Published:Updated:

உண்மையாகவே நிறைவேறும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

உண்மையாகவே நிறைவேறும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தமிழ்நாடு வேளாண்மைத் துறை விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, ஆலோசனைக்கூட்டங்கள், விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு, வல்லுநர்கள் சந்திப்பு... எனப் பலவிதமான நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதனால், அண்டை மாநிலங்கள்கூடத் தமிழ்நாட்டில் ஏதோ உருப்படியாக நடக்கிறது என்று உற்றுக்கவனிக்கத் தொடங்கியுள்ளன. வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டில் விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் பல நல்ல அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. தனி பட்ஜெட் என்பதால், வேளாண்மைக்கு நிதியும் அதிகமாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாகவே விவசாயிகள் தரப்பில் எழுந்திருக்கின்றன.

முதல் நிதிநிலை அறிக்கை, நிதி ஆதாரம் இல்லை... எனக் காரணம் காட்டி பொது பட்ஜெட்டில் இருக்கும் வேளாண்மைப் பகுதியை மட்டும் உருவி எடுத்து, தனி பட்ஜெட் என்ற பெயரில் அறிவித்து அவப்பெயர் எடுத்துவிட வேண்டாம். சில மாநிலங்களில் மத்திய அரசின் வேளாண்மைத் திட்டங்களைக் கவர்ச்சிகரமான பெயர் சூட்டி, தங்களின் திட்டங்கள்போல அறிவித்துக் கவனம் பெறுகின்றன. எனவே, தமிழக அரசு, இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ‘புதிய மொந்தையில் பழைய கள்’ வைத்த கதையாக மாறிவிடும்.

கடந்த காலங்களில் விவசாயிகளிடம் மருந்துக்குக்கூட கருத்துக்கேட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இப்போது மாவட்டம்தோறும் விவசாயிகளை அழைத்து கருத்துக் கேட்பது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் சொல்வது அத்தனையும் அவசியமானது. களத்தில் உள்ள விவசாயிகள் சொல்வதுதான், பிரச்னைகளைத் தீர்க்க அருமருந்தாக அமையும். ஆனால், நிதி அதிகமாகும், ஆள்பலம் தேவை... எனச் சில அதிகாரிகள் நல்ல திட்டங்களைக்கூட தட்டிக்கழிக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று செலவைக் குறைப்பதுதான் முதல் வரவு. அந்த வகையில், வேளாண்மைத் துறையில் தேவையான செலவுகள் எவை... தேவையற்ற செலவுகள் எவை... என்பதை முதலில் கண்டறிந்து, தேவையில்லாத ஆணிகளை நீக்குவது, இந்த பட்ஜெட்டின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அதைத் தனி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான், வேளாண்மைக்கான பட்ஜெட் தமிழ்நாட்டின் வரலாற்றில் நீங்காத இடத்தையும் பிடிக்கும். ‘மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி’ என்ற முதல்வர் மு.க,ஸ்டாலினின் உறுதிமொழி உண்மையாகவே நிறைவேறும்.

- ஆசிரியர்

உண்மையாகவே நிறைவேறும்!