பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘நெஞ்சு பொறுக்குதில்லையே...

இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ என்று மீசை முறுக்கி ஆவேசமாகப் பாடிய பாரதியாரைக் காட்டிலும் பலமடங்கு கோபத்தில் இருக்கிறார்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லும் தமிழக விவசாயிகள்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதன் முக்கிய நோக்கமே, நாட்டின் உணவுப் பொருள் கையிருப்பை உறுதிப்படுத்துவது; ஏழைகளுக்குக் குறைந்த விலை/விலையில்லாமல் உணவுப் பொருள்களைக் கொடுப்பது; நெல் பயிரிடும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச் செய்வது ஆகியவைதான்.


ஆனால், படாதபாடுபட்டு விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு, ‘மூட்டைக்கு 35 ரூபாய் கொடு, 45 ரூபாய் கொடு’ என்று லஞ்சப் பேய்கள் வசூல் வேட்டை நடத்துவதுதான் கொடுமை. கொசுறு நெல், மாதிரி நெல் என்று பல பெயர்களில் கிலோ கணக்கில் நெல்லைக் கொள்ளை அடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளன அந்தப் பேய்கள். இதிலேயே சில, பல ஆயிரங்களை அநியாயமாக இழந்துகொண்டுள்ளனர் விவசாயிகள். இக்கொடுமைகளைப் பசுமை விகடனில் அம்பலப்படுத்தியபடிதான் இருக்கிறோம். அந்த நேரத்தில் பெயருக்காக நடவடிக்கை நாடகம் ஆடும் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும், பிறகு கண்டுகொள்வதே இல்லை. ‘எடப்பாடி ஆண்டாலும்... ஸ்டாலின் ஆண்டாலும் எனக்கொரு பயமும் இல்லை’ என்கிறபடி கொள்ளைத் தொழிலைத் தொடர்கின்றன லஞ்சப் பேய்கள்.

இந்தக் கொடுமைகள் குறித்த வீடியோ விகடன் டி.வி யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கிறது. பார்க்கப் பார்க்க கோபம்தான் கொப்புளிக்கிறது (விரிவான கட்டுரை விகடன் இணையதளத்திலும், சுருக்கமான கட்டுரை இந்த இதழிலும் வெளியாகியிருக்கின்றன). நாம் எல்லோரும் பசியாற உணவு உற்பத்தி செய்வதைத்தான் கடமையாகவே வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களைப் போற்றிப் புகழக்கூட தேவையில்லை. தொடர்ந்து நோகடிக்காமலாவது இருக்கலாம்தானே!

‘விடியல் அரசா’வது லஞ்சத்துக்கு விடை கொடுக்குமா?

- ஆசிரியர்

வீடியோவை பார்க்க https://www.youtube.com/watch?v=F8iEfh1fVM0

கட்டுரையைப் படிக்க https://bit.ly/3Ao4cPc

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு