அலசல்
Published:Updated:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... தமிழக அரசின் சட்டம் வெறும் கானல்நீரா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு, அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தவுடன் டெல்டா பகுதியில் ஏற்பட்ட உற்சாகமும் வரவேற்பும், மசோதா தாக்கலான பிறகு குறையத் தொடங்கியுள்ளன. ‘`ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக அகற்ற, மசோதா வழிவகை செய்யவில்லை’’ என்கின்றனர் சூழலியலாளர்கள்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன், ‘‘மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு, அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ‘இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது’ என்று இந்தச் சட்டத்தின் 4(2)(1)a பிரிவு அறிவித்திருப்பது, வேளாண்துறை அமைச்சரின் நோக்கவுரைக்கு எதிராகவே உள்ளது. அமைச்சரின் நோக்கவுரையில், ‘கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகள் வேளாண்மையை பாதித்து மாநில உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விட்டன’ எனத் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்தச் சட்டமே கொண்டுவரப்படுகிறது என்றால், அந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்தச் சட்டத்துக்கே புறம்பானதாகாதா?

கோ.சுந்தர்ராஜன் - பி.ஆர்.பாண்டியன் - துரைக்கண்ணு
கோ.சுந்தர்ராஜன் - பி.ஆர்.பாண்டியன் - துரைக்கண்ணு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் இயக்குநரகம் புதிதாக அறிவித்துள்ள கொள்கையின்படி, அனைத்து கிணறுகளும் (ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட) ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க் கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (fracking) முறைப்படி மீத்தேன் உள்ளிட்ட எந்த ஹைட்ரோ கார்பனையும் எடுத்துக்கொள்ள முடியும் என்றாகிவிடும். அதனால், செயல்படக்கூடிய கிணறுகளைக் கைவிட மாட்டோம் என அறிவித்திருப்பது எந்தப் பயனையும் தராது.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்தச் சட்டம் பாதிக்காது என்கிற ஷரத்து இருப்பது, இந்தச் சட்டத்தின் தேவையை முழுமையாக நிராகரிக்கிறது. சென்ற ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 489 கிணறுகள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு, வேதாந்தா நிறுவனத்துக்கும் ஓ.என்.ஜி.சி-க்கும் ஒப்பந்தமாகியுள்ளன. இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கெனவே இருக்கும் 700 கிணறுகளையும் செயல்பட அனுமதித்தால், `வேளாண் பாதுகாப்பு மண்டலம்’ என்ற வார்த்தைகளே அர்த்தமற்றதாகிவிடும்.

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு விஷயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது’ என்கிற ஷரத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற கோட்பாட்டை அர்த்தமற்றதாக்கிவிடும். குறிப்பாக, கெயில், ஐ.ஓ.சி, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் எரிவாயுக் குழாய்களுக்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு எதிராகவே இந்தச் சட்டம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களை எடுத்துச்செல்வது எந்தவிதத்தில் விவசாயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

சேலம் மாவட்டம் தலைவாசலில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடும்போது, ‘காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்று கூறியிருந்தார். ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிலோ, அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இது, விடுபட்ட மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதில் உள்ள இன்னொரு சிக்கல், நிலமும் விவசாயமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் மத்திய அரசின் கீழ் வரும். 2019-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியே, மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கும் திட்டத்தை நிறுவுவதற்கான அனுமதியாகக் கருதப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடும். மத்தியில் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, இதுகுறித்து தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

வேளாண் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக அறிஞர்கள், ஆய்வாளர்கள், விவசாயிகள், சட்ட நிபுணர்கள்கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்தச் சட்டவரைவை அந்தக் குழுவிடம் ஒப்படைத்து, முழுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். பாதுகாப்பு மண்டலச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுதான் சட்டத்தைக் காப்பாற்றும். இல்லையென்றால், நீட் விலக்கு சட்டம் போலவே கிடப்பில் போடப்படும்’’ என்கிறார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘கடலூர், நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க வெளியிட்டிருந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 2017-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்துசெய்துள்ளது. இதற்கான புதிய அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார். அது உடனடியாக தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு விவசாய அமைப்புகள் முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

‘`சட்டத்தில் உள்ள சில ஷரத்துகள் அறிவிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த தடையாக இருக்கின்றவே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டோம். ‘‘2016-ம் ஆண்டுக்குப் பிறகு மாநில அரசால் அனுமதிக்கப்பட்டு சிதம்பரம், சீர்காழி பகுதியில் செயல்படுத்தவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தை, தற்போது ரத்துசெய்து அரசாணை பிறப்பித்துவிட்டனர். ஓ.என்.ஜி.சி நிறுவனம் புதிய கிணறு அமைப்பதற்கோ ஆய்வு நடத்துவதற்கோ 2016-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை இன்றைக்கும் தொடர்கிறது. வேறு எந்த இடத்திலும் அரசு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி பெறாமல்தான் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, சோழங்கநல்லூர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைத்தார்கள். அதில், பெரியகுடி கிணற்றை வெளியேற்றிவிட்டோம். சோழங்கநல்லூர் கிணற்றை மூடுவதில் சட்டச்சிக்கல் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பின் மூலம் அந்தக் கிணற்றுப் பணிகளும் நின்றுவிடும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் என்பது, ஓ.என்.ஜி.சி கச்சா எண்ணெய் எடுத்துக்கொண்டிருக்கும் பணிகள். அதை நிறுத்தினால், பாதுகாப்பு மண்டலம் என அறிவிக்க முடியாது. அவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிடுவார்கள். கச்சா எண்ணெய் எடுப்பதைவிட, ஆய்வுப்பணிகளால்தான் பாதிப்பு அதிகம். அதனால்தான் ஆய்வுப்பணிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்கிறோம்.

‘ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும்; மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி தேவையில்லை’ என்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பு, இந்தியா முழுமைக்குமானது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் அந்த அறிவிப்புக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை மாநில அரசு கொடுக்கும் என நம்புகிறோம். அனைவரும் சேர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டார்கள். தொடர்ந்து ஒவ்வொரு சிக்கலையும் சட்டப்படி தீர்த்து, இதை முழுமையான பாதுகாப்பு மண்டலமாகச் செயல்படுத்துவார்கள். எனவே, மாநில அரசின் செயல்பாடுகளை வரவேற்கிறோம்’’ என்றார்.

இதுதொடர்பாக, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ‘‘காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதோடு நிற்காமல், அதை முழுமையாகச் செயல்படுத்த முதலமைச்சர் ஆர்வமாக இருக்கிறார். அதற்கான செயல்களை, தொடர்ந்து செய்துவருகிறார். சட்டசபையில் இதுதொடர்பாக அவர் வாசித்த அறிக்கையிலேயே பல்வேறு சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட்டார். இது முழுமையான பாதுகாப்பு மண்டலமாகச் செயல்படும்’’ என்றார்.