Published:Updated:

நேரடி நெல் விதைப்புக்கு போலீஸ் பாதுகாப்பு!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

நேரடி நெல் விதைப்புக்கு போலீஸ் பாதுகாப்பு!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

ஆனி மாதத்திலேயே அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழை காரணமாக, ஏரியில் நீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து பூரித்தபடியே ஏரிக்கரையில் நடந்து கொண்டிருந்தனர் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். காலை வியாபாரத்தை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “வானம் கருக்கலா இருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல மழை பிடிக்கப் போகுது. வாங்க, யூனியன் ஆபீஸ்ல போய் நின்னுட்டு, மழைவிட்ட பிறகு போகலாம்’’ என்று அழைத்தார். சொல்லி வைத்தாற்போல தூறல் ஆரம்பிக்க, ஓட்டமும் நடையுமாக மூவரும் யூனியன் ஆபீஸ் வந்து சேர, பெருமழையுடன் ஆரம்பமானது அன்றைய மாநாடு.

‘‘தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதி விவசாயிங்க பிரச்னை புதுப்பிரச்னையா இருக்கு. அதைக் கேட்டா தலையெல்லாம் சுத்துது. வழக்கமா, பூச்சி, நோய்த் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை, உரப் பற்றாக்குறைனு புலம்புவாங்க விவசாயிங்க. இங்க என்னடான்னா... தூசி பிரச்னையால பெரும் தொந்தரவுகளைச் சந்திச்சிக்கிட்டு இருக்காங்களாம் விவசாயிங்க’’ என்று ஏரோட்டி சொல்ல,

“அதென்னய்யா தூசி பிரச்னை?’’ என கன்னத்தில் கைவைத்தார் காய்கறி.

‘‘ஆண்டிப்பட்டி சுத்துவட்டார கிராமங்கள்ல விவசாய நிலங்களுக்கு இடையில ஏகப்பட்ட கல்குவாரிங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுல நிறைய குவாரிங்களுக்கு அனுமதியே இல்லை. ஆனாலும், அரசியல்வாதிங்க, அதிகாரிங்களுக்குக் கப்பம் கட்டிட்டு, 24 மணி நேரமும் குவாரிங்க செயல்பட்டுக்கிட்டிருக்கு. அங்க இருந்து கிளம்பி புகைமண்டலமா வர்ற தூசியால, விவசாய பயிருங்க சுணங்கி வளர்ச்சி பாதிக்கப்படுறது விவசாயிகளோட தொடர் அவஸ்தை. குவாரிகள்ல அடிக்கடி வெடி வைக்குறதுனால, நிலத்துல அதிர்வு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குப் போயிடுறதால... கிணறுகள்ல திடீர் திடீர்னு தண்ணி கீழ போயிடுது. பயிர்களுக்குத் தண்ணி பாய்ச்ச முடியாம விவசாயிங்க தவிச்சிக்கிட்டு இருக்காங்க’’ என்றார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“அதெப்படி குவாரிகள்ல வெடி வைக்குறதுனாலதான் தண்ணி மட்டம் கீழ போகுதுனு உறுதியா சொல்லமுடியும்?’’ என்று கேள்வியைப் போட்டார் வாத்தியார்.

‘‘கல்குவாரிங்க வர்றதுக்கு முன்னயெல்லாம் இப்படிப்பட்ட பிரச்னைகளைச் சந்திச்சதில்லையாம் அந்தப் பகுதி விவசாயிங்க. அதுமட்டுமில்லாம, குவாரியில வெடி வெச்ச பிறகு, கிணறுகள்ல நீர்மட்டம் கீழ போயி கிடக்காம்’’ என்று தன்னுடைய வாதத்தை அழுத்தமாக முன்வைத்தார் ஏரோட்டி.

‘‘கல் நெஞ்சம் புடிச்ச அதிகாரிங்க, கல்குவாரிக்காரங்களுக்குச் சாதகமாத்தான் நடந்துக்குவாங்க. இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே’’ என்று கடுகடுப்புடன் சொன்னார் காய்கறி.

‘‘எல்லா அதிகாரிங்களும் மோசம்னு ஒட்டுமொத்தமா குறை சொல்லிட முடியாது’’ என்று பீடிகை போட்ட வாத்தியார், தொடர்ந்தார்.

நேரடி நெல் விதைப்புக்கு
போலீஸ் பாதுகாப்பு!
நேரடி நெல் விதைப்புக்கு போலீஸ் பாதுகாப்பு!

“வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அந்தப் பகுதியில உள்ள தொழிற்சாலை கழிவுகளால விவசாயிங்களுக்கு ஏற்படுற பாதிப்பை தடுக்க வித்தியாசமான ஐடியா போட்டுருக்கார். அதாவது, அங்க ஓடக்கூடிய மலட்டாறு, ரொம்பப் பரிதாப நிலையில இருக்குதாம். ஆம்பூர் பகுதியில இருக்கற தொழிற்சாலைங்க, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமலே வெளியில திறந்துவிடுறதுனால, ஆத்துத் தண்ணியில நச்சுத்தன்மை அதிகமாயிடுச்சி. அதை பாய்ச்சுறதுனால பயிருங்க பாதிக்கப்படுறதா கலெக்டர்கிட்ட புகார் தெரிவிச்சிருக்காங்க, விவசாயிங்க. அதனால, ‘கழிவுநீரை வெளியேத்துற தொழிற்சாலைங்க, இனிமே ரெண்டு ஏக்கர் நிலத்துல சொந்தமா விவசாயம் செய்யணும். தங்களோட தொழிற்சாலையில இருந்து சுத்திகரிச்சி வெளியிடறதா சொல்லப்படுற கழிவுநீரை, அந்த நிலத்துக்கு பாசனநீரா பயன்படுத்தணும். இதுக்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்’னு கலெக்டர் சொல்லியிருக்கார்’’ என்றார் வாத்தியார்.

“சரி நான் ஒரு சேதி சொல்றேன் கேளுங்க. விவசாயி ஒருத்தர், ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்போட நேரடி நெல் விதைப்பு செஞ்சிருக்காரு. அதுல ஏற்பட்ட பிரச்னையில போலீஸ் அதிகாரி ஒருத்தர் காயமடைஞ்சிருக்காருனா பார்த்துக்குங்க’’ என்று காய்கறி சொல்ல, “என்னது... நெல்லு விதைக்கறதுக்கு போலீஸ் பாதுகாப்பு, அடிதடி சண்டையா? கேக்கவே பயங்கரமா இருக்கே’’ என பதைபதைத்தார் ஏரோட்டி.

நேரடி நெல் விதைப்பு
நேரடி நெல் விதைப்பு

‘‘அந்த ஊர்ல விவசாயிங்களுக்கும் விவசாயத் தொழிலாளிங்களுக்கும் இடையில கொஞ்சநாளாவே கூலிப் பிரச்னை. நாத்து நடறதுக்கு கூலி கொடுத்து கட்டுப்படியாகலைனு சொல்லி, நேரடி நெல் விதைப்புச் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க விவசாயிங்க. இதை அனுமதிக்க முடியாதுனு விவசாயத் தொழிலாளருங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. ‘தமிழக அரசாங்கமே நேரடி நெல் விதைப்பை ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கு. எங்களுக்கு நேரடி நெல் விதைப்புதான் சவுகரியமா இருக்கு. அதனால, போலீஸ் பாதுகாப்பு கொடுங்க’னு மயிலாடுதுறை கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க விவசாயிங்க. இந்த நிலையிலதான் ஒரு விவசாயியோட அஞ்சு ஏக்கர் நிலத்துல போலீஸ் பாதுகாப்போட, நேரடி நெல் விதைப்பு நடந்திருக்கு.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, உள்ளூர் விவசாயத் தொழிலாளிங்க, அவங்களுக்கு ஆதரவா கம்யூனிஸ்டு கட்சிக்காரங்கனு பலரும் அந்த நிலத்துல கூடியிருக்காங்க. நேரம் ஆகஆக வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பா மாற ஆரம்பிச்சிருக்கு. இதுல போலீஸ் அதிகாரி ஒருத்தருக்கே காயம் ஏற்பட்டிருக்கு. கம்யூனிஸ்டுக்காரங்க ஐம்பது பேரை கைது செஞ்சிருக்காங்க. டெல்டா மாவட்டங்கள்ல கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சாலை மறியல் பண்ணியிருக்காங்க’’ என்றார்.

“அட, நேரடியா நெல் விதைக்கறதுலகூட அரசியலா...?’’

நேரடி நெல் விதைப்புக்கு
போலீஸ் பாதுகாப்பு!
நேரடி நெல் விதைப்புக்கு போலீஸ் பாதுகாப்பு!

“அரசியல் மட்டுமில்ல... சாதியும் இதுல சங்கமிச்சிருக்காம். அந்த ஊர் கோயில் பிரச்னையில ஆரம்பிச்சு ஒரு சில விஷயங்கள்ல சாதிரீதியான மோதல் ஏற்கெனவே நீடிச்சிட்டிருக்காம். அதுதான் நேரடி நெல் விதைப்புலயும் எதிரொலிச்சிருக்காம்’’ என்று மேற்கொண்டு காய்கறி விளக்கம் தர,

‘‘ம்... முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்னதான் கூலிப்பிரச்னை, சாதிப் பிரச்னையெல்லாம் தலைதூக்கும். ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கிறது, வேலை கொடுக்காம புறக்கணிக்கறதுனு எப்பவும் பிரச்னை புகைஞ்சிகிட்டே இருக்கும். அந்தப் ‘பாரம்பர்யம்’ மறுபடியும் தலைதூக்க ஆரம்பிச்சிடுச்சி’’ என்று வேதனைக்குரலில் சன்னமாகச் சொன்னார் வாத்தியார்.

“ம்... ஏதேதோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க வாத்தியாரய்யா. கவலைப்படாதீங்க. காலம் இப்படியே போயிடாது’’ என்று ஏரோட்டி ஆறுதலாகச் சொல்லி நிறுத்த, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்ததது.