Published:Updated:

``முதல்வரே... டெல்டாவுக்கு கொஞ்சம் வர்றீங்களா?!"- கலங்கும் டெல்டா விவசாயிகள் #SaveDelta

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், பொதுப்பணித்துறைக்கும் அமைச்சராக இருக்கார். ஆனால், இங்க நீர் மேலாண்மை எப்படி இருக்குங்கறதே அவருக்குத் தெரியலை.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருக்கிறார். அந்நாட்டின் நீர் மேலாண்மை குறித்து அறிந்துகொள்வதற்காகவே அங்கு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் முதலில் டெல்டா பகுதிகளுக்கு வருகை தந்து, இங்கு நீர் மேலாண்மை எப்படி இருக்கிறது என அறிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு இஸ்ரேலுக்குச் செல்லட்டும் எனத் தஞ்சை விவசாயிகள் அழைப்பு விடுக்கிறார்கள்.

ஏன் இந்த அழைப்பு ? இதற்கான காரணம், வேதனையும் ஆதங்கமும் நிறைந்ததாக இருக்கிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மேட்டூர் அணை நிரம்பி, டெல்டா பாசனத்துக்குக் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நல்லவேளை, இந்த ஆண்டு இயற்கை நம்மை ஏமாற்றவில்லை என்ற மகிழ்ச்சியோடு டெல்டா விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிக்கான ஆயத்த வேலைகளில் இறங்கினார்கள். `நம்ம ஊருக்குக் கண்டிப்பாகத் தண்ணீர் வந்துவிடும்’ என்ற நம்பிக்கையோடு தினந்தோறும் எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தற்பொழுது இங்குள்ள ஆறுகளில் மட்டுமே காவிரி நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இவற்றின் பிரதான வாய்க்கால்களிலோ, கானல் நீர் மட்டும் கரைபுரண்டு செல்கிறது. பாசனத்துக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என பல விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

Protest
Protest

கடைமடை விவசாயிகளுக்குத்தான் இந்த நிலை என தவறாக நினைத்துவிட வேண்டாம். காவிரியின் பிரதான அடையாளமாக திகழக்கூடிய திருவையாறின் சுற்றுவட்டார விவசாயிகளே பெரும் மனஉளைச்சலில் இருக்கிறார்கள். இது கல்லணையின் தலைமடைப்பகுதி. இங்கு ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், இங்குள்ள கிராமங்களுக்குள் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. குறிப்பாக மேலத்திருப்பந்துருத்தி, கீழத்திருப்பந்துருத்தி, கண்டியூர், காட்டுக்கோடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இயலாமையில் தவிக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய விவசாயி சுகுமாறன் ``கல்லணையிலிருந்து 30 கிலோமீட்டர்ல உள்ள எங்க ஊருக்கே இன்னும் தண்ணீர் வந்து சேரலைங்கறது மிகப் பெரிய அவலம். டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே தூர்வாரும் பணிகள் ஒழுங்கா நடக்கலை. இதனால்தான் பாசனத்துக்கு தண்ணீர் வந்து சேரலை.

சுகுமாறன், திருவையாறு
சுகுமாறன், திருவையாறு

முன்னாடியே தண்ணீர் வந்திருந்தால், முன்பட்டா சம்பாவுல நீண்டகால ரகம் பயிர் பண்ணியிருக்கலாம். இந்நேரம் நடவுப் பணிகள் முடிஞ்சிருக்கணும். ஆனால், விதைப்பு பணிகளே இன்னும் தொடங்கலை. இன்னும் தாமதமாக தண்ணீர் வந்தால் , சம்பா சாகுபடி தோல்வியில்தான் முடியும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், பொதுப்பணித்துறைக்கும் அமைச்சராக இருக்கார். ஆனால், இங்க நீர் மேலாண்மை எப்படி இருக்குங்கறதே அவருக்குத் தெரியலை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், எங்களோட வாழ்வாதாரம் சிரழிஞ்சிக்கிட்டு இருக்கு. இங்கவுள்ள நிலையை ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் உடனடியாக டெல்டாவுக்கு வரணும். அதுக்குப் பிறகு அவர் இஸ்ரேல் நாட்டுக்குப் போயி, அங்கவுள்ள நீர் மேலாண்மையைப் பார்வையிடலாம்'' என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

கல்லணையின் தலைமடையிலேயே இந்த நிலையென்றால், கடைமடை விவசாயிகளின் நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். திருவாரூரைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம்.

வரதராஜன்  - திருவாரூர்
வரதராஜன் - திருவாரூர்

``பாசன ஆறுகளில் அதிகபட்ச பகிர்மான அளவின்படி தண்ணீர் திறக்கப்பட்ட பிறகுதான் கொள்ளிடம் வடிகால் ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இங்குள்ள பாசன ஆறுகளில் குறைந்தபட்ச பகிர்மான அளவுக்குக்கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. காரணம் மணல் கொள்ளையாலும், முறையான சீரமைப்புப் பணிகள் நடைபெறாததாலும் ஆறுகளின் கரைகள் பலவீனமாக உள்ளது. தூர்வாரும் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. அதிகமாக தண்ணீர் திறந்தால், ஆறுகள் உடைப்பெடுத்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிகவும் குறைவான அளவுதான் தண்ணீர் திறக்கிறார்கள். இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் ஏறுவதில்லை. திருவாரூரைச் சுற்றியுள்ள கேக்கரை, மருதப்பட்டினம், திலாவடிமூலை, ராமகயை உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.” என்றார்.

காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் பேசும்போது, ``நாகப்பட்டினம் மாவட்டத்துல பல கிராமங்களுக்கு இன்னும் காவிரிநீர் கிடைக்கவில்லை. சீர்காழி தாலுகாவில் உள்ள அலக்குடி, நல்லூர், பழையாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தண்ணீருக்காக காத்துக்கிடக்குறாங்க. கடலூர் மாவட்டம் புவனகிரி, பரங்கிப்பேட்டை, பிச்சாவரம், முகையூர், ஆள்கொண்ட நத்தம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நீர் மேலாண்மையில் தமிழக அரசு ரொம்பவே மெத்தனமாக இருக்கு. விவசாயிகள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை. இது எங்களுடைய வாழ்வாதாரம். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் ஊழலாலும் நாங்க ரொம்பவே அவதிப்படுகிறோம்” என பொங்கித்தீர்த்தார். இப்படியாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பரவலாக ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன.

விவசாயி இளங்கீரன்
விவசாயி இளங்கீரன்

ஒருகாலத்தில் நீர் மேலாண்மையில் சோழநாடு, உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது. ஆனால், இன்றோ சீரழிந்து கிடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்ள இருக்கும் இஸ்ரேல் நாடு, தண்ணீர் சிக்கனத்தில் சிறந்து விளங்குவது ஏற்கெனவே நாம் அனைவரும் அறிந்ததுதான். அங்குள்ள சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றை ஏற்கெனவே தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி, இஸ்ரேல் செல்வதால், புதிதாக என்ன பயன் விளைந்துவிடப்போகிறது என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாசனத்துக்குத் தண்ணீர் கிடைத்தால்தானே அதைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டு, விவசாயிகளின் வயலுக்கு முதலில் தண்ணீர் வந்து சேரட்டும். அதன்பிறகு இஸ்ரேல் நாட்டின் நீர் சிக்கனத்தை இங்கு நடைமுறைப்படுத்தலாம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு