Published:Updated:

ஆப் மூலம் திருடும் கும்பல்... விவசாயிகளே உஷார்! - மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மாநாடு

ஆப் மூலம் திருடும் கும்பல்... விவசாயிகளே உஷார்! - மரத்தடி மாநாடு

மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஈ ஒன்று பறந்து வந்து ஏரோட்டியை டீ குடிக்க விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. ‘‘என்னய்யா ஏரோட்டி... உனக்கும் ஈக்கும் போன ஜென்மத்துல ஏதோ நெருங்கின சொந்தம் பந்தம் இருந்திருக்கும் போல. அன்னிக்கு என்னடானா, நம்ம பிரசிடென்ட் வீட்டு கறி விருந்துல உன்னோட இலையையே ஒரு ஈ சுத்தி சுத்தி வந்துச்சு. அதே ஈதான் இப்பவும் வந்திருக்குனு நினைக்குறேன்’’ வாத்தியார் கிண்டலடிக்க, “சும்மா இருங்க வாத்தியாரே... நிம்மதியா ஒரு டீ கூட குடிக்க முடியலைன்னு நானே கடுப்புல இருக்கேன். நீங்க என்னடானா ஏதோ சினிமாவை பார்த்துட்டு கிண்டலடிச்சிக்கிட்டு இருக்கீங்க’’ எனப் புலம்பிக்கொண்டே ஏரோட்டி அந்த ‘ஈ’யை விரட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “எலி அழுதா பூனை விடுமானு எங்க அப்பத்தா ஒரு பழமொழி சொல்லும். அந்த மாதிரிதான் இருக்கு உங்க நிலைமை. உங்க கிளாஸுக்குள்ளார உக்காந்து, டீயை குடிச்சிட்டுதான் போவேனு, இந்த ஈ பிடிவாதமா இருக்கு. சரி, இதை விடுங்க வாத்தியாரய்யா... நாட்டுல நடக்குற விஷயத் தைப் பேசுவோம்’’ என மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

‘‘நான் சொல்லப்போற சேதி, எல்லா விவசாயிகளும் எச்சரிக்கையா இருக்க உதவும்’’ என்று முன்னுரை கொடுத்துவிட்டு தொடர்ந்தார் ஏரோட்டி.

‘‘விவசாயிகளை ஏமாத்தி ஆட்டையைப் போடுறதுக்குனே சில மோசடி பேர் வழிங்க நாட்டுல சுத்திக்கிட்டுதான் திரியுறானுங்க. ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்னு தெக்கு பக்கத்துல உள்ள விவசாயிங்க போன்ல இருக்கிற ஆப் (செயலி) மூலமா தாங்கள் விளைவிச்ச பொருளுங்கள போட்டோ எடுத்து அதுல போட்டு, தங்களோட ஃபோன் நம்பரை போட்டுட்டா போதும்... தேவை யுள்ள வியாபாரிங்க போனுல தொடர்பு கொண்டு அந்தப் பொருளை வாங்கிக்குவாங்களாம்.

கால்நடைகள்
கால்நடைகள்

இதைப் பார்த்துட்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துங்கற ஒரு விவசாயி, தன்னோட 12 மூட்டை சீரகச் சம்பாவை போட்டோ எடுத்து அந்த ஆப்புக்குள்ளார போட்டுருக்காரு. அதைப் பார்த்துட்டு, எவனோ ரெண்டு களவாணி பசங்க, அந்த மாரிமுத்துக்குப் போனை போட்டு, ‘அரிசியைப் பார்சல் சர்வீஸ்ல அனுப்பி வைங்க... அரிசி எங்க கையில கிடைச்ச உடனே பணத்தை அனுப்புறோம்’னு சொல்லி யிருக்கானுங்க. கோயம்புத்தூர்ல இருக்குற மாதிரி ஒரு போலியான அட்ரஸ் கொடுத் திருக்கானுங்க. பாவம் அதை நம்பி அந்த விவசாயி 300 கிலோ அரிசியை அனுப்பி வச்சிருக்காரு. கோயம்புத்தூர் உள்ள பார்சல் சர்வீஸ் ஆபீஸுக்குப் போயி, அந்தத் திருடனுங்க அரிசியை எடுத்துக்கிட்டு, போனை அணைச்சிட்டு எங்கயோ தலைமறைவா ஆயிட்டாங்க. போன் மேல போன் போட்டுச் சலிச்சிப்போன அந்த விவசாயிக்கு அப்புறமாதான் விஷயம் புரிஞ் சிருக்கு. பிறகு, போலீஸ்ல புகார் கொடுத் திருக்காரு.

அந்தக் களவாணி பசங்க, மாரிமுத்துவை மட்டுமா ஏமாத்தினானுங்க நினைக்குற காய்கறி. தேனியைச் சேர்ந்த ஒரு விவசாயி கிட்ட இருந்து அதே மாதிரி ஏலக்காயை ஆட்டையைப் போட்டுருக்கானுங்க. தூத்துக் குடி விவசாயி ஒருத்தர்கிட்ட இருந்து கருப்பட்டியை களவாடியிருக்கானுங்க’’ என ஏரோட்டி சொல்லி முடித்தார்.

‘‘இப்போதைக்கு வெளியில தெரிஞ்சது இவ்வளவுதான். இதுமாதிரி இன்னும் எத்தனை விவசாயிங்க தலையைத் தடவினான்களோ தெரியலை. விவசாயிங் களும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஏமாளியாவே இருப்பாங்களோ’’ என்று காய்கறி நொந்துகொள்ள,

விவசாயம்
விவசாயம்

‘‘விவரமான விவசாயிங்களும் இருக்கத்தான் செய்றாங்க கண்ணம்மா. அதென்ன அவ்வளவு லேசா சொல்லிப்புட்ட. போன்ல அந்த ஆப்பை பார்த்துட்டு, போன் பண்ணின வியாபாரிங்ககிட்ட, என் பொருளுக்கான பணத்தை அனுப்புங்க... அப்புறம் பொருளை அனுப்புறேன்னு சொல்லி கரெக்டா காசு பார்த்து வித்த விவசாயிங்களும் இருக்காங்க’’ ஏரோட்டி சொன்னார்.

‘‘ஒரு நல்ல தகவல் சொல்றேன் கேளுங்க. சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் விவசாயிங்க கிட்ட மாட்டுச் சாணத்தை ஒரு கிலோவுக்கு ரெண்டு ரூபாய்னு விலை கொடுத்து கொள்முதல் செஞ்சுகிட்டு இருக்குறங்க. இதைப் பத்தி, இந்தப் பசுமை விகடன் இதழ்ல தனியா கட்டுரை வந்திருக்குனு ஆசிரியர் குழுவுல சொன்னாங்க. இப்ப மாட்டுச் சிறுநீரை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய்னு விலை கொடுத்து கொள்முதல் செய்றாங்களாம். நாட்டிலேயே முதல் முறையா, சாணத்தையும் சிறுநீரையும் கொள்முதல் செய்யுற, சத்தீஸ்கர் அரசாங்கத்துக்கு வாழ்த்துகள் சொல்வோம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு‘‘நல்ல விஷமா இருக்கே. நாடு முழுக்க இப்படி செய்தா, நிச்சயம் விவசாயிகளுக்கு உதவியா இருக்கும். விவசாயிகள் சார்பா நானும் நன்றியும் வாழ்த்தும் சொல்லிக்கிறேன்’’ என்று ஏரோட்டி சொல்லி முடிக்க அடுத்த செய்தியைச் சொன்னார் வாத்தியார். “சென்னையில ஜூலை 12-ம் தேதி, நபார்டு வங்கியோட 41-வது நிறுவன தினம் கொண்டாடியிருக்காங்க. அந்த நிகழ்ச்சியில கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,

‘கிராமப்புற மக்களோட வளர்ச்சிக்கு நபார்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது. விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லி வருகிறோம். இவர்களின் வளர்ச்சிக்கு நிறைய திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது’னு பேசியிருக்கிறாரு. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூமி நிறுவனம், திண்டுக்கல், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட நபார்டு நிதியுதவியோடு கிராமப்புற கட்டமைப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தின வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், வங்கிகள், திட்ட அமலாக்க முகமைகள் மற்றும் அரசுத்துறைகளுக்கு விருதுகளும் கொடுத்திருக்காங்க. இந்த நிகழ்ச்சியில, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியோட ‘நடமாடும் வங்கி’ யையும் தொடங்கி வெச்சிருக்காங்க” என்றார்.

அடுத்த செய்தியைச் சொல்லத் தொடங்கிய காய்கறி, “பருத்திக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். அதுல ‘ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 1 குவிண்டால் தரமான பருத்திக்கான பண்ணை விலை 8,000 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காரிப் பருவத்தில் பிற மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது. எனவே நடப்பு பருவத்தில் விதைக்கப்படும் பருத்தி, அறுவடை சமயத்தின்போது 1 குவிண்டால் 6,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய் இருக்கும்’னு கணிச்சிருக்கு. விவசாயிங்க இந்த விலைக்கு ஏத்த மாதிரி விற்பனை முடிவுகளை எடுக்குமாறும் கேட்டிருக்கு பல்கலைக்கழகம்” என்றவர்,

“எனக்கு வியாபாரத்துக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்று காய்கறி கிளம்ப, அன்றைய மாநாடு அத்துடன் முடிந்தது.