Published:Updated:

அமெரிக்காவிலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்! பொருளாதார அறிஞர் ஜான் ட்ரெஸ்

 ஜான் ட்ரெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜான் ட்ரெஸ்

பேட்டி

அமெரிக்காவிலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்! பொருளாதார அறிஞர் ஜான் ட்ரெஸ்

பேட்டி

Published:Updated:
 ஜான் ட்ரெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜான் ட்ரெஸ்

மிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஐவரில் ஒருவர், பேராசிரியர் ஜான் ட்ரெஸ் (Jean Dreze). 14 கோடி மக்களை வறுமை யிலிருந்து மீட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இது வறுமை ஒழிப்பில் மிக முக்கியமான திட்டமாக உலகெங்கும் போற்றப்படுகிறது. அனைவருக்கும் உணவு என்பதைச் சாத்தியப்படுத்திய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், எல்லாக் குடிமகனும் அரசாங்கத்தின் அலுவல் விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பதைச் சாத்திய மாக்கிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை மக்கள் உரிமை சட்டங்களாகக் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவர்.

பெல்ஜியம் நாட்டின் லூவென் என்னும் பழங்கால நகரத்தில் பிறந்தவர் ஜான் ட்ரெஸ். இவர் தந்தை ஜாக் ட்ரெஸ், உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர். ஜான் ட்ரெஸ், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதற்கு முன்பு, லண்டன் பொருளாதாரக் கழகம், டெல்லிப் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் முதலியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தன் உயர் வர்க்க வசதிகளை விட்டுட்டு, சாதாரண மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுடன் இணைந்து 9 புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பிறகு, பசுமை விகடன் வாசகர்களுக்காக அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி இது...

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்


பெல்ஜியத்தில் பிறந்த நீங்கள் இந்தியா வர வேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?

``நான் 1970-களில் மாணவனாக இருந்தேன். மேற்கு ஐரோப்பா முழுவதும் வருங்காலம் பற்றிய பெரும் நம்பிக்கைகள் இருந்தன. ரொனால்டு ரீகன் (அமெரிக்க அதிபர்), தாட்சர் (இங்கிலாந்து பிரதமர்) வந்திராத காலம். வேலையின்மை பெரும் பிரச்னையாக உருவாகியிருந்திராத காலம். ஏழ்மையும் சமூக அநீதியும் இல்லாத ஒரு சமூக அமைப்பு எங்கள் வாழ்நாளில் உருவாகி விடும் என நம்பினோம். அந்த நம்பிக்கையுடனும் இளமையின் உத்வேகத்துடனும், ஏதாவது உபயோகமாகச் செய்ய வேண்டும் என்னும் ஆவலில் இந்தியா வந்தேன். என் முழு வாழ்நாளையும் இங்கேயே செலவிட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு வர வில்லை... ஆனால், காலம் இந்தியாவிலேயே இருக்க வைத்து விட்டது.’’

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்


உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகள் விவசாயம் செய்தீர்கள் எனக் கேள்விப்பட்டோம். அதில் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?

``உத்தரப் பிரதேச மாநிலம், பாலன்பூரில், நான் ஓர் ஆண்டுதான் வாழ்ந்தேன். பந்த் நகர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வீரிய ரக மக்காச்சோள விதைகளை வாங்கி விதைத் தேன். என் நிலத்தில் பயிர்கள், மற்ற விவசாயி களின் வயல்களைவிட உயரமாக வளர்ந்தன. அனைவரும் வியந்து பார்த்தனர். ஆனால், அதன் பிறகு மழை பொய்த்துப்போனது. என் வயலில் இருந்த பயிர்கள் கருகிப் போயின. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிப் பயிரிட்டதால், மற்ற விவசாயிகளை விட எனக்கு அதிக நஷ்டம். தொடக்கத்தில் எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்ட நான். இறுதியில், எல்லோரும் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன். இந்த அனுபவம், வேளாண் தொழிலில் உள்ள அபாயங்கள், அதன் நிச்சயமற்ற தன்மை முதலியன பற்றிய ஆழ்ந்த புரிதலை என்னுள் உருவாக்கியது. இது போன்ற இடர்களை எதிர்கொள்ள, விவசாயிகளுக்குச் சரியான காப்பீட்டுத் திட்டங்கள் இல்லை யென்பது வியப்பாக இருந்தது. புதுமைகளைக் கொண்டு வர வேண்டிய வேளாண் விரிவாக்கக் கட்டமைப்புகள் சிதைந்து போயுள்ளன. இது அரசுப் பொது நலக் கட்டமைப்பின் மிகப் பெரும் தோல்வி.’’

‘‘கிராமப் பஞ்சாயத்து நிறுவனங்கள் உயிர் பெற்றுள்ளன. ஊரகத் தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள உதவியிருக்கிறது.’’


தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்னும் இந்தியாவின் மிக வெற்றிகரமான பொதுநலத்திட்ட உருவாக்கத்தில் நீங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறீர்கள். அதன் சாதனைகள் என்ன?

``அதன் சாதனைகள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன. இந்தத் திட்டம் ராஜஸ்தானிலும், தென் மாநிலங்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரக உழைப்பாளிகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை, முக்கியமாக ஊரகப் பெண்களுக்கு வருமானம் ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. இதன் மூலம், உற்பத்திக் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. கிராமப் பஞ்சாயத்து நிறுவனங்கள் உயிர் பெற்றுள்ளன. ஊரகத் தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள உதவியிருக்கிறது.

இந்தத் திட்டம், சமூகப் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பது, சென்ற ஆண்டு கொரோனா காலத்தில், பொருளாதாரம் முடங்கியபோது வெளிப்பட்டது. இந்தியா வில் இதுவரை கண்டிராத அளவில், இந்தத் திட்டத்தால் ஊரக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், வளர்ச்சியுறாத பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை. அங்கே, இத்திட்டம், தனியார் ஒப்பந்தக்காரர்களின் கைகளில் சிக்கி, ஊழல் மிகுந்ததாக மாறிவிட்டது.

மத்திய அரசின் மையப்படுத்தும் போக்காலும், தொழில்நுட்ப மேலாதிக்கத் தாலும், தாமதமாக அளிக்கப்படும் ஊதியம் போன்ற அரசு மெத்தனத்தாலும், மங்கிப் போயுள்ளன. இன்று இத்திட்டம், இதன் தொடக்கக் கால நோக்கங்களிலிருந்து திசை மாறிப் போகத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், உலக நாடுகளுக்கு, இது உத்வேக மளிக்கும் ஒரு பொதுநலத் திட்டமாக இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அமெரிக்காவில் கூட ஊரக வேலைவாய்ப்பு உரிமை பற்றிய விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் இதைப் பற்றிய பேச்சுத் தொடங்கியிருப்பது இந்தத் திட்டத்தின் பெரிய சாதனைதான்.’’

நூறு நாள் வேலை திட்டம்
நூறு நாள் வேலை திட்டம்


தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், ஊரக, வேளாண் தொழிலாளர்களின் கூலியை ஏற்றிவிட்டது. இது வேளாண்மை யின் லாபகரத்தை மேலும் பாதித்துவிட்டது எனக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றனவே?

``பணவீக்கம் தவிர்த்து, ஊரக வேளாண் தொழிலாளர்களின் கூலி அளவு, பல காலமாக வளராமல் தேங்கி நின்றிருந்தது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வந்தபின், அது ஓரளவு உயரத் தொடங்கியது. அது ஒன்றும் பெரிய தவறல்ல. விளிம்பு நிலை உழவர்கள் பலரும் வேளாண் கூலி தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக நீர்ச் சேகரிப்பு அமைப்புகள், நீர்நிலைகள் போன்றவை மேம்படுத்தப்பட்டன. இதனால், வேளாண்மைக்கான நீர் கிடைப்பது மேம்பட்டு, உற்பத்தி அதிகரித்திருக்கிறது. எனவே, நஷ்டத்தைவிட, இந்தத் திட்டத்தால் கிடைத்த பயன்கள் அதிகம். இதில் நஷ்டப்பட்டவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகள். அதை, குறைந்தபட்ச விலை, காப்பீடு, கட்டமைப்பு வசதிகள், கடன் போன்றவற்றை வழங்கி, சரி செய்துவிட முடியும்.’’

பாலசுப்ரமண்யம் முத்துசாமி
பாலசுப்ரமண்யம் முத்துசாமி


ஜான் ட்ரெஸ்ஸின் பேட்டியை முழுமையாக வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://www.vikatan.com/government-and-politics/agriculture/economist-jean-drze-exclusive-interview-to-pasumai-vikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism