Published:Updated:

மேக்கேதாட்டூ அணை: ஸ்டாலின் இதை ஏன் கடிதத்தில் சொல்லாமல் விட்டார்? - சுட்டிக்காட்டும் மூத்த பொறியாளர்

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

கர்நாடக மாநிலத்திடம் எப்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூரு மாநகர குடிநீர்த் தேவைக்காக அணை கட்டுகிறோம் என்பதெல்லாம் கட்டுக்கதை.

மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,``மேக்கேதாட்டூவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள். மேக்கேதாட்டூ அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர்வரத்து பாதிக்கப்படும். கபிணி, கே.ஆர்.எஸ் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அந்த நீரும் தமிழகம் வருவதில் தடை ஏற்படும். காவிரி ஆற்றின் பிரதான நீர், மேலும் காவிரி ஆற்றின் பிரதான நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தும் மேக்கேதாட்டூ அணையால் தடைபடும். மேக்கேதாட்டூ அணை தமிழக விவசாயிகள் நலனைப் பாதிக்காது என கர்நாடகா அரசு கூறுவதை ஏற்க முடியாது.

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin

பெங்களூரு குடிநீருக்காக அணை கட்டப்படுகிறது என்பதும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கெனவே பெங்களூரு நகருக்கு போதுமான குடிநீர் ஆதாரங்களை கர்நாடகா அரசு பெற்றுள்ளது. 4.75 டி.எம்.சி குடிநீரைப் பயன்படுத்துவதற்காக 67.16 டி.எம்.சி சேமிப்பு திறன் கொண்ட அணை தேவைப்படுவதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

``இதில் குறிப்பிட வேண்டிய அம்சங்களைக் குறிப்பிடாமல் விட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்” என்று அவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வந்தார் மூத்த பொறியாளர் முனைவர் அ.வீரப்பன்.

அவரிடம் பேசியபோது, ``1991-ல் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் குடியரசுத் தலைவரின் (ஆர்.வெங்கட்ராமன்) மேற்கோள் இடம் பெற்றுள்ளது. அதில் `ஒரு நதியானது பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதை இடைமறித்து திருப்புவதோ, மாற்றுவதோ கூடாது. இன்னொன்று ஒரு ஆற்றின் கடைமடையில் உள்ள விவசாயிகள்தாம் அந்த ஆற்றின் முதல் உரிமை பெற்றவர்கள். இது உலக அளவில் இருந்து வரும் முறை’ என்று குறிப்பிட்டிருக்கிறது. காவிரியாற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டக் கூடாது என்பதற்கு இதைவிட சரியான சான்று இல்லை. இந்த மேற்கோளை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விவரம்
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விவரம்
மேக்கேதாட்டூ அணை: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கர்நாடகம்... தடுத்து நிறுத்துமா தமிழகம்?

அதேபோன்று பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காகத்தான் இந்த அணையே கட்டப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதையே முதல்வர் ஸ்டாலின் ஏற்று `4 டி.எம்.சி தண்ணீருக்காக 67 டி.எம்.சி அளவு கொண்ட அணையைக் கட்டுவதை ஏற்க முடியாது’ என்று பதில் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவை 50 டி.எம்.சி என்றால் அனுமதித்துவிடுவாரா முதல்வர். இதற்கான பதிலை இப்படிச் சொல்லியிருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரின் அளவில் பெங்களூரு மாநகரக் குடிநீர் தேவைக்காக 4 டி.எம்.சி தண்ணீர்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு வழங்கும் தண்ணீரின் அளவிலிருந்து குறைத்து பெங்களூரு மாநகரக் குடிநீர் தேவைக்காக 14.75 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவிலிருந்து கூடுதலாக வழங்கப் பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தற்போது ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மாநகரக் குடிநீருக்காக தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரிலிருந்து 14.75 டி.எம்.சி அளவைக் கொடுத்திருக்கிறோம். நிலைமை இப்படியிருக்க தமிழக முதல்வர் இதைக் கடிதத்தில் மேற்கோள் காட்டாமல் விட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முனைவர் வீரப்பன்
முனைவர் வீரப்பன்

பொதுவாகக் கடிதத்தை அதிகாரிகள்தாம் தயார் செய்கிறார்கள். அவர்களாவது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்திடம் எப்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூரு மாநகர குடிநீர்த் தேவைக்காக அணை கட்டுகிறோம் என்பதெல்லாம் கட்டுக்கதை. காவிரியில் மழை பெய்தால் கிடைக்கும் உபரி நீரை ஏன் தமிழகத்துக்கு விட வேண்டும். அதையும் நாமே பயன்படுத்தலாம் என்பதுதான் கர்நாடகத்தின் திட்டம். இதற்காகத்தான் மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டிவிட வேண்டும் என்பதில் துடியாய் துடிக்கிறார்கள் கர்நாடக ஆட்சியாளர்கள். காவிரி வழக்கில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் மேற்கோள் காட்டுவதே தமிழகத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கடமையாக இருக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு