Published:Updated:

சினிமா பாணியில் அடாவடி வசூல்... ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நடப்பதென்ன?

ஆர்ப்பாட்டத்தில்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்ப்பாட்டத்தில்

அம்பல மேடை

சினிமா பாணியில் அடாவடி வசூல்... ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நடப்பதென்ன?

அம்பல மேடை

Published:Updated:
ஆர்ப்பாட்டத்தில்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்ப்பாட்டத்தில்

சினிமாவுல வர்ற மாதிரி 7 - 8 பேரை வச்சு மார்க்கெட் வியாபாரிகள்கிட்ட அடாவடி வசூல் பண்றாங்க, மாநகராட்சி சொன்னதுக்கு மேல பல மடங்குக் காசு கேக்குறாங்க, எதிர்த்துக் கேள்வி கேட்டா மிரட்டுறதோடு, கடையை இழுத்துப் பூட்டிடுறாங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னாடி இவங்களோட ஆட்டம் அதிகமாகிடுச்சிங்க. இதுக்கெல்லாம் விடிவே கிடையாதாதுங்களா?’ எனக் குமுறித் தீர்க்கின்றனர் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள்.

ஈரோடு ஆர்.கே.வி சாலையில் செயல்பட்டு வந்த ‘நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஈரோடு வ.உ.சி பூங்காவுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பூங்காவில் சாதாரணத் தகர ஷீட் போடப்பட்ட தரைக்கடைகள் கட்டியதற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது எனக் கணக்குச் சொல்லப்பட்டது. அப்போதே பல ஊழல் கதைகள் சுழன்றடித்தன. மார்க்கெட்டில் கட்டப்பட்ட 1,100 கடைகளில் இரவு முழுவதும் மொத்த வியாபாரம், காலையில் சில்லறை வியாபாரம் எனத் தினமும் பலநூறு டன் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதுமிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வருவதால் வ.உ.சி காய்கறி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாகக் காட்சி அளிக்கும்.

இந்தக் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வாகனங்களுக்கான கட்டணம், மார்க்கெட்டில் போடப்பட்டுள்ள கடைகளுக்கான வாடகை என மாநகராட்சி சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர், மாநகராட்சி நிர்ணயித்ததைவிட பல மடங்கு சுங்கம் வசூலிப்பதாக வெடித்திருக்கும் பிரச்னை பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தையொட்டி மார்க்கெட் வியாபாரிகள் சுமார் 500 பேர் சாலைகளில் காய்கறிகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்து வருவது போன்ற பிரச்னைகள், மார்க்கெட் வட்டாரத்தில் அணையாத் தீயாய் பற்றி எரிந்து வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில்
ஆர்ப்பாட்டத்தில்


இந்த விவகாரம் குறித்து வியாபாரிகளை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் வி.எஸ்.பி.மோகனிடம் பேசினோம். “மார்க்கெட்ல நுழையும் நடுத்தர சரக்கு வாகனத்திற்கு 70 ரூபாய், அதைவிடப் பெரிய வாகனங்களுக்கு 200 ரூபாய், 400 ரூபாய் என்ற அளவில்தான் இதுக்கு முன்னாடி வரை வசூலிச்சிட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ ஒரு நடுத்தர சரக்கு வாகனத்தில் 50 மூட்டை காய்கறிகள் ஏத்திட்டு வந்தா, மூட்டைக்கு 20 ரூபாய்னு 1,000 ரூபாய் வசூல் செய்றாங்க. 70 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டிய ஒரு நடுத்தர சரக்கு வாகனத்துக்கு, மூட்டைக் கணக்குச் சொல்லி, 1,000 ரூபாய் கேட்பது கொஞ்சமாவது நியாயமா? ஈச்சர் மாதிரி பெரிய டெம்போவுல 200 மூட்டை உருளைக்கிழங்கு ஏத்திக்கிட்டு வந்தா, மூட்டைக்கு 20 ரூபாய்னு 4,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. 400 ரூபாய் வசூலிக்க வேண்டிய ஈச்சர் வண்டிகிட்ட 10 மடங்கு அதிகமா சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது அராஜகமில்லையா?

வாகனங்களுக்கு இவ்வளவு கட்டணம் வசூல் செய்யச் சொல்லி மாநகராட்சி சொல்லியுள்ள நிலையில், இப்போதைய குத்தகைதாரர் வாகனத்திலுள்ள காய்கறி களின் எடையைக் கணக்கிட்டு அடாவடி வசூல் செய்றாரு. விவசாயிகள் கொண்டு வரக்கூடிய 25 கிலோ எடையுள்ள தக்காளிப் பெட்டிக்கு ரூ.3-ம், 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிக்கு ரூ.1-ம் தான் இத்தனை நாளாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போ, ஒரு தக்காளிப் பெட்டிக்கு 5 ரூபாய்னு அடாவடி வசூல் செய்றாங்க. சாதாரணக் கறிவேப்பிலைக்குக்கூட ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் சுங்கம் வசூலிக்கிறாங்க. அதே மாதிரி மார்க்கெட்டுக்குள் வர்ற சைக்கிள், இருசக்கர வாகனங்களுக்கு மாநகராட்சி கட்டணம் வசூலிக்கச் சொல்லவேயில்ல. ஆனா, இவங்க ஒரு வாகனத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கிறாங்க. மார்க்கெட்டுக்கு வெளியே நிறுத்துற வண்டிகளுக்கும் இதே மாதிரி 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறாங்க.

‘‘கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு மார்க்கெட்டுக்கு எடுத்துக்கிட்டு வர்ற விவசாயிகிட்ட அடாவடி வசூல் செய்றது தப்பில்லையா?’’


இதுமட்டுமல்லாம, மார்க்கெட்டுல 6 அடி நீளம், 4 அடி அகலமுள்ள ஒரு கடைக்குத் தினசரி 16 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கணும்னு மாநகராட்சி கெஜட்ல இருக்கு. ஆனா, இப்போ ஒரு கடைக்கு 50 ரூபாய் வாங்கிட்டு இருக்காங்க. இது எதுக்குமே ரசீது கொடுக்கிறது இல்லை. மாநகராட்சி பட்டியலில் 733 கடைகள் மட்டுமே இருக்க, இங்க தற்காலிகமாக அமைச்சிருக்கிற மார்க்கெட்டுல 1,100 கடைகளைக் கட்டி, கூடுதலாகக் கட்டப் பட்டுள்ள கடைகளை வியாபாரிகளுக்குக் கொடுத்துத் தினமும் 500 ரூபாய் வசூலிச்சிக் கிட்டு இருக்காங்க.

காய்கறிச் சந்தை
காய்கறிச் சந்தை


இந்த மார்க்கெட்டை அருண்பிரசாத் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், இப்போது தி.மு.க-வில் கேபிள் வாரியத் தலைவராக இருக்கும் குறிஞ்சி சிவக்குமார்தான் இதுல எல்லாம். அவர் ஆளுங்கதான் மிரட்டி, மார்க்கெட்ல அடாவடி வசூல் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அடாவடி வசூலுக்கு எதிராக எந்த வியாபாரியாவது கேள்வி கேட்டா, கடையைப் பூட்டி அவங்களைக் கடை போடக் கூடாதுன்னு மிரட்டுறாங்க. இது சம்பந்தமாக கலெக்டர், கமிஷனர்னு எல்லாருக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்ல. மாநகராட்சி கமிஷனருக்கும் தொடர்பு இருக்கு. ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காம எல்லாரும் பயந்து கிடக்குறாங்க” என்றார்.

நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் வைரவேல், “கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு மார்க்கெட்டுக்கு எடுத்துட்டு வர்ற விவசாயிகிட்ட அடாவடி வசூல் செய்றது தப்பில்லையா? மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்த ரெண்டே கால் வருஷமா இப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. தி.மு.க ஆட்சி வந்ததும் இவங்களோட ஆட்டம் அதிகமாயிடுச்சி. சுங்க வசூலையும் பலமடங்கு அதிகப்படுத்திட்டாங்க. தி.மு.க ஆட்சி வந்தாலே அராஜகம் செய்வாங்கன்னு சொல்லுறதை இவங்க உண்மையாக்கிட்டு இருக்காங்க’’ என்றார்.

காவல் துறை விசாரணை
காவல் துறை விசாரணை



வியாபாரிகளின் குற்றச்சாட்டுக் குறித்து மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்திருக்கும் அருண்பிரசாத்திடம் பேசினோம்.

“மார்க்கெட் சங்கப் பணத்தை எடுத்துப் பொறுப்பாளர் சிலர் அவங்க குடும்ப உறுப்பினர்கள் பேர்ல இடம் வாங்கிப் போட்டிருக்காங்க. அதைக் கேள்வி கேக்கக் கூடாதுன்னு திசைதிருப்ப இப்படிப் பிரச்னை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மற்றபடி மாநகராட்சி என்ன கட்டணம் வசூல் செய்யச் சொன்னதோ, அதைத்தான் நாங்க வியாபாரிகள்கிட்ட வசூலிச்சிக் கிட்டு இருக்கோம். அடாவடி வசூல் செய்றதாகச் சொல்றதெல்லாம் அப்பட்டமான பொய்” என்றார்.

இந்த விவகாரத்துக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படும் தி.மு.க மாநில விவசாயி அணி இணைச் செயலாளரும், கேபிள் வாரிய தலைவருமான குறிஞ்சி சிவக்குமாரிடம் பேசினோம். “மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்த அருண்பிரசாத் தி.மு.கவைச் சேர்ந்தவர். அதனால அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு இந்த விவகாரத்தில் என்னையும் சம்பந்தப்படுத்தித் தேவையில்லாம பிரச்னை செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

ஏற்கெனவே மார்க்கெட் விவகாரம் சம்பந்தமா மத்தியஸ்தரா இருந்து நான் சமாதானம் பேசிப் பிரச்னையை முடிச்சி விட்டேன். ஒருசாரார் என்னை மத்தியஸ்தரா பேச வாங்கன்னு கூப்பிட்டாங்க. அதுக்காகத் தான் இந்த விவகாரத்துல பேசினேனே ஒழிய, எனக்கு இதுல வேறெந்த சம்பந்தமும் இல்லை” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மோகன், வைரவேல், இளங்கோவன், சிவக்குமார்
மோகன், வைரவேல், இளங்கோவன், சிவக்குமார்

நடவடிக்கை எடுக்கப்படும்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை என்னோட கவனத்துக்கு வந்தவுடனேயே, மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எழுதிய போர்டை மார்க்கெட்ல வச்சோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், அதுக்கான ஜி.எஸ்.டி மற்றும் ரசீதில் குறிப்பிடப்பட்ட தொகையைத் தவிர வேறெதையும் கொடுக்கத் தேவையில்லன்னு வியாபாரிககிட்ட சொல்லியிருக்கோம். மார்க்கெட் ஏலத்துல ஒவ்வொண்ணுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கணும்னு சொன்னமோ அதைத்தான் வசூலிக்கணும். கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாதுனு குத்தகைதாரருக்கும் நோட்டீஸ் கொடுத்திருக்கோம். இந்த விவகாரம் சம்பந்தமாக ஈரோடு ஆர்.டி.ஓ தலைமையில பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருக்கு. எதிர்காலத்திலும் இப்படியான பிரச்னைகள் தொடர்ந்தால் ஏல விதிகளின் படி நோட்டீஸ் கொடுத்துக் குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது” என்றார்.

அனாமத்தா காசு போகுது!

காய்கறி மார்க்கெட்டுக்குத் தினசரி காய்கறி கொண்டு வரும் கதிர்வேலிடம் பேசினோம். “பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், கோவக்காய், தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளை விளைவிச்சு 2002-ல் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துட்டு இருக்கேன். இதுநாள் வரைக்கும் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை மூட்டையிலோ, கிரேடுகளிலோ கொண்டு வந்தா ஒரு மூட்டைக்கு 7 ரூபாய் வசூல் பண்ணுவாங்க. இப்போ ஒரு கிரேடுக்கு 14 ரூபாய், 20 ரூபாய்னு ஏகத்துக்கும் வசூல் பண்றாங்க. 150 கிரேடு காய்கறி கொண்டு வந்து 1,000 ரூபாய் கட்டுன இடத்துல, இன்னைக்கு 2,000 ரூபாய் கட்டுறோம். தினமும் 1,000 ரூபாய் அனாமத்தா போகுது. காய்கறி விலை கிலோ 5 ரூபாய்னு குறையுற சமயத்துல, 20 சதவிகிதம் சுங்க வசூலே கொடுக்க வேண்டியிருக்கு. இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டா, ‘காய்கறியை மார்க்கெட்டுக்குள்ள கொண்டு வராதீங்க’ன்னு மிரட்டுறாங்க. கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர், ஆர்.டி.ஓ எல்லாரும் ‘ரசீதுக்கான பணம் மட்டும் கொடுங்க’ன்னு சொல்றாங்க. ஆனா, மார்க்கெட்டுல அப்படி கொடுத்தா வாங்க மாட்டேங்குறாங்கன்னு சொன்னா, எந்த நடவடிக்கையும் எடுக்கிறது இல்லை” என்று குமுறினார்.