Published:Updated:

வாட்ஸ்அப் குழுக்களும்... வசமாக சிக்கிய அதிகாரிகளும்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

வாட்ஸ்அப் குழுக்களும்... வசமாக சிக்கிய அதிகாரிகளும்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

முதல்நாள் பெய்த மழைக் காரணமாக குளுமையான சூழ்நிலை நிலவியது. ஊருக்கு வெளியே மேய்ச்சல் நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டு நின்றிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். கையில் குடையுடன் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், தலையில் கூடையுடன் ‘காய்கறி’ கண்ணம்மாவும் நகரத்துக்குப் போக வந்துகொண்டிருந்தனர்.

‘‘என்ன வாத்தியாரே கண்ணாம்மாக்கூட சேர்ந்து நீங்களும் காய் விக்கப் போறீங்களா... ரெண்டு பேரும் வர்றீங்க’’ சிரித்துக்கொண்டே நக்கலாகக் கேட்டார் ஏரோட்டி.

‘‘நானும் ஒரு காலத்துல காய் வித்தவன்தான்யா... என் வயல்ல விளையுற காய்களுக்கு மார்க் கெட்டுல விலை கிடைக்காதப்ப சைக்கிள்ல கூடையைக் கட்டிக்கிட்டு ஊர் ஊராப் போய் வித்திருக்கேன்யா... நம்ம கண்ணம்மாவுக்கு எதுக்கு துணைக்கு ஆளு... அது ஒரு மணிநேரத்துல வித்துட்டு வந்திடுமே’’ என்றார் வாத்தியார்.

‘‘நான் வியாபாரத்துக்குப் போறேன். வாத்தியார் வேற ஏதோ வேலையா போறாரு. அவரு எங்க போறாருன்னு தெரியணும்னா அவரை நேரடியா கேட்க வேண்டியதுதானே... என்ன ஏன்யா வம்புக்கு இழுக்குற, காலங்காத்தால உனக்கு வேற வேலை இல்லைய்யா’’ கடுகடுவெனப் பொரிந்தார் காய்கறி.

‘‘கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போறேன்யா. பையனுக்கு வாங்குன வீட்டு மனைக்குப் பட்டா மாத்துறதுக்குக் கொடுத்திருந்தேன். இன்னும் நடக்க மாட்டேங்குது. ஆன்லைன்ல விண்ணப்பிக்கணும்னு சொன்னாங்க. அதுல விண்ணப் பிச்சும் ஒண்ணும் நடக்கல. அப்புறம் சர்வேயரைப் பாக்க நடையா நடந்து ஒருவழியா நிலத்தை வந்து பார்த்து, அளந்துட்டுப் போனாங்க. அப்ப அவங்க செலவுக்கு 5,000 ரூபாய் கேட்டாங்க. ஒரு சர்வே நம்பருக்கு 2,500 ரூபாய், ரெண்டு சர்வே நம்பருக்கு 5,000 ரூபாய் கொடுங்கன்னு கேட்டாங்க. நான் ரூ.2,000 மட்டும்தான் கொடுத்தேன். அதை வாங்கிட்டுப் போனவங்க, அப்படியே படுத்துட்டாங்கப்போல. அது நடந்து ரெண்டு மாசம் ஆச்சு. இன்னும் பட்டா வந்து சேரல. எப்ப கேட்டாலும் தாசில்தார் கையெழுத்து இருக்குன்னு சொல்றாங்க. அதுதான் இன்னிக்கு கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கலாம்னு போறேன்யா’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.

‘‘நிலம் வாங்கும்போதே பட்டா மாறுதலுக்கும் பணத்தை வாங்கிடுறாங்க. ஆனா, பட்டா மாறுதல் நடக்குறது இல்ல. ஆன்லைன் மூலமா உடனே கிடைச்சிடும்னு போன ஆட்சியில சொன்னாங்க. ஆனா, அதனால மக்களுக்குத் தான் கூடுதல் செலவு. இந்த ஆட்சியில பதிவு முடிஞ்சதும் பட்டா மாறுதல் நடந்திடும்னு சொல்லியிருக்காங்க, என்ன நடக்குதுன்னு போகப்போகத்தான் தெரியும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘விகடன் இணையதள செய்தியை மேற்கோள்காட்டி, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறாரு.’’


‘‘சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி அரசு திட்டங்களைப் போட்டாலும், அது மக்களுக்குச் சேராம இடைஞ்சலா இருக்கறது அதிகாரிங்கதான். இவங்க திருந்துறவரைக்கும் என்ன திட்டம் போட்டாலும் ஒண்ணும் நடக்காது’’ எரிச்சலாகச் சொன்னார் காய்கறி.

‘‘உண்மைதான் கண்ணம்மா. அப்படியொரு அதிகாரியை வறுத்தெடுத்திட்டாராம் ஒரு விவசாயி. தஞ்சை மாவட்டத்துல, விவசாயிகள், அரசு அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்அப் குரூப் ஒண்ணு இருக்கு. தஞ்சாவூர்ல ஏற்கெனவே கலெக்டராக இருந்த கோவிந்த ராவ்தான் அதைத் தொடங்கினாரு. விவசாயிக அவங்க பிரச்னைகளை அதுல பதிவு செய்வாங்க. அதிகாரிகள் உடனடியாகப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பாங்களாம். அதை கலெக்டரும் கண்காணிச்சு, அதிகாரி களுக்கு உத்தரவு போடுவாராம்.

அந்த குரூப்ல, வெற்றிலை கொடிக்கால்களுக்காக விதைக்குற அகத்தி, செம்பை விதைகளுக்குத் தமிழ்நாடு முழுக்க கடுமையான தட்டுப்பாடு. ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்ட விதைகள், இப்ப கிலோ 1,500 ரூபாய். இதனால் தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார கிராமங்கள்ல உள்ள வெற்றிலை விவசாயிகள் சிரமப்படுறாங்க. இதைப் பத்தி, விகடன் இணையதளத்துல செய்தி வெளியிட்டதுனால, ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கு’னு வெற்றிலை விவசாயி சுகுமாறன்ங் கறவரு ஒரு பதிவு போட்டிருக்காரு.

அதுக்கு பதில் சொன்ன தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர், ‘‘ ‘கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில், அகத்தி விதைகள் ஆன்லைனில் கிலோ 350 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. தொடர்பு கொள்ளுங்கள்’னு ஒரு போன் நம்பரை பதிவு பண்ணியிருக்காரு. அந்த நம்பருக்கு சுகுமாறன் பேசுனதுக்கு, ‘இது தீவனத்துறை. ஒரு விவசாயிக்கு 100 கிராம்தான் விதை தருவோம்’னு சொல்லி யிருக்காங்க.

இதை குரூப்ல ஆதங்கத்தோடு பதிவு செஞ்ச சுகுமாறன், ‘20 சென்ட் வெற்றிலைச் சாகுபடி கொடிக்கால்களுக்கு 6 கிலோ அகத்தி விதை தேவை. இதுகூடத் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநருக்குத் தெரியாதா? இல்லை, விவசாயிகளையும், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் ஏமாற்றத் தவறான தகவல்களைப் பதிவு செய்தாரா? அவருக்குத் தஞ்சை ஆட்சியர் தகுந்த அறிவுரை வழங்கணும்’னு தன்னோட வருத்தத்தைக் கொட்டித் தீர்த்துட்டாராம்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


அதைப் பார்த்து அதிகாரிகள் மிரண்டு போயிட்டாங்களாம். அதுதான் இப்ப விவசாயிகள் மத்தியில பரபரப்பா பேசப் பட்டுக்கிட்டு இருக்கு’’ என்ற வாத்தியார், “திருவையாறு தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான துரை.சந்திரசேகர், இந்தப் பிரச்னை சம்பந்தமா வெளியான விகடன் இணையதள செய்தியை மேற்கோள்காட்டி, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறாரு. நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் சொல்லியிருக்கிறாராம்” என்றார்.

‘‘வாட்ஸ்அப் குழு சம்பந்தமா நானும் ஒரு தகவலைக் கேள்விப்பட்டேன். முதலமைச்சரின் முதன்மைத் தனிச் செயலர் உதயச்சந்திரன், விவசாயிகள் தொடர்பான வாட்ஸ் அப், டெலிகிராம் குழுக்கள்ல இணைஞ்சிருக்காராம். இயற்கை விவசாயத்துல தமிழகம் சிறந்த மாநிலமா மாறணும்னு தனிக்கவனம் எடுத்துக்கிட்டு வேலை செய்யுறாராம். ‘ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட்டுல ஆயிரக் கணக்கான கோடி ஒதுக்கீடு செஞ்சாலும், அதனால விவசாயிகளுக்கோ, விவசாயத் துறைக்கோ எந்த முன்னேற்றமும் இல்லை... இனிமே அப்படி இருக்கக் கூடாது. நீங்க, நான் வாங்குற சம்பளம் முதற்கொண்டு நாம செலவு செய்யுற ஒவ்வொரு பணமும் மக்களோட வரிப்பணம். அதை மனசுல வெச்சுகிட்டு இனிமேலாவது முறையா திட்டம் போட்டுச் செயல்படுத்துங்க’னு அதிகாரிகளை வறுத்தெடுத்துட்டு இருக்காராம்’’ என்றார் ஏரோட்டி.

‘‘நல்லது நடந்தா சரிதான். இந்த அரசாங்கம் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரமா அமலாக்கப்படும்னு சொல்லியிருக்காரு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன். அது அறிவிப்பா மட்டும் இல்லாம தீவிரமா செயல்பாட்டுக்கு வந்தா நல்லாயிருக்கும்’’ என்றார் காய்கறி.

‘‘பிளாஸ்டிக் தடையை முழுமையா கொண்டு வர்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்தத் துறை சார்பா ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’னு ஒரு இணையதளம் இருக்கு. அதுல 2018-ம் வருஷம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்த அறிவிப்புகள்தான் இருக்கு. அதுக்கு பிறகு அரசு மாறி, அந்தத் துறைக்குப் புது அமைச்சர் வந்துட்டாரு. ஆனாலும் இணைய தளம் இன்னும் மாற்றம் ஆகாமலே இருக்கு. அமைச்சர் முதல்ல அதைச் சரிசெய்யட்டும்’’ என்ற வாத்தியார் ‘‘தமிழ்நாட்டுல 4.23 லட்சம் விவசாயிகள் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செஞ்சிட்டு காத்திருக்காங்க. இந்த நிலையில மின்சாரத் துறை மானிய கோரிக்கையில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்படும்னு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிச்சிருக்காரு’’ என்று முடித்தார்.

‘‘பேச்சு சுவாரஸ்யத்துல நடையிலே வேகம் குறைஞ்சிடுச்சி. அப்புறம் பஸ்ஸை விட்டுடுவோம். வேகமா நடங்க’’ எனக் காய்கறி சொல்லவும், வாத்தியார் நடையைக் கட்டினார். முடிவுக்கு வந்தது மாநாடு.

டி.வெங்கடகிருஷ்ணா
டி.வெங்கடகிருஷ்ணா

நபார்டு வங்கிக்குப் புதிய தலைமைப் பொது மேலாளர்!

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல புதிய தலைமைப் பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். 1988-ம் ஆண்டு நபார்டு வங்கியில் பணியில் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா, மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், நபார்டு வங்கியின் துணை நிறுவனமான நாப்கிசான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் இருந்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism