந்தவரு. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுக்கும் ஒரு திட்டம் தயாரிச்சிருக்காராம். அரசாங்க பார்வைக்கும் இந்தத் திட்டங்கள் போயிட்டதா சொல்றாங்க. அது நடைமுறைக்கு வந்தா, நீர் மேலாண்மை தொடர்பா அரசாங்கம் செலவு செய்ற தொகையில 30 சதவிகிதம் குறையுமாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘முயற்சி திருவினையாகும்னு சொல்வாங்க. அதைப் பல இயற்கை ஆர்வலர்கள் நிரூபிச்சுகிட்டு இருக்காங்க. பனியன் நகரமான திருப்பூர்ல நீர்நிலைகள் மாசுபட்டுப் போச்சுன்னு ஒரு காலத்துல உலகமே சொல்லிக்கிட்டு இருந்துச்சு. ஆனா, இயற்கை ஆர்வலர்கள் முயற்சியால பல்வேறு நீர்நிலைகள் மீட்டெடுக்கப்படுது. அதுல முக்கியமானது பெரியபாளையம் ஊராட்சி யில இருக்க நஞ்சராயன் குளம்.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்


சோழர்காலத்துல வெட்டுன 440 ஏக்கர் பரப்பளவுள்ள குளமாம். அந்தக் குளத்தைச் சில வருஷமா இயற்கை ஆர்வலர்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க. குளத்துக்கு வர்ற கழிவுத் தண்ணியைத் தடுக்க, தண்ணி வர்ற இடத்துல சுத்திகரிப்பு நிலையத்தையும் அவங்களே கட்டுனாங்களாம். இதனால சுத்திகரிக்கப் பட்ட தண்ணி மட்டும் குளத்துல தேக்கப்படுது.

அந்தக் குளம் மூலமா 109 ஏக்கர் நிலத்துக்கு ஆயக்கட்டு பாசன வசதி கிடைச்சிருக்கு. இப்ப திருப்பூரோட நிலத்தடி நீரை பாதுகாக்குற குளமாவும் இருக்காம். இந்தக் குளத்துக்கு 179 வகையான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருதாம். இயற்கை ஆர்வலர்கள் பாதுகாத்த அந்தக் குளத்தைப் பறவைகள் சரணாலயமா அறிவிச்சிருக்கு தமிழ்நாடு அரசு.

ஆனா, தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட குளம், ஏரி, கண்மாய்கள் பாழாகித்தான் கிடக்கு. எல்லாத்தையும் தனிநபர்கள், அமைப்புகளால சரிபண்ணிட முடியாது. அரசாங்கம்தான் அதுக்கான திட்டத்தைத் தீட்டணும்’’ என்றார் காய்கறி.

‘’ம்க்கும்... போன ஆட்சியில குடிமராமத்துனு ஒரு கும்மாளம் போட்டாங்க. இதோ இந்த ஆட்சியிலயும் தூர் வாருறோம்னு கோடிகளை அள்ளிவிட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும்கூட, தமிழ்நாடு முழுக்க பாழாபோன நீர்நிலைகளோட நிலைமை அப்படியேதான் இருக்கு. எல்லாம் காலக்கொடுமை’’ என்று நொந்துகொண்டார் ஏரோட்டி.

‘‘ம்... பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியல. நான் போய்க் கடைக்குத் தக்காளி கொடுக்குறேன்’’ என்று சொல்லி காய்கறி நகர, முடிவுக்கு வந்தது மாநாடு.

நிருபர்கள் தேவை!

பசுமை விகடன் இதழில் நிருபர்/டிஜிட்டல் டெஸ்க்/வீடியோ தொகுப்பாளராகப் பணிபுரிய உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? முழுநேரம்/பகுதிநேரம்/ ஃப்ரிலான்ஸர் அடிப்படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றில் அடிப்படை அறிவு மற்றும் அனுபவம் அவசியம். உங்கள் புகைப்படம் மற்றும் சுய விவரக் குறிப்புகளுடன் கீழ்க்கண்ட மெயில் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இமெயில் முகவரி: pasumai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism