Published:Updated:

இணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள்! - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி
விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது என்று அவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும்,

`ஏற்கெனவே அமைக்கப் பட்டிருக்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் அந்தப் பகுதிகளில் மின் கதிர்வீச்சு ஏற்படுகிறது; அதனால் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது’ என்ற புகாரையும் கூறிவருகின்றனர். ‘அப்படியெல்லாம் எந்த பாதிப்பும் இல்லை’ என்று பவர்கிரிட் பொறியாளர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், உயர் அழுத்த மின் பாதைகளின் அருகில் மின்கசிவு ஏற்படுகிறது என்பதை அம்பலப்படுத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்தது.

எரியும் குழல் விளக்குகள்
எரியும் குழல் விளக்குகள்

கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் தலைமையில், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து, மின் கதிர்வீச்சு இருப்பதை பரிசோதனை மூலம் நிரூபித்திருக்கிறது இந்தக் கூட்டமைப்பு. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அனுப்பட்டி கிராமப்பகுதியில் பரிசோதனை நடத்தப்பட்டது.

இண்டிகேட்டர் சோதனை
இண்டிகேட்டர் சோதனை

அன்று மாலை 6 மணியளவில், அந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்ட கோயம்புத்தூர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் சுப்பராயன், ஈரோடு கணேசமூர்த்தி, கரூர் ஜோதிமணி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம் ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையில் ஆளுக்கொரு குழல் விளக்கு (டியூப்லைட்) கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் மின் பாதை கம்பிகளுக்குக் கீழே நிற்க வைத்ததும், திடீரென்று அவர்கள் கையிலிருந்த குழல் விளக்குகள் மின் இணைப்பு எதுவுமின்றி ஒளிரத் தொடங்கின.

ஆச்சர்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளங்கை, தலை, உடம்பு ஆகிய இடங்களில் ‘சிறிய மின்காட்டி கருவியை’ (இண்டிகேட்டர்) வைத்தனர். அந்தக் கருவியிலுள்ள விளக்கு ஒளிர்ந்தது. `உயர் அழுத்த மின் பாதை அருகில் மின் கசிவு இருக்கிறது’ என்பதை ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அதை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். அந்த நிகழ்வைத் தொடர்ந்து உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் பாரத் பெட்ரோலியம் அமைக்கும் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பாக, பல்லடம் நகரில் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. அதில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜும் கலந்துகொண்டார்.

ஈசன், சின்ராஜு
ஈசன், சின்ராஜு

நிறைவாகப் பேசிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன், ‘‘தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட மின் திட்டங்களைப் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகமும் விவசாய விளைநிலங்கள் வழியாக நிறைவேற்றி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மின்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்காமல் வருவாய் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகளைப் பவர்கிரிட் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்துளைக்கிணறுகள், வீடு, கோழிப்பண்ணைகள் ஆகிய இடங்களிலும் விவசாயிகள் அனுமதி இல்லாமல் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எனவே, விவசாயிகளுக்கு 2013 நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்பிலிருந்து நான்கு மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும்.

உயர் மின்கோபுரக் கம்பி வழிப்பாதையைக் குறிக்கும் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டும்’’ என்றவர், ‘‘பல்லடம் அருகில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தது ஏற்கெனவே அமைக்கப்பட்ட 400 கிலோவாட் மின் பாதைக்கு அருகில். ஆனால், இப்போது தாராபுரம் வழித்தடத்தில் அமைக்கப்படவிருக்கும் மின்பாதை 800 கிலோவாட் திறன்கொண்டது. 400 கிலோவாட் கோபுரங்களின் அருகில் இணைப்பு இல்லாமல் குழல் விளக்குகள் ஒளிர்கின்றன என்றால், 800 கிலோவாட் மின் பாதையின் கதிர்வீச்சு எப்படியிருக்கும் என்பதையும் அரசாங்கம் கவனத்தில்கொள்ள வேண்டும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு