Published:Updated:

நிலம் நீர் நீதி: நிரம்பிய ஏரி... கசியும் தண்ணீர்... அரசின் அலட்சியத்தால் கவலையில் விவசாயிகள்!

Nariyampakkam Lake
Nariyampakkam Lake

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், நரியம்பாக்கம் கிராமத்திலிருக்கும் நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதியை இந்த கொரோனா காலத்தில்தான் சீரமைத்துள்ளனர். ஆனால், தற்போதைய மழைக்கே அது தாங்கவில்லை.

நிவர் புயல்... சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையைக் கொண்டு சேர்த்து, ஏரிகள், குளங்கள் என்று பலவற்றின் நீர்மட்டத்தையும் உயர்த்தியிருக்கிறது.

நரியம்பாக்கம் ஏரி
நரியம்பாக்கம் ஏரி

இந்த மகிழ்ச்சியான செய்திக்கு நடுவே, ``அரசாங்கம் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த மகிழ்ச்சி இன்னும் கூடுதலாகியிருக்கும். அரசியல்வாதிகளின் கொள்ளை மனோபாவம் மற்றும் அதிகாரிகளின் அலட்சிய மனோபாவம் போன்ற காரணங்களால் நீர்நிலைகளில் பெரும்பாலானவை சரிவர தூர்வாரப்படாமலும், சரிவர பராமரிக்கப்படாமலும் இருக்கின்றன என்பதே உண்மை.

பல ஏரிகள் இன்னமும் நிறையவில்லை. அதுமட்டுமல்ல, சீரமைப்புப் பணிகளும் முறையாக நடக்கவில்லை. அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தால், இன்னும் பல மடங்கு தண்ணீர் சேமிக்க வாய்ப்பு இருந்திருக்கும். விவசாயம், குடிநீர், கால்நடைகளுக்கான தேவை, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான தேவை என அந்த நீர் அடுத்த ஓராண்டுக்குப் பயன்பட்டிருக்கும்” என்கிற ஆதங்க குரல்கள்தான் தமிழகம் முழுக்கவே பரவலாக ஒலிக்கின்றன.

உடைந்த கலங்கல் பகுதி
உடைந்த கலங்கல் பகுதி

ஒரு சோறு பதமாகக் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கிறது, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், நரியம்பாக்கம் கிராமத்திலிருக்கும் நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி. இந்த கொரோனா காலத்தில்தான் இதைச் சீரமைத்துள்ளனர். ஆனால், தற்போதைய மழைக்கே அது தாங்கவில்லை. கான்கிரீட்டைப் பொத்துக்கொண்டு வீணாக வெளியில் பாய்ந்துகொண்டிருக்கிறது தண்ணீர். சென்னையில் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகும் நீர்நிலைப் பராமரிப்பில் பாடங்கள் கற்றுக்கொள்ள அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தயாராக இல்லை. அவற்றையும் பணம் காய்க்கும் மரங்களாகவே பார்க்கின்றனர் என்பதற்கு சாட்சியாகத்தான் உடைத்துக்கொண்டு ஓடுகிறது அந்தத் தண்ணீர்.

2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு, வாசகர்களுடன் இணைந்து விகடன் குழுமம் `நிலம்... நீர்... நீதி...’ என்கிற திட்டத்தை உருவாக்கியது. விகடன் குழுமத்தின் அறத்திட்டப் பணிகளுக்காக செயல்பட்டுவரும் வாசன் அறக்கட்டளை சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகள் தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஏரிகளின் மீது மக்களின் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் இடம்பெறும் குழுக்களை உருவாக்கி, ஏரிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது வாசன் அறக்கட்டளை. இதுகுறித்தெல்லாம் ஆனந்த விகடன் குழும இதழ்கள், இணையதளம் மற்றும் வெப் டிவி வாயிலாகத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

நிலம் நீர் நீதி
நிலம் நீர் நீதி

இரண்டாம் கட்டமாக... சீரமைக்கப்பட்ட ஏரிகளின் கரைகளை மேலும் பலப்படுத்தும் பொருட்டு கல்பதிக்கும் பணிகள் (Revetment Stone) கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி, 71 ஏக்கர் பரப்பளவில் உள்ள நரியம்பாக்கம் ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிக்கரையின் மொத்த நீளம் 1,382 மீட்டர்... அகலம் 8 அடி. இதில் கான்கிரீட் பிளாக் பதிக்கும் பணிகள் 40 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏரி நிறைந்து கடல்போல ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது. இதன்மூலம் நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள 60 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், கால்நடைகள், பறவைகள், சிறுவிலங்குகள் எனப் பலதரப்பின் நீர்த்தேவையும் பூர்த்தியாகும்.

இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, 19,61,000 ரூபாய் மதிப்பில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அந்தக் கலங்கல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்துதான் தற்போது பொத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

தண்ணீர் வெளியேறும் கலங்கல் பகுதி
தண்ணீர் வெளியேறும் கலங்கல் பகுதி

`ஏரியின் பழைய கலங்கலை அகற்றாமல், அதன்மீதே புதிய கலங்கலைக் கட்டியிருக்கிறார்கள். பெயருக்கு சிமென்ட் உள்ளிட்டவற்றைப் பூசிவிட்டு, கணக்குக் காட்டியுள்ளனர்.

விகடன் சீரமைத்து கொடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிரம்பி...

Posted by Pasumai Vikatan on Tuesday, December 1, 2020

இந்தக் கலங்கலைக் கட்டுவதற்கு இத்தனை லட்சம் தேவையே இல்லை. அப்படியிருந்தும் லட்சம் லட்சமாகக் கொட்டிக் கட்டியதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதுதான் இந்த மழைக்குக்கூட தாங்காமல் பல் இளிக்கிறது’ என்று வேதனை பொங்க குற்றம்சாட்டுகின்றனர் கிராம மக்கள். `இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதும் கிராம மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

இதே ஊராட்சியிலுள்ள மற்றொரு ஏரியான சிறுமத்தூர் ஏரியிலும் மதகு மற்றும் கலங்கலை செப்பனிட விகடன் அறத்திட்டப்பணி சார்பில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மழை குறுக்கிட்டதால் கலங்கல் மற்றும் மதகின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளவிருப்பதாகக்கூறி அனுமதியை ரத்து செய்துவிட்டனர் அதிகாரிகள். ஆனால், இந்தக் கலங்கல் மற்றும் மதகு இதுவரை சீரமைக்கப்படவில்லை. அத்துடன், இவ்வளவு பெரிய மழைக்குப் பிறகும்கூட முழுக்கொள்ளவுக்கு நீர் நிறையாமல் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது சிறுமாத்தூர் ஏரி.

தண்ணீர் கசியும் இடம்
தண்ணீர் கசியும் இடம்
Vikatan

இந்தப் பிரச்னைகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, ``இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன். விரைவில் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு