Published:Updated:

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்; வீடியோ மூலம் அம்பலப்படுத்திய விவசாயி; ஊழியர் சஸ்பெண்ட்!

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்

கடலூர் மாவட்டத்திலுள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து அதில் தொடர்புடைய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

சம்பா சாகுபடி நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு சார்பில் அந்தந்தப் பகுதிகளில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இங்கு விவசாயிகளின் விளைபொருள்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. லஞ்சம் பெறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்படுவதால் லஞ்சம் வாங்குவதும் தொடர்ந்து கொண்டேயிருப்பதாகக் கூறுகின்றனர் விவசாயிகள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
`நெல் கொள்முதல் பிரச்னையைத் தீர்க்க அரசு இதையாவது செய்யலாம்!' - அரசுக்கு விவசாயிகளின் யோசனை

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த மாத்தூர் கிராமத்தில் நெல் மூட்டையைக் கொள்முதல் செய்ய ரூ. 40 லஞ்சம் பெறுவதாக புகார் தெரிவித்தனர் விவசாயிகள். அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போதும் லஞ்சம் வாங்குவது தொடர்வதாகக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர் விவசாயிகள்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசின் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வீதம் லஞ்சம் கொடுத்தால்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பயனாளர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கறார் காட்டுவதாக விவசாயிகள் முறையிட்டனர். ஆனால், அதன்மீது அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் விவசாயி ஒருவரே களமிறங்கி, லஞ்ச வேட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

விவசாயி ஒருவர் எடுத்த அந்தக் காட்சியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது இடம்பெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோ குறித்து பேசிய வீடியோ எடுத்த விவசாயி, ``சிறுமுளை நெல் கொள்முதல் நிலையத்தில் 41 நெல் மூட்டைக்கு ரூ.2,050 பெற்றுக்கொண்டுதான் என்னிடம் கொள்முதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் கீழிருந்து மேல்வரை அனைத்து ஊழியர்களுக்கும் இதில் பங்கு செல்கிறது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றனர். மேலும், நாங்கள் புகார் தெரிவித்தால் கொள்முதல் நிலையத்தை மூடி விடுவோம் என்று மிரட்டியும் பணம் பறிக்கிறார்கள். அதனால்தான் வேறு ஒரு விவசாயி தனது 115 மூட்டை நெல்லுக்கு லஞ்சம் கொடுப்பதை வீடியோ எடுத்து பதிவிட்டேன்” என்றார்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
Vikatan

இதுகுறித்து விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டோம்.

``சமூக வலைதளங்களில் அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் உடனடியாக அதிகாரிகள் அங்கு ஆய்வை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் `மேஸ்திரி’ என்ற அந்த நபர் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்தான். அந்தப் பகுதியில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வேறொரு விவசாயி தோட்டத்தில் வேலை செய்ததற்கான ஊதியத்தைத்தான் அங்கு பெற்றார் என்று அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய தாங்கள் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்று அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வாங்கியது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால் அந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். அதேபோல மாவட்டத்திலுள்ள 53 நெல் கொள்முதல் நிலையங்களிலும் விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு