Published:Updated:

பட்டா பிரச்னைக்குச் சிறப்பு முகாம்கள்... அரசாணை வெளியிட்ட அரசு!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

பட்டா பிரச்னைக்குச் சிறப்பு முகாம்கள்... அரசாணை வெளியிட்ட அரசு!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

ருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது அந்தப் பாழடைந்த வீடு. ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் வீட்டுக்கு வெளியே இருந்த பட்டியக் கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆடுகள் பாதைக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்தன.

‘‘இந்த முறை நம்ம ஊர்ல மழை பரவாயில்லை... ஆனா, பல ஊர்ல பெய்யுது. சில ஊர்ல பெய்யலன்னு சொல்றாங்க. நாடு முழுக்க நல்ல மழை பெய்ஞ்சா மக்க மனுசங்க பொழச்சிக்கிடுவாங்க... அந்த வருண பகவான்தான் கருணைக்காட்டணும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘மழை நிச்சயம் பெய்யும்யா... ஆனா, இந்தத் தடவையாவது பெய்யுற மழைத்தண்ணியை வீணாக்காம சேமிக்கணும். வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு, நிலங்கள்ல பண்ணைக்குட்டைகள், வரப்புக் குழிகள் அமைக்கணும்னு சமூக ஆர்வலர்கள் சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, மக்க மனுசங்க அதுல ஆர்வம் காட்ட மாட்டேங்குறாங்களேய்யா... அதைச் செய்ய ஆரம்பிச்சா போதும் கோடைக்காலத்துலயும் நாம செழிப்பா இருக்கலாம்ல’’ ஏரோட்டிக்குப் பதில் சொன்னார் வாத்தியார்.

‘‘சரிய்யா சொன்னீங்க வாத்தியாரே... நான் போன மாசம்தான் வரப்பு குழி அமைச்சேன். பண்ணைக்குட்டை அமைக்கப்போறேன்... அமைக்கப்போறேன்னு, இந்த ஆளு ரெண்டு வருஷமா சொல்லிட்டு அலையுறாரு. ஆனா, குட்டை வெட்டுன பாடு இல்ல. முதல்ல அவரை ஆர்வம் காட்டச் சொல்லுங்க’’ ஏரோட்டி மீது புகார் சொல்லியபடியே வந்து சேர்ந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘வாம்மா... என்னடா இன்னும் காணோமேன்னு நினைச்சேன். என்னைக் குத்தம் சொல்லாட்டி உனக்குத் தூக்கமே வராதே. போய் யாவாரத்தைப் பாப்பியா... அதை விட்டுட்டு பொறனி பேச வந்துட்ட’’ நக்கலாகச் சொன்னார் ஏரோட்டி.

‘‘அட... சண்டைப் போடாதீங்க. நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வந்தேன். அதைச் சொல்றேன் கேளுங்க’’ பீடிகை போட்டார் வாத்தியார்.

‘‘அட அப்படியென்ன சிறப்புச் செய்தி. சீக்கிரம் சொல்லுங்க’’ ஆவலாகக் கேட்டார் காய்கறி.

‘இன்ஷூரன்ஸ் கம்பெனிககிட்ட இருந்து விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு வாங்கித் தரணும்’னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க.


‘‘உண்மையிலேயே சிறப்புச் செய்திதான். நாம போன தடவை பட்டா பெயர் மாற்றத்துல இருக்கப் பிரச்னையைப் பத்தி பேசுனோம்ல. அது அரசாங்கத்தோட காதுக்குக் கேட்டுடுச்சு போல. உடனடியா பட்டா தொடர்பா ஓர் அரசாணை வெளியிட்டுருக்கு. இனிமே ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் பட்டா பிரச்னையைத் தீர்க்குறதுக்காகச் சிறப்பு முகாம் நடத்தப் போறாங்களாம். எல்லா மாவட்டத்திலும் முகாம் நடத்தி, வர்ற பொங்கலுக்குள்ள பட்டா பிரச்னையை முடிக்கச் சொல்லி யிருக்காங்க. இதுதொடர்பா தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெந்த் அரசாணை வெளியிட்டுருக்காரு. அதில், ‘பிழைகளைச் சரி செய்து நில உரிமை யாளர்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என வாரம் இரண்டு வருவாய்க் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கான பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் தயாரிக்க வேண்டும். தாலுகாக்களில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் சிறப்பு முகாம்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்குள் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். நிலத்தின் பதிவு எண், துணை கோட்ட எண்ணில் தவறான பதிவுகளை நீக்குதல், பட்டாதாரரின் பகுதி, பெயர், அருகேயுள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பதைத் திருத்துதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிழைகள் திருத்தம் செய்யப்படும். சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகாம்களில் இணையதள விண்ணப்பங்கள், பிற விண்ணப்பங்கள் எனத் தனித்தனி மேஜைகளை ஏற்படுத்த வேண்டும். நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டிய விண்ணப்பங்களைத் தவிர்த்து, சிறிய அளவிலான திருத்தங் களுக்கான விண்ணப்பங்களை நிறுத்தி வைக்கக் கூடாது. உடனே தீர்த்து வைக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் தொடர்பான பணிகளை மாநில அளவில் நில நிர்வாகக் ஆணையர், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் ஆய்வு செய்வார்கள்’னு அந்த அரசாணை சொல்லுது” விரிவாக விளக்கினார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


‘‘அரசாணை, அறிவிப்பு எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனா, அது முழுமையா செயல்பாட்டுக்கு வந்தா ரொம்பச் சந்தோஷம். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘இதே மாதிரி விவசாயிகளோட இன்னொரு கோரிக்கையையும் அரசு பரிசீலனை பண்ணி செஞ்சு கொடுத்தா நல்லா இருக்கும்’’ என்றார் காய்கறி.

‘‘என்ன கோரிக்கை கண்ணம்மா. சொல்லு. நாம ஊதுற சங்கை ஊதி வைப்போம். அரசு காதுக்குக் கேட்டு நல்லது நடந்தா சரிதான்’’ காய்கறியை உற்சாகப்படுத்தினார் வாத்தியார்.

‘‘தமிழ்நாட்டுல போன வருஷம் நிவர், புரெவி புயல், மார்கழி மாசம் பெய்ஞ்ச தொடர் கனமழை காரணமா, பல மாவட்டங் கள்ல சம்பா, தாளடி நெல் பயிர்கள் வீணாப் போச்சு. லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை தண்ணியில சாய்ஞ்சு கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுச்சு. குறிப்பா, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்ல கடுமையான நஷ்டம். இதனால விவசாயிகள் இடிஞ்சு போயிட்டாங்க. சரி, போனது போகட்டும். உடனடியா இன்ஷூரன்ஸ் பணம் வரும். அதை வெச்சு ஓரளவு சமாளிச்சுக்கலாம்னு நம்பிக்கையோட இருந்தாங்க.

ஆனா, 10 மாசம் இழுத்தடிச்ச பிறகு, இப்பதான் இன்ஷூரன்ஸ் இழப்பீடு பணம் கொடுக்கப் போறாங்க. இந்த மாசம் 18-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 10 விவசாயி களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துத் தொடங்கி வெச்சிருக்காரு. 6 லட்சம் விவசாயி களுக்குச் சுமார் 1,597 கோடி ரூபாய் கொடுக்கப் போறோம்னு அரசாங்கம் சொல்லியிருக்கு.

‘போன சம்பாவுல புயல், மழை பாதிப்பை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிங்க ஆய்வு நடத்தி, மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கொடுத்தாங்க. 60 சதவிகிதத்துக்கு மேல இழப்பு ஏற்பட்டாதான், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கொடுக்க முடியும். அதுதான் விதிமுறை. அப்படின்னா நிவாரணம் கொடுத்த எல்லா விவசாயி களுக்கும் மகசூல் இழப்பு ஏற்பட்டது உண்மைதானே?

அவங்க எல்லோருக்கும் இப்ப முழுமை யான இழப்பீடு கொடுக்கணும். ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு, 32,000 ரூபாய் காப்பீடு பண்ணியிருக்கோம். அதை முழுசாக் கொடுக்கணும். ஆனா, இதுல நிறைய முறைகேடு நடந்திருக்கு. சில விவசாயி களுக்கு ஏக்கருக்கு வெறும் 800 ரூபாய், சில விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய்னு கொடுத்திருக்காங்க. இன்ஷூரன்ஸ் கம்பெனிககிட்ட இருந்து விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு வாங்கித் தரணும்’னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் காய்கறி.

‘‘தமிழக அரசு விவசாயிகளோட கோரிக்கையை நிச்சயம் நிறைவேத்தும்னு நம்புவோம். மழை வர்ற மாதிரி இருக்கு. இப்ப நாம கிளம்பலாமா?’’ என்று ஏரோட்டி கேட்க, “சரி போலாம்’’ என்று வாத்தியாரும் எழுந்துகொள்ள முடிவுக்கு வந்தது மாநாடு.