Published:Updated:

உள்ளூர் பொருள்களை உலகச் சந்தையில் விற்க வழிகாட்டும் இ-நாம்

இ-நாம்
பிரீமியம் ஸ்டோரி
இ-நாம்

திட்டம்

உள்ளூர் பொருள்களை உலகச் சந்தையில் விற்க வழிகாட்டும் இ-நாம்

திட்டம்

Published:Updated:
இ-நாம்
பிரீமியம் ஸ்டோரி
இ-நாம்

மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விரிவாக்கம், முதலீடு மற்றும் விற்பனை துறையின் இணைச் செயலாளராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சாமுவேல் பிரவீன்குமார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவரான இவர், கத்திரிக் காயில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த ஆராய்ச்சிப் பணிக்காக 3 பதக்கங்கள் மற்றும் 4 விருதுகளைப் பெற்றவர். பல்கலைக் கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான மத்திய கிடங்கு நிறுவனத்தில் (கிடங்கு) பொது மேலாளராகப் (வர்த்தகம்) பணியாற்றியவர். மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினோம். பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை முக்கிய நோக்கமாக வைத்து, அந்த இலக்கை அடைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம். விவசாயிகளுக்குள்ள பெரிய பிரச்னை விளைபொருள்களுக்குரிய விலையின்மை. உள்ளூரிலேயே பொருளை விற்பனை செய்வதால் சரியான விலை கிடைப்பதில்லை. வியாபாரிகள் கொடுக்கும் விலையை வாங்கிக் கொண்டு விளைபொருளை விற்பனை செய்கிறார்கள். விவசாயிக்கு அவர்களுடைய விளைபொருள் மூலமாக ஒரு ரூபாய் வருமானம் கிடைத்தால் அதில் 70 காசு இடைத்தரகர்களுக்குப் போய்விடுகிறது. மீதமுள்ள 30 காசுதான் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது.

சாமுவேல் பிரவீன்குமார்
சாமுவேல் பிரவீன்குமார்

இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக இ-நாம் (https://www.enam.gov.in/web/) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் மூலமாக உள்ளூர் பொருளை உலகச் சந்தையில் விற்பனை செய்யலாம். உதாரணமாக ஆண்டிபட்டியில் ஒரு விவசாயி தன்னிடம் முருங்கைக்காய், இலை, விதை இத்தனை டன் இருக்கிறது என இ-நாம் இணையதளத்தில் பதிவு செய்தால், அந்தப் பொருள் தேவையுள்ள வணிகர்கள் ஆளுக்கு ஒரு விலையைப் பதிவு செய்வார்கள். அதில் எந்த விலை விவசாயிக்குக் கட்டுபடியா கிறதோ, அந்த வியாபாரிக்குப் பொருளை அனுப்பலாம். இதன் மூலம் அவருக்குத் திருப்தியான விலை கிடைத்துவிடும். அதற்கு அவர்கள் குழுக்களாக இணைய வேண்டும்.

உழவர் குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குப் பல்வேறு வகையான கடனுதவிகள், மானியங்கள், பயிற்சிகள், விற்பனைக்கான வாய்ப்பு களை உருவாக்கித் தருவதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய சந்தை சூழலில், தனி விவசாயியாகச் சாதிப்பதைவிட, குழுக்களாக, நிறுவனமாக மாறினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக விவசாய விளைபொருள்களையும் விற்பனை செய்ய முடியும். இது தொடர்பாக அந்தந்த மாநில வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இ-நாம்
இ-நாம்

2025-ம் ஆண்டுக்குள் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் கள் உருவாகும்போது, அந்த நிறுவனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அரசின் திட்டங்களையும், நவீனத் தொழில்நுட்பங் களையும் கொண்டு செல்வது எளிதாகிவிடும். அந்தந்த மாநிலங்களில் வேளாண்மைத்துறை மற்றும் நபார்டு வங்கியை அணுகினால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க வழிகாட்டுவார்கள்” என்றவர், குழுக்களாக இணைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசினார்.

“விவசாயிகளுக்கு அறிவியல்பூர்வமான விவசாயத்தையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு சேர்த்து வருகிறோம். குறிப்பாக, விவசாயத்தில் செலவைக் குறைத்தால் வருமானம் அதிகமாகும். செலவைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் தற்போது ஏராளமாக உள்ளன. அதையும் தனி விவசாயி செய்வதைவிட, குழுக்களாக இணைந்து செய்யும்போது செலவு மிகவும் குறையும். இந்தியாவைப் பொறுத்த வரை வேளாண்மைத் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபகாலமாக அவை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இ-நாம்
இ-நாம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் ஒருங்கிணைந்த பண்ணையங்களுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் உழவர்கள், ஒரே பயிர் மட்டும் சாகுபடி செய்யாமல் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, வாத்து, வான்கோழி, வெண்பன்றி, மீன் வளர்ப்பு போன்ற கால்நடை வளர்ப்பையும் ஒருங்கிணைந்து சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் வருமானம் அதிகமாகும். இதை விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லி, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். அதற்குத் தேவையான நிதியுதவி, மானியங்களை மாநில அரசு மூலமாகச் செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயத்தில் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். உதாரணமாக 100 கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றால் 50 கிலோ மீட்டர் தான் வந்திருக்கிறோம். இன்னும் 50 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் 50 கிலோ மீட்டர் கடந்துவிட்டோம் என்பதையும் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. சுதந்திர இந்தியாவில் 50 மில்லியன் டன் உணவுப் பொருள் உற்பத்தியில் தொடங்கிய வேளாண்மைத்துறையின் இன்றைய உற்பத்தி 325 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. அதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதே நேரம் நாம் சாதித்துவிட்டோம் எனப் பெருமை பேசிக்கொண்டு இருக்காமல், இன்னும் சாதிக்க வேண்டியது ஏராளம் என உழைத்துக் கொண்டு இருக்கிறது இந்திய வேளாண்மைத் துறை.

இ-நாம்
இ-நாம்

மற்ற நாடுகளைப்போல் இல்லை இந்திய விவசாயம், மாநிலத்துக்கு மாநிலம், மண்டலத்துக்கு மண்டலம், மாவட்டத்துக்கு மாவட்டம் காலநிலை, சாகுபடி முறை, பயிர்கள் மாறுபடுகின்றன. அனைத்துக்கும் ஏற்பத் திட்டமும், செயல்பாடும் அவசியம். மற்ற நாடுகள் விவசாயத்தில் முன்னேறி விட்டதாக உதாரணம் சொல்பவர்கள், அங்குள்ள சூழலையும், இந்தியச் சூழலையும் இணைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக இஸ்ரேல் நவீன நீர்ப்பாசன தொழில் நுட்பங்களை 90 சதவிகிதம் பயன்படுத்துகிறது. இந்தியா 4 சதவிகிதம்தான் பயன் படுத்துகிறது என்கிறார்கள். ஆனால், இஸ்ரேலில் மொத்த பரப்பையும், இந்தியாவின் மொத்த பரப்பையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாகச் சொன்னால், ஒரு மாவட்டத்தை 90 சதவிகிதம் விரைவில் மாற்ற முடியும். ஆனால், ஒரு மாநிலத்தை, இந்தியாவைப் போன்ற பல்வேறு காலச் சூழ்நிலைகள் நிறைந்த பல்வேறு மாநிலங்களில் 4 சதவிகிதம் என்பது, 90 சதவிகிதத்தைவிட மேலானது’’ என்றவர் நிறைவாக,

‘‘விவசாயத் தொழில்முனைவோர்கள், மதிப்புக்கூட்டுவோர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. அரசாங்கம் செய்யக்கூடிய திட்டங்கள் என்ன, அதில் விவசாயிகள் எப்படிப் பயனடைய முடியும் என்பதைப் பற்றி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். ஏப்ரல் 18-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

அதில் கலந்துகொண்டு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெற வேண்டும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு : sampraveen.04@gov.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism