Published:Updated:

நாட்டுக்கு அழகல்ல!

ஆசிரியர்

தலையங்கம்

நாட்டுக்கு அழகல்ல!

தலையங்கம்

Published:Updated:
ஆசிரியர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

இந்தியத் தலைநகர் டெல்லியில், மீண்டும் போராட்ட மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன. பச்சைத்துண்டு போட்டவர்கள், பரிதாபத்துடன் குவிய ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் ஊருக்குள்ளேயே நுழையவிடாமல் கைது செய்து அப்புறப்படுத்தும் வேலைகளை மட்டும் செவ்வனே செய்ய ஆரம்பித்திருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. இந்தப் போராட்டத்துக்குக் காரணமே, கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாததுதான்.

‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்குவோம்’ என்று சில ஆண்டு களாகவே முழங்கிக்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் 4 மாதங்களே இருக்கின்றன, அவர் குறிப்பிட்டிருக்கும் இலக்கு முடிவுக்கு வர. ஆனால், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்னும் விவசாயிகளின் ‘குறைந்தபட்ச’ கோரிக்கைகூட இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

‘விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துகிறோம்’ என்றபடி, 2020-ம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தனர் விவசாயிகள். கொஞ்சம்கூட அசைந்துகொடுக்காமல் இருந்த மத்திய அரசு, விரைவில் வரவிருந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனதில்கொண்டு, அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ‘நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றுகூட அப்போது உருக்கமாகப் பேசினார் மோடி.

‘குறைந்தபட்ச ஆதார விலை’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும்’ என்று அரசுத் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழியின் பேரில்தான் அப்போது போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், ஓராண்டாகியும் ஒரு துரும்புகூட அசையவில்லை. இதைக் கண்டித்துதான், டெல்லியில் மீண்டும் போராட்ட மேகங்கள்.

விவசாயிகள், விளைபொருள்களைத் தூற்றியெடுக்கும் களத்தில் நிற்பதுதான் நாட்டுக்கு அழகு. திரும்பத் திரும்ப அவர்கள் போராட்டக் களத்தில் நிற்பது, நாட்டுக்கு அழகல்ல.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்