Published:Updated:

தேங்காய்க்கு விலை இல்லை... தென்னை நலவாரியம் வேண்டும்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி

தேங்காய்க்கு விலை இல்லை... தென்னை நலவாரியம் வேண்டும்!

மரத்தடி

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

நகரத்திலுள்ள மகன் வீட்டுக்குக் காலை நேரத்திலேயே கிளம்பினார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. பேருந்துக்காக ஊர் எல்லைக்கு நடந்துகொண்டிருந்தார். காய்கறி விற்பனைக்காகக் கிளம்பிய ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவருடன் இணைந்துகொண்டார்.

‘‘என்ன வாத்தியாரே இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்டீங்க... ஏதாவது வெளியூர் பயணமா?’’ கேட்டார் காய்கறி.

‘‘இல்லை கண்ணம்மா. என் மகன் வீட்டுக்குப் போலாம்னு கிளம்பிட்டேன். பேரனுக்குச் சளி, இருமலா இருக்குன்னு சொன்னாங்க. அதான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு, ஆடாதொடா மணப்பாகு கொடுத்துட்டு வரலாம்னு போறேன்’’ என்றார் வாத்தியார்.

இருவரும் பேசிக்கொண்டே வரும்போது, சாலையிலிருந்து சற்று உள்வாங்கி இருந்த ஓர் இடத்தில் அடி குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவரைப் பார்த்ததும், இருவரும் அவர் இருக்கும் இடம் சென்றனர்.

‘‘என்னய்யா மோட்டார் போடலியா... அடிகுழாய்ல தண்ணி அடிச்சுட்டு இருக்க’’ என்று விசாரித்தார் வாத்தியார்.

‘‘இந்தப் பாழாப்போன கரண்டு காணாமப் போயிடுச்சுய்யா... அதான் கோழிகளுக்கு வைக்கிறதுக்காகக் கொஞ்சம் தண்ணி பிடிச்சுகிட்டு இருக்கேன்’’ என்று சொன்ன ஏரோட்டி, தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த மரத்தடிக்கு அவர்களை அழைத்துச் செல்ல, ஆரம்பமானது மாநாடு.

‘‘என்னய்யா தேங்காயை விற்காம வெச்சிருக்க. என்னாச்சு?’’ அக்கறையாகக் கேட்டார் வாத்தியார்.

‘‘விவசாயிக்குப் புதுசா என்னய்யா பிரச்னை வந்துடப்போகுது. ஒண்ணு தண்ணி இல்லாம கஷ்டபடுவோம். இல்லைன்னா விலையில்லாம கஷ்டப்படுவோம். தேங்காயைப் பொறுத்தவரைக்கும் விலை யில்லாம கஷ்டப்படுறோம். அதனால கொப்பரை ஆக்கலாம்னு போட்டு வெச்சிருக் கேன்’’ என்றார் ஏரோட்டி.

‘‘அதுக்குதான் தென்னை நலவாரியம் அமைக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சுட்டு இருக்காங்க. ஏற்கெனவே தி.மு.க ஆட்சியிலதான் தென்னை நலவாரியம் அமைச்சாங்க. அப்ப, ரேஷன் கடையில பாமாயில் கொடுத்துட்டு இருந்தாங்க. அதை நிறுத்திட்டு தேங்காய் எண்ணெய் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, இப்ப அது நடை முறையில இல்லை. தென்னை விவசாயி களோட நலனுக்காக மறுபடியும் தென்னை நலவாரியத்தை அமைக்கணும். ரேஷன் கடையில பாமாயிலுக்குப் பதிலா தேங்காய் எண்ணெய் கொடுக்கணும்னு தென்னை விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க. தி.மு.க, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இது சம்பந்தமா முதலமைச்சருக்கு ஒரு கடிதமும் எழுதி யிருக்காரு’’ என்றார் வாத்தியார்.

‘‘அரசாங்கம் நலவாரியம் அமைச்சா நல்லதுதான். ஆனா, கடந்த காலங்கள்ல கொப்பரை ஊழல் செஞ்ச மாதிரி உடன் பிறப்புகள் செய்யாம இருக்கணும்’’ சிரித்துக் கொண்டே சொன்ன ஏரோட்டி,

‘‘மார்க்கெட் கட்டணமா ஒரு ரூபாய் வசூலிக்கிறாங்கனு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை கொடுத்துருக் காரே... மார்க்கெட்ல என்னம்மா நடக்குது’’ என்று கண்ணம்மாவிடம் கேட்டார்.

- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு

‘‘அது எனக்குத் தெரியலய்யா... மார்க்கெட்ல பொருளை விக்கப்போனா மூட்டைக்கு இவ்வளவுனு சுங்க கட்டணம் வாங்குவாங்க. அவங்க கேட்குற காசைக் கொடுத்துட்டுப் போயிடுவேன். வேறெதுவும் எனக்குத் தெரியாது’’ அப்பாவியாகச் சொன்னார் காய்கறி.

‘‘அது பெரிய கதைய்யா... அதைச் சொல்றேன். கொஞ்சம் பொறுமையா கேளுங்க’’ என்ற வாத்தியார் தொடர்ந்தார். “வெள்ளைக்காரன் ஆட்சியில இந்திய விவசாயத்தை மேம்படுத்தணும்னு அப்ப இங்க வைஸ்ராயா இருந்த ‘லார்டு லிலித்தோ’ங் கிற அதிகாரி தலைமையில 1928-ம் வருஷம் ‘ராயல் கமிஷன்’னு ஒரு கமிஷன் அமைச்சாங்க.

இந்திய விவசாயிங்க விளைவிக்கிற விளை பொருள்களை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் ஏமாத்தி, சுரண்டுறாங்க. தவறான முறையில எடை போடுறது, வெளிப்படைத்தன்மை இல்லாததுனு பல பிரச்னைகளை விவசாயிங்க சந்திச்சிட்டிருந்தாங்க. ஏல முறைகள்ல குழப்பங்கள், மார்க்கெட் நிலவரங்கள் விவசாயிகளுக்கு சரிவர தெரியாத நிலைமை, கமிஷன், தரகு, எடை கூலினு எந்தக் கட்டுப்பாடும் இல்லாம இடைநிலைச் செலவுகளை விவசாயிகளிடமிருந்து பிடித்தம் பண்றது, விற்பனை செய்து கிடைச்ச தொகையைக் காலந்தாழ்த்தி வழங்குறதுனு விவசாயிகள் சந்திக்கக்கூடிய பல விஷயங்களைச் சொல்லி, இதையெல்லாம் தடுக்கச் சட்டம் போடணும்னு பரிந்துரை பண்ணி, அப்ப இருந்த அரசுக்கு அவரு அறிக்கைக் கொடுத்தாரு.

‘‘ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கலாசாரம் இன்னிக்கு விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் பயனளிக்காத அமைப்பாக இருக்கிறதுதான் வேதனை.’’

அவரு சொன்ன பரிந்துரைகளைப் பிரிட்டிஷ் இந்தியா அரசு ஏத்துகிச்சு. அன்னிக்கு இருந்த மெட்ராஸ் மாகாண அரசு அதுக்கான சட்டத்தை இயற்றி, இந்தியாவுல ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கலாசாரத் தைத் தொடங்கி வெச்சது.

1933-ம் வருஷம், ‘மெட்ராஸ் வர்த்தக விளைபொருள் அங்காடிச் சட்டம் முழுமை யாகவும் சிறப்பாகவும் இருந்தது. 1936-ம் வருஷம், திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி உருவானது. அதைத் தொடர்ந்து விழுப்புரம் மணிலா மார்க்கெட் கமிட்டி, கோவில்பட்டி காட்டன் மார்க்கெட் கமிட்டி உருவாக்கப்பட்டது. இன்னிக்கு, இந்தியா முழுக்கக் கேரளா, காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்களிலும் வேளாண்மை வர்த்தக விளைபொருள் அங்காடிச் சட்டம் நடை முறையில இருக்கு.

ஆரம்பத்தில் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டியை, அதாவது ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை வியாபாரிகள் போதுமான அளவுக்குப் பயன்படுத்த முன்வரல. விவசாயிங்க மட்டும், பருத்தியை விற்பனைக்கூடத்துக்குள்ள கொண்டு வந்தாங்க. ஆனா, கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரல. அதனால, விற்பனைக் கூடத்தைச் சுற்றியிருக்க 3 மைல் பரப்பளவுல இருக்குற பருத்தி மண்டிகளும், பருத்தி வியாபாரிகளும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில மட்டும்தான் வியாபாரம் பண்ணணும்னு 1946-ம் வருஷம் அரசு உத்தரவு போட்டுச்சு.

இந்த உத்தரவுக்கு அப்புறம் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டியில பருத்தி வர்த்தகம் விற்பனைக்கூட வளாகத்தில மட்டுமே நடக்க ஆரம்பிச்சது. வரத்தும் பல மடங்கு அதிகமாச்சு. பருத்தி விற்பனைன்னு சொன்னாலே திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டிதான் என்ற நிலைப்பாடு உருவாச்சு. பின்னாளில் இது மாதிரி உத்தரவு மத்திய அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேம்பாட்டு நடவடிக் கைக்கு வழிகாட்டியாகவும் அமைஞ்சது.

தேங்காய்கள்
தேங்காய்கள்

வேளாண்மை விளைபொருள் அங்காடி சட்ட வரைவு, அதன் செயல்பாட்டுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்த தமிழ்நாட்டுல ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கலாசாரம் இன்னிக்கு விவசாயிகளுக்கும் வர்த்தகர் களுக்கும் பயனளிக்காத அமைப்பாக இருக்கிறதுதான் வேதனை.

‘விற்பனைக் கூடங்களுக்கு வெளியே அறிக்கையிடப்பட்ட மார்க்கெட் பிராந் தியத்தில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், வர்த்தக மதிப்பில் ஒரு சதவிகிதம் மார்க்கெட் கட்டணமாகச் செலுத்த வேண்டும்’னு 1987-ம் வேளாண்மை விளைபொருள் அங்காடியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 1991-ம் ஆண்டு வேளாண்மை விளைபொருள் அங்காடி விதி சொல்லுது.

இப்ப அறிக்கை வெளியிடுற ஓ.பி.எஸ் இடம்பெற்றிருக்கிற அ.தி.மு.க கட்சிதான் 1991-ல ஆட்சியில இருந்துச்சு. ஆக, இந்தக் கட்டணம் எந்தக் கட்சி ஆட்சியில இருந்தா லும் வசூலிக்கப்படுற ஒண்ணுதான். 2018-19-ம் வருஷம், தமிழ்நாட்டுல சந்தைக்கட்டணம் 125 கோடி ரூபாய் வரவு வந்திருக்கு’’ என்றார் வாத்தியார்.

‘‘நல்லா எங்களை உக்கார வெச்சுப் பாடம் எடுத்திட்டீங்க... கோழிகளுக்குத் தண்ணி வெக்கணும் நான் கிளம்புறேன்’’ எனச் சிரித்துக்கொண்டே நடையைக் கட்டினார் ஏரோட்டி.

பேருந்து நிறுத்தத்தை நோக்கி வாத்தியாரும், கண்ணம்மாவும் நடக்க முடிவுக்கு வந்தது மாநாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism