Published:Updated:

நிலநடுக்க பிரதேசத்தில் மேக்கேதாட்டூ அணை! கட்டுவதற்குத் தடைபோடும் கர்நாடக நிபுணர்கள்!

மேக்கேதாட்டூ
பிரீமியம் ஸ்டோரி
மேக்கேதாட்டூ

ஆய்வு

நிலநடுக்க பிரதேசத்தில் மேக்கேதாட்டூ அணை! கட்டுவதற்குத் தடைபோடும் கர்நாடக நிபுணர்கள்!

ஆய்வு

Published:Updated:
மேக்கேதாட்டூ
பிரீமியம் ஸ்டோரி
மேக்கேதாட்டூ

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று தமிழர்களைப் பற்றி பெருமை பேசுவார்கள். இந்தக் காவிரி பிரச்னை, அதற்கும் முன்பே தோன்றியிருக்கும்போல!

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு கர்நாடக அரசுக்கும் இடையே நூற்றாண்டு காலமாகப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிதாக ஓர் அணையைக் கட்டத் திட்டமிட்டு வருகிறது. அந்த மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில், கனகபுரா தாலுகாவில் இருக்கிறது மேக்கேதாட்டூ. தமிழக எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தில்தான் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணையைக் கட்டத் திட்டமிட்டு, காய்களை நகர்த்திவருகிறது கர்நாடகா. இதற்கு, தமிழகத் தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புக்காட்டப்படவே... சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உரியதாக மாறி நிற்கிறது இந்த விவகாரம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இது ஜீவாதாரப் பிரச்னை. எதிர்காலத்தில் தமிழகத்துக்கு சுத்தமாகவே தண்ணீர் வராமல் போகக்கூடும் என்பதுதான் தமிழகத் தரப்பின் பயம். இதற்கு நடுவே, இந்த மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவதால் தமிழகத்துக்கு மட்டுமல்ல... கர்நாடக மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் ஆபத்து என்று பகீர் விவகாரம் ஒன்று தற்போது கிளம்பியுள்ளது. அதுவும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரே இதை வெளியிட்டிருப்பதுதான் கவனத்தை ஈர்க்கிறது.

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹைட்ரோ- ஜியாலஜிஸ்ட்களான ஜி.வி.ஹெக்டே மற்றும் கே.சி.சுபாஷ்சந்திரா ஆகியோர், இது தொடர்பாக ‘டவுண் டு எர்த்’ (Down To Earth) என்ற ஆங்கில இதழில் வெளியிட்டிருக்கும் கட்டுரை, தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

“மேக்கேதாட்டூ என்றழைக்கப்படும் பகுதி, பழுதடைந்த ஒரு பூமிப் பரப்பாகும். புவியியல் ரீதியாக இப்பகுதி நிலையற்றது. பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் பற்றி சுமார் 30 ஆண்டுகளாகக் கர்நாடக அரசியல்வாதிகள் பேசிவருகின்றனர். அந்த வகையில், 4.75 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் கூடுதலாகக் கிடைப்பதோடு, 400 மெகாவாட் மின்சார உற்பத்தியும் செய்யமுடியும் என்று சொல்லித்தான் மேக்கேதாட்டூத் திட்டத்தை கர்நாடகா முன்வைத்துள்ளது. அதேசமயம், காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தங்களுக்கான பங்கீடு குறையும் என்பதால் தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் ஏற்கெனவே இப்பிரச்னை ஆய்வில் இருப்பதால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் காத்திருப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. இதுதொடர்பான பல்வேறு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் மேக்கேதாட்டூ அணை திட்டத்தின் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான விமர்சனமும் விவாதமும் தலைதூக்கியுள்ளன. கர்நாடக அரசுக்கு புதிய அணை கட்ட 5,252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. அணைக்காக இவ்வளவு பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்பட்டால், காவிரி வனவிலங்குச் சரணாலயத்தின் 3,182.90 ஹெக்டேர் நிலமும், முக்கியமான வனவிலங்குப் பாதையாக (குறிப்பாக யானைகளுக்கு) அமைந்துள்ள காப்பு வனத்தின் (Reserved Forest) 1,869.5 ஹெக்டேர் நிலமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனக் கூறப்படுகிறது.

புதிய அணை கட்டப்பட்டால் இதுவரையில் அதிக கவனம் பெறாத மற்றொரு பிரச்னையும் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிதாகக் கட்டப்படவுள்ள இந்த அணை நீர் ஓட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே அமைந்துள்ளது. அங்கிருந்து காவிரி கிழக்கு நோக்கிப் பாய்கிறது. பீடபூமி போன்ற நிலப்பரப்பில் அதன் ஓட்டம் நிதானத்துடன் கூடிய முதிர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சிவனசமுத்திரத்தில் இருந்து மேக்கேதாட்டூக்கு மேல் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டாட்டி வரை, காவிரி மீண்டும் அதிவேகத்தில் பாய்கிறது. சுழலும் நீரமைப்பைக் கொண்ட முட்டாட்டிப் பகுதியில் நதியில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் காவிரி நதியின் அதிவேகத்தினால் ஏற்பட்ட ஆர்க்கியன் இயான் (Archean Eon) என்றழைக்கப்படும் பாறை அமைப்புகள் பூமியின் அரிப்புத் தன்மையைக் காட்டுகின்றன.

வரைபடம்
வரைபடம்

சிவனசமுத்திரத்தில் இருந்து முட்டாட்டி வரையிலான காவிரியின் பாய்ச்சலில் அதன் இடது கரை மென்மையான பாறை வரிசையாகவும், வலது கரை கருங்கல் பாறை வரிசையாகவும் நீண்டுள்ளன. பெரும் பள்ளங்களும் மற்றும் ஆழமான பாறை இடுக்குகளும் உருவாகும் அளவுக்கு இந்தப் பாறை வகைகளை நதி ஆழமாக வெட்டியுள்ளது. சில இடங்களில் நீரின் வேகச் சுழற்சி காரணமாகக் கரைகளில் ஏகப்பட்ட பள்ளங்களும் உருவாகியுள்ளன. அதிவேக நீரோட்டத்தின் அழுத்தத்தினால் உருவான பாறைச் சிதைவுகள் நதியின் இடது பக்கக் கரைகளில் அழுத்தமாகத் தெரிகின்றன.

பெரிய அளவிலான பாறை மூட்டுகள், நெருக்கமான இடைவெளிகளில் ஏற்பட்டுள்ள பாறைச் சிதைவுகள் மற்றும் கத்தரிக்கோல் போன்ற குறுக்கு அமைப்புகள் ஆகியவை இப்பகுதியை மேலும் ஆழ்ந்த ஆய்வுக்குரிய புவியியல் அம்சங்களாக்குகின்றன.

இந்தப் புவியியல் மற்றும் புவிசார் அம்சங்கள் இப்பகுதியை டெக்டானிகல் பிளேட் (பூமியின் ஆழத்தில் மேற்பரப்புகளை இணைக்கும் தட்டு போன்ற நகரும் இயற்கை அமைப்பு) அளவில் பலவீனமாக இருக்கின்றது. அதாவது, முட்டாட்டி பகுதியில் காவிரியில் அர்க்காவதி ஆறு சங்கமிக்கும் இடத்தில் இருந்து மேக்கேதாட்டூ வரையில் பூமித்தளம் பலவீனமாக அமைந்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட பாதை பலம் குறைந்த பழுதுபட்ட பூமியாகவும் உள்ளது. அணைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இப்பகுதியானது, அதிக அழுத்தத்தினால் உருவாகும் வண்டல் பாறைகள் மற்றும் சார்னோகைட் என்ற ஒருவகைப் பாறைகளுக்கு இடையேயான இணைவு மண்டலத்தில் உள்ளது.

குறிப்பாக, அர்க்காவதி பகுதி சமீபகாலங்களில் உருவான நில நடுக்கங்களின் மையமாக அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்கள் கொள்ளேகால், மளவல்லி, ராமநகர், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் வரை உணரப்பட்டன. எனவே, காவிரியின் ஓட்ட வேகத்தைத் தடுத்து, புவியியல்ரீதியாகப் பூமியின் அடித்தட்டுப் பலவீனமாக உள்ள பூமித்தளத்தில் ஓர் அணையைக் கட்டுவது பொருத்தமானதாக இருக்காது’’

- இதுதான் ஜி.வி.ஹெக்டே மற்றும் கே.சி.சுபாஷ்சந்திரா ஆகிய இருவரும் முன்வைக்கும் வாதமாகும்.

இத்தகைய வாதத்தை தமிழகத்தைச் சேர்ந்த யாராவது எழுப்பியிருந்தால், இந்நேரம்... ‘தமிழகம் சதி செய்கிறது’ என்று கர்நாடகத்திலிருந்து கூக்குரல்கள் எழுந்திருக்கும்... மஞ்சள் கொடி உயர்ந்திருக்கும். ஆனால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே முன்வைத்திருப்பதால், அங்கே மௌனம் நிலவுகிறது.

ஆக, மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால், நாளை தமிழகம் பாலைவனமாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதோடு, புவியியல்ரீதியிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இங்கே அணைக் கட்டும் விஷயத்தைக் கர்நாடக அரசும் மக்களும் கைவிடுவதுதான் நாட்டுக்கே நல்லது!

தமிழாக்கம்: கே.ஆர்.சங்கரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism