Published:Updated:

உழவர் நலத்துறை... ஊழல் வளத்துறையா?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

உழவர் நலத்துறை... ஊழல் வளத்துறையா?

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

காலையிலேயே வியாபாரத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. அவருடைய வீட்டு முன்பாக செல்லும் சாலையில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் பேசிக்கொண்டே நடந்துவர, வாத்தியார் கையிலிருந்த மஞ்சப்பையில் முருங்கைக்காயைப் பார்த்த காய்கறி, ‘‘என்ன வாத்தியாரே... கையில பையோடு காலங்காத்தால?’’ என்றபடியே மாநாட்டை ஆரம்பித்தார்.

‘‘டீக்கடையில உக்காந்துட்டு இருந்தோம். அப்ப மார்க்கெட்டுக்குக் காய் கொண்டுபோன என் சிநேகிதன், இந்தக் காயைக் கொடுத்துட்டுப் போனான். சில வருஷங்களுக்கு முன்ன என் வீட்டுல ஒரு முருங்கை மரம் இருந்துச்சு. காய் சடை சடையா காய்க்கும். இப்ப அந்த மரம் இல்ல. ஆனா, ஒரு தடவை அந்த மரத்துல இருந்து போத்து எடுத்துட்டுப் போய் அவங்க தோட்டத்துல நடவு பண்ணினான் என் சிநேகிதன். அந்த மரம் காய்ச்சுத் தொங்குதாம். அதைப் பெருமையோடு சொல்லித்தான், காய்களைக் கொடுத்துட்டுப் போறான்’’ என்றார் வாத்தியார்.

‘‘உங்க வீட்டு மரத்துல இருந்துதான் நானும் போத்து கொண்டு போய் நட்டுவெச்சேன். என் வீட்டுல இருக்க மரமும் நல்லா காய்ச்சிருக்கு. வாங்க காட்டுறேன்’’ என்று வீட்டுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றார் காய்கறி. அங்கே, சடை சடையாகத் தொங்கிக் கொண்டிருந்த முருங்கைக் காய்களைப் பார்த்து அதிசயித்தனர் ஏரோட்டியும், வாத்தியாரும். சில காய்களைப் பறித்த காய்கறி, ‘‘இதையும் கொண்டுபோங்க, இது மரம் கொடுத்ததுக்கான நன்றிக்கடன்’’ என்றார் சிரித்தபடியே!

‘இனிமே மானியத்தைப் பணமா கொடுக்க மாட்டோம். பொருளாதான் கொடுப்போம். வேணும்னா வாங்கிக்கோங்க... இல்லைன்னா போங்க’ங்கிற மனநிலையில அதிகாரிக இருக்காங்க.’’

தானும் சிரித்துக்கொண்ட ஏரோட்டி, ‘‘இப்படி சம்சாரிக (விவசாயிகள்) நட்டு வெக்குற முருங்கையெல்லாம் நல்லா வந்திருது. ஆனா, அரசாங்கம் போடுற திட்டம்தான் நல்லா வரவே மாட்டேங்குது’’ என்றார் பூடகமாக.

‘‘சொல்றதை தெளிவாச் சொல்லுய்யா...’’ எரிச்சலுடன் கேட்டார் காய்கறி.

‘‘விடியல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்துக்குனு தனி பட்ஜெட் போட்டாங்க. ஆகா... ஓகோனு வாய்வலிக்கப் பாராட்டினோம். இப்ப அடுத்த பட்ஜெட் வரப்போகுது. ஆனா, அவங்க சொன்ன திட்டங்கள் ஏதாச்சும் நடந்துச்சா? முருங்கை சிறப்பு மண்டலமா 7 மாவட்டங்களை அறிவிச்சாங்க. அந்த மாவட்ட விவசாயிகளும், ‘நமக்கு விடிஞ்சுடுச்சுப்பா’னு நினைச்சு பூரிச்சு இருந்தாங்க. ஆனா, அறிவிப்புக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லையே. ‘இனிமே நம்ம முருங்கைதான் உலகச் சந்தையை ஆளப்போகுது. நம்ம விவசாயிகளுக்கு நல்ல விலைக் கிடைக்கும். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப் பயிற்சி, நிதியுதவி மட்டும் இல்லாம விற்பனைக்கும் வழிகாட்டுவோம்’னு சொன்னாங்க. ஆனா, ஒண்ணுக்கூட நடக்கலயே. தனி பட்ஜெட்டால விவசாயத்துக்கோ... விவசாயிகளுக்கோ எந்த நல்லதும் நடந்த மாதிரி எனக்குத் தெரியல’’ பொங்கித் தீர்த்தார் ஏரோட்டி.

சொட்டுநீர்ப் பாசனம்
சொட்டுநீர்ப் பாசனம்

‘‘தனி பட்ஜெட் வந்ததால விவசாயிகளுக்கு நல்லது நடந்துச்சோ இல்லையோ... அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ரொம்ப நல்லது நடந்திருக்குன்னு சொல்றாங்க. உதாரணமா சொட்டுநீர்ப் பாசனத்துக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல ஒதுக்கீடு செஞ்சாங்க. அதை அமைச்சு கொடுக்குற வேலையை ஒருசில கம்பெனிகளுக்குக் கொடுத்தாங்க. அதுக்கு கமிஷன் 5 சதவிகிதமாம். அதுல, துறையோட மேல்மட்டத்துல இருக்கற ஒருத்தருக்கு 2 சதவிகிதம், துறையோட இன்னொரு தலைக்கு ஒரு சதவிகிதமாம். அடுத்த நிலையில இருக்குற முக்கிய அதிகாரிகளுக்கு அவங்கவங்க பொறுப்புக்கு ஏத்த மாதிரி அரை, கால் சதவிகிதம்னு பிரிச்சுருக்காங்க. ‘சொட்டுநீர் விஷயத்துக்கு நாங்கதான் அத்தாரிட்டி. அதனால மேல்மட்டத்துல கொடுக்குறதுல பாதியைக் கொடுக்கணும். அப்பதான் பைல் நகரும்’னு பிடிவாதமா சொல்லிட்டாராம் ஒரு முக்கிய அதிகாரி. பிறகு, அவருக்கு ஒரு சதவிகிதம் கொடுத்த பிறகுதான் ‘பைல்’ நகர்ந்ததாச் சொல்றாங்க. இப்பச் சொல்லு... வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் போட்டதால பயனிருக்கா... இல்லியா?’’ என்று நக்கலாகக் கேட்டார் வாத்தியார்.

‘‘சம்சாரிக பிறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சாலும் பக்கத்துலகூடப் போக முடியாதளவு பணத்தை ஒரு கையெழுத்துல சம்பாதிச்சுடுறாங்க அதிகாரிங்களும் அரசியல்வாதிகளும். நாம அறிவிக்குற திட்டங்களைப் பேப்பர்ல பார்த்துட்டு நல்லது நடக்கும்னு நம்பிட்டு திரியுறோம். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன் வாத்தியாரே... எந்த ஆட்சி வந்தாலும் சம்சாரி பொழப்பு விடியவே விடியாதுபோல’’ வேதனையோடு சொன்னார் ஏரோட்டி.

‘‘இன்னொரு தகவலும் இருக்கு. தமிழ்நாட்டுல இருபதுக்கும் மேற்பட்ட தனியார் வேளாண்மை கல்லூரிகள் இருக்கு. ஒவ்வொரு சீட்டுக்கும் லட்சக்கணக்குல நன்கொடை வாங்குறாங்க. வரக்கூடிய கல்வி ஆண்டுல இன்னும் அதிகமா கல்லா கட்டுறதுக்காக ஒரு வேலை பார்த்திருக்காங்களாம். தனியார் கல்லூரிகளைத் தரம் பிரிச்சு, தரத்துக்கு ஏற்பச் சீட்டுகளை அதிகப்படுத்திக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம். வழக்கமா இந்த மாதிரி முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகக்குழு கூட்டத்துலதான் எடுப்பாங்களாம். இப்ப பல்கலைக்கழகத் துணைவேந்தர் இல்லை. இந்த நேரத்துல, ‘அகாடமி கமிட்டி’ இந்த முடிவுக்கு ஒப்புதல் கொடுத்திருக்காம். பல்கலைக்கழக வரலாற்றுல இப்படி நடக்குறது இதுதான் முதல்முறைன்னு சொல்றாங்க. தனியார் கல்லூரிகள் மூலமா இதுக்குப் பெரிய தொகை கைமாறி இருக்குன்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘சம்பாதிக்க வாய்ப்பு இருக்கச் ‘சமய’த்துல சம்பாதிச்சாதானேனு புரிஞ்சுகிட்ட அதிகாரிக, கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்று ஏரோட்டி சொல்ல...

‘‘உண்மைதான்யா... வழக்கமா அமைச்சர்கள்தான் அதிகாரம் பண்ணுவாங்க. ஆனா, இந்த ஆட்சியில பெரும்பாலான அமைச்சர்கள் அடங்கிப் போய்தான் இருக்காங்க. அதிகாரிகள் ஆட்சிதான் இப்ப நடக்குதுன்னு சொல்றாங்க. ஒவ்வொரு துறையிலயும் அதிகாரிங்க புகுந்து விளையாடுறாங்க. வேளாண் கருவிகள் வாங்குறதுக்கான மானியத்த பணமா கொடுத்தாங்க. ‘இனி, பணமா கொடுக்கமாட்டோம். பொருளாதான் கொடுப்போம். வேணும்னா வாங்கிக்கோங்க... இல்லைன்னா போங்க’ங்கிற மனநிலையில அதிகாரிக இருக்காங்க. என்ன பொருள் வாங்கணும். அதுக்கு எவ்வளவு கமிஷன்னு சென்னையிலயே முடிவுபண்ணி பொருளை வாங்கி மாவட்டங்களுக்கு அனுப்பிடறாங்க. அந்தப் பொருளை விவசாயிகள்கிட்ட விக்க முடியாம கீழே இருக்கற அதிகாரிக முழிபிதுங்கிப் போய் இருக்காங்களாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘இந்த ஆட்சி வந்ததும் வேளாண்மைத்துறை பேரை உழவர் நலத்துறைன்னு மாத்தினாங்க. அதுக்குப் பதிலா, ‘ஊழல் வளத்துறை’ன்னு பேர் வெச்சிருக்கலாம் போல’’ என்று காய்கறி நக்கலாகச் சொல்ல...

‘‘இதையெல்லாம் பார்த்துட்டும் நடவடிக்கை எடுக்கமுடியாம தலைமைச் செயலாளரே கையைப் பிசைஞ்சிட்டு இருக்காராம். நமக்கு எதுக்கு வம்பு. நாம கிளம்புவோம்’’ என்று சொல்லி, மாநாட்டை முடித்துவைத்தார் வாத்தியார்.‘‘