Published:Updated:

``ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார்!” சேலத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

காவிரியின் குறுக்கே ஆதனூர் குமாரபாளையத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதுகூட தெரியாமல், கட்டப்படவில்லை என்று யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பொன்னாகவுண்டர் திருமண மண்டபத்தில் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் இன்று சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். பிறகு 531 பயனாளிகளுக்கு 5.21 கோடியில் நலத்திட்ட உதவிகளைச் செய்தார்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், ``நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்னைகள் இக்கூட்டத்தின் வாயிலாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டங்களில் பெரும்பாலும், முதியோர் ஓய்வூதியம், நீண்ட நாள்களாகக் குடியிருக்கும் இடத்துக்குப் பட்டா கோரிக்கை, பட்டா மாறுதல் சம்பந்தமான மனுக்களே அதிகமாக வருகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்வர். தகுதியான மனுக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கான காரணத்தையும் தெரிவிக்கப்படும்.

CM EPS
CM EPS

வீரபாண்டி தொகுதிக்குப் பசுமை வீடுகள், மேம்பாலப்பணிகள், சாலைகள் எனப் பல நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. `இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லுகிறார். ஊரகத்துறை, வருவாய்த்துறை, பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மத்திய கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 40,000 ஏரிகள் இருக்கின்றன. அது குடிமராமத்து திட்டத்தின் மூலம் படிப்படியாகத் தூர்வாரப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் வெளிநாடு சென்று வந்தபோது அடுத்து எந்த நாட்டுக்குப் போகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். `இஸ்ரேல் செல்ல இருக்கிறேன். இங்கு நாம் ஒரு ஏக்கருக்குப் பயன்படுத்தும் நீரை அவர்கள் 7 ஏக்கருக்குப் பயன்படுத்துகிறார்கள். நகர்ப்புறத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரியில் நிரப்பிச் சுத்திகரிப்பு செய்து விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்வையிடுவதற்காகச் செல்வேன்' என்றேன்.

அதற்கு ஸ்டாலின் `காவிரி நீரைச் சேமிக்க வக்கில்லை' என்கிறார். அவருடைய ஆட்சியில் காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள். தடுப்பணை என்ற பேச்சே எடுக்காத ஸ்டாலின் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. நான் நீர் மேலாண்மை திட்டத்துக்காக 5 அதிகாரிகளை நியமித்திருக்கிறேன். அவர்கள் மேட்டூர் டு கொள்ளிடம் வரை ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்.

காவிரியின் குறுக்கே ஆதனூர் குமாரபாளையத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதுகூட தெரியாமல், கட்டப்படவில்லை என்று யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார். கரூர் அருகேயும் தடுப்பணை கட்ட இருக்கிறோம். 1,000 கோடி ஒதுக்கி, நீர் ஓடைகளில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியினர் இதெல்லாம் தெரியாமல் வாய் சவடாலாக பேசுகிறார்கள். நாங்கள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசுகிறார்கள்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழக முதல்வர் கேரள முதல்வர் சந்திப்பு நடந்திருக்கிறது. கேரள முதல்வரைச் சந்தித்து முல்லைப் பெரியாறு பிரச்னை, ஆழியாறு பிரச்னைகளைப் பேசி தமிழகத்துக்குத் தண்ணீர் கேட்டேன். தருவதாகச் சொன்னார். இதைத் தி.மு.க-வைச் சேர்ந்த துரைமுருகன் விமர்சனம் செய்கிறார். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன், அவர் காவிரி பிரச்னையைத் தீர்த்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பற்றி பேசினாரா? இல்லை அவருடைய சொந்த மாவட்டத்தில் உள்ள பாலாறு பிரச்னையைப் பற்றி பேசினாரா? எத்தனை தடுப்பணைகளைக் கட்டினார்கள். ஒரு முயற்சி செய்கிறோம். அது நிறைவேறிவிட்டால் எங்களுக்குப் பெயர் கிடைத்து விடுமே என்று எங்களை விமர்சிக்கிறார்கள். கடந்த காலத்தில் தி.மு.க பதவி மட்டும் அனுபவித்தது. நாங்கள் மக்கள் பிரச்னையை பேசுகிறோம்'' என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் - ப்ளஸ்/மைனஸ் என்னென்ன? #VikatanPhotoCards
அடுத்த கட்டுரைக்கு