நாட்டு நடப்பு
Published:Updated:

தேவாங்குகளுக்கு சரணாலயம்... பனை நடவில் உலக சாதனை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி

‘ஏரோட்டி’ ஏகாம்பரம் தன்னுடைய வயலில் கிடந்த வைக்கோலை கட்டு கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘என்ன ஏகாம்பரம், ரொம்ப மும்முரமா வேலை பார்த்துக்கிட்டுருக்கீங்க. நான் வேற சிவ பூஜையில கரடி புகுந்த மாதிரி வந்துட்டேன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. வந்த வேகத்தில், ‘’நீங்க வேற வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டு வந்துடுவீங்க போல. விவசாய நிலத்துல உட்கார்ந்துகிட்டு கரடி, சிறுத்தை, மயிலுனு ஏதாவது பேசி வைங்க. அப்புறம் காட்டு இலாகா ஆளுங்க வந்து ஏகாம்பரத்தை புடிச்சிட்டுப் போகப் போறாங்க. எங்காவது காட்டுப்பிராணிங்க செத்துக்கிடந்தா, அதுக்கு சம்பந்தமே இல்லாத விவசாயிங்க மேல கேஸை போட்டு, ஜெயில்ல தள்ளிக்கிட்டு இருக்காங்க’’ என கடுகடுக்க, ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘ஆனா, இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயும்கூட, ஒரு பெண் விவசாயி, உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்த ஒரு மயிலைக் காப்பாத்தின அந்த உருக்கமான கதையைக் கேட்டா, ஆச்சர்யப்பட்டுப் போவீங்க. ஆனா, அந்தம்மா சாதுரியமாவும் செயல்பட்டுருக்காங்க’’ என்று சொன்ன ஏரோட்டி, அது தொடர்பான தகவலை உணர்வுபூர்வமாக விவரித்தார்.

‘‘தஞ்சாவூர் மாவட்டத்துல திருப்பந் துருத்தினு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர்ல வசிக்கிற ‘அகிலா’ங்கற விவசாயியோட மகன் ஈஸ்வர், அங்க நடந்து போயிக்கிட்டு இருந்தப்ப, ஒரு செங்கல் சூளையைச் சுத்தி ஏகப்பட்ட நாய்ங்க பயங்கரமா குரைச்சுக் கிட்டு இருந்திருக்கு. என்னமோ ஏதோனு நினைச்சு பதறிப்போய், நாய்ங்களை விரட்டி விட்டுட்டு, அந்தச் செங்கல் சூளை மேல ஏறி அது உள்ளார பார்த்திருக்கார். பெரிய மயில் ஒண்ணு, கால் அடிபட்டு ரத்தக் காயத்தோட பரிதாபமா கிடந்திருக்கு. அதை வீட்டுக்குத் தூக்கிக்கிட்டு வந்திருக்கார். அந்த மயிலை எப்படியாவது காப்பாத்திடணுங்கறதுல அந்தப் பெண் விவசாயி அகிலா ரொம்ப உறுதியா இருந்திருக்கார். உடனடியா, வி.ஏ.ஓ-வுக்கும் தாசில்தாருக்கும் தகவல் தெரிவிச்சுட்டு, கால்நடை ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியிருக்கார். அவங்க கண்டுக்கவே இல்லையாம். அந்தப் பகுதி விவசாயிங்க, அரசு அதிகாரிங்க அடங்கின வாட்ஸ் அப் குரூப்லயும் விஷயத்தைப் பகிர்ந்திருக்கார். அந்தக் குரூப்ல வனத்துறை அலுவலர்கள் இருந்தும்கூட பயன் இல்லையாம்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

அக்கம் பக்கத்துல வசிக்கிற மக்கள் பதறிப்போய், ‘உங்களுக்கு இது தேவையில்லாத வேலை. பிரச்னையில மாட்டப் போறீங்க. இந்த மயிலை எங்கேயாவது கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுங்க’னு எச்சரிக்கை செஞ்சிருக்காங்க.

ஆனாலும், அந்தப் பெண் விவசாயி தன்னோட வீட்டு மொட்டை மாடியில ஒரு சின்ன கொட்டகை அமைச்சு, அந்த மயிலை படுக்க வச்சு, அதோட கால்ல மஞ்ச பத்து போட்டதோட மட்டுமல்லாம. அதைத் தன்னோட மடியில படுக்க வச்சு, கம்பு, கேழ்வரகு ஊட்டி விட்டுருக்காங்க. இங்க் பில்லர் மூலம் தண்ணியெல்லாம் கொடுத்து அதைத் தேத்தியிருக்காங்க. அடுத்த நாள் சாயந்திரத்துக்கு மேலதான் வனத்துறை ஊழியர்கள் வந்து, அந்த மயிலை தூக்கிட்டுப் போனாங்களாம்’’ எனச் சொல்லி முடித்தார்.

“ம்ம்ம்.. உதவி பண்றதுக்கு கூட நடுநடுங்க வேண்டியிருக்கு’’ என்ற காய்கறி, தொடர்ந்தார். ‘‘யாரையாவது திட்டுறதா இருந்தா, இனிமே தேவாங்குனு சொல்லி திட்டக் கூடாதுனு நான் ஒரு உறுதி எடுத்திருக்கேன். ராத்திரி நேரத்துல நடமாடக்கூடிய தேவாங்கு களால, விவசாயத்துக்குப் பெரிய நன்மை உண்டாம். பயிர்களுக்குத் தீமை செய்யக் கூடிய பூச்சிகளை எல்லாம் அது வேட்டை யாடி சாப்பிட்டுடுமாம். ஆனா, இப்ப அந்த இனம் அழிஞ்சுக்கிட்டு இருக்குறதா, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு கவலை தெரிவிச்சிருக்கு. இதனால தேவாங்கு களைப் பாதுகாக்குறதுக்காகவும், இதோட எண்ணிக்கையைப் பெருக்குறதுக்காகவும்... கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள்ல 11,806 ஹெக்டேர் பரப்பளவுல உள்ள வனப் பகுதியில தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்னு தமிழக அரசு அறிவிச்சிருக்கு’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

‘‘ஆமாம் நானும் இந்தச் செய்தியைப் பார்த்தேன். இதுக்கான சட்ட பூர்வமான நடவடிக்கையைத் தொடங்கிட்டாங்க. இந்தியாவிலேயே இதுதான் தேவாங்குகளுக்கான முதல் சரணாலயம்’’ எனச் சொன்னார் வாத்தியார்.

பனை நடவில் உலக சாதனை
பனை நடவில் உலக சாதனை

‘‘ஒரு முக்கியமான உலக சாதனை நடந்திருக்கு. அதைப் பத்தி கண்டிப்பா சொல்லி ஆகணும்’’ எனச் சொன்ன ஏரோட்டி, அதற்கு மேல் சொல்லாமல் சற்று அமைதி காக்க, ‘‘ஒரே நாடு ஒரே உரம்னு நம்ம பிரதமர் மோடி ஒரு திட்டத்தைத் தொடங்கி வச்சாரே அதைப் பத்தி சொல்ல வர்றீங்களா’’ காய்கறி ஆர்வத்துடன் கேள்வி எழுப்ப,

‘‘நான் சொல்லப்போறது அதைப் பத்தி இல்ல. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரப் பாண்டியனோட முன்முயற்சியில, அங்க 5 மணி நேரத்துல 52 லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை நட்டு `உலக சாதனை’ப் படைச்சிருக்காங்க. சுற்றுச்சூழல்ல யும், விவசாயிங்க விஷயத்துலயும் அந்த கலெக்டர் இயல்பாவே ரொம்ப ஈடுபாடு கொண்டவர்னு ராணிப்பேட்டை மக்கள் மத்தியில ஒரு பேச்சிருக்கு.

பாஸ்கரப் பாண்டியன்
பாஸ்கரப் பாண்டியன்


இந்தியாவுல வேற எந்த மாவட்டத்துல யும் இல்லாத அளவுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்துல அதிக எண்ணிக்கையில பனை மரங்களை உருவாக்கணும்ங்கற நோக்கத்தோடு, இதுக்கான ஓரு திட்டத்தை வகுத்து, ஒரு குழுவையும் ஏற்படுத்தினாராம். பனை விதைகள் சேகரிப்புக்கான பணிகள் தீவிரமா நடந்துச்சாம். அப்படி சேகரிக்கப் பட்ட 52,81,647 பனை விதைகளை ஒரே நேரத்துல மாவட்டம் முழுக்க விதைக்குறதுக்கான நடவடிக்கைகளை அந்த கலெக்டர் தீவிரப்படுத்தினாராம். 880 இடங்கள்ல 80,000 நபர்கள் மூலம் பனை விதைகள நட்டு, அந்த மாவட்டத்துக்கே பெருமைதேடி தந்திருக்கிறார் பாஸ்கர பாண்டியன்’’ ஏரோட்டி சொல்லி முடிக்க,

‘‘சாதனைனு பேரு வாங்குறதா முக்கியம்... இதெல்லாம் முளைச்சு வந்தாதானே பிரயோஜனமா இருக்கும்’’ காய்கறி படக்கென மடக்கினார்.

``இது மற்ற மரங்கள் மாதிரி கிடையாது. பனையை விதைச்சா போதும். தானா முளைச்சு வந்துடும். இதுல 50 சதவிகித விதைகள் முளைச்சு பெரிய மரமா வந்தாலே அந்த மாவட்டத்தோட எதிர்காலத் தலைமுறைக்கு மிகப்பெரிய வரபிரசாதம்.

சரி நான் கிளம்புறேன். நீங்க உங்க வேலையைக் கவனிங்க ஏகாம்பரம்’’ என வாத்தியார் அங்கிருந்து கிளம்ப, அன்றைய மாநாடு நிறைவடைந்தது.