Published:Updated:

தைல மரங்கள் ஆபத்தானதா? நீதிமன்ற தடையும், வல்லுநரின் விளக்கமும்!

தைல மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தைல மரங்கள்

தீர்ப்பு

தைல மரங்கள் ஆபத்தானதா? நீதிமன்ற தடையும், வல்லுநரின் விளக்கமும்!

தீர்ப்பு

Published:Updated:
தைல மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தைல மரங்கள்

அந்நிய நாட்டு மரமான சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு நடைபெற்று வருகிறது. இதை விசாரித்து வரும் நீதிமன்றம் யூகலிப்டஸ் என்றழைக்கப்படும் தைல மரங்களாலும் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி, தமிழ்நாட்டில் இம்மரங்களை வளர்க்க தடை விதித்துள்ளது.

நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் தைல மரங்கள் அதிக அளவில் உறிஞ்சும் எனவும் மற்ற தாவரங்களை இது வளரவிடாது எனவும் மக்கள் மத்தியில் சமீபகாலமாக ஒரு கருத்து நிலவுகிறது. இதன் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றம் இப்படி ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தைல மரங்கள் மீது சுமத்தப்படும் கற்பிதங்கள் எந்தளவுக்கு உண்மை? ஆய்வுகள் என்னதான் சொல்கிறது?

ஜெயின் அலாவுதீன்
ஜெயின் அலாவுதீன்

தமிழ்நாடு வனத்துறையிலிருந்து ஓய்வுபெற்றவரும் தற்போது தமிழ்நாடு வனத்துறையின் ஓர் அங்கமாகச் செயல்படும் சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் செயல் இயக்குநருமான ஜெயின் அலாவுதீன் பேசியபோது, “தைல மரங்களில் 360 இனங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட வெப்ப மண்டலப் பயிர் இது. சுமார் 50 - 60 அடி உயரத்துக்கு எளிதாக வளரக்கூடியது. ஆங்கிலேயர்களால் இந்த மரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் 1974-75-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தால் பரவலாக்கப்பட்டது. இதன்படி காகித பயன்பாட்டுக்காகப் புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டது. இதில் பெரும் பான்மையான பகுதி வனத்துறைக்குக் கீழ் உள்ள நிலங்கள். இந்த மரத்தின் சிறப்பே விரைவான வளர்ச்சியை எட்டுவதே. அது வறட்சியான பகுதி யாக இருந்தாலும் சரி, நீர்வளம் மிக்கப் பகுதியாக இருந்தாலும் சரி எளிதாக வளர்ந்துவிடும். தமிழ் நாட்டில் இருக்கும் மரங்கள் விதை யில்லா முறையில் தைல மர குச்சி களைக்கொண்டு நடப்பட்டவை. இதில் ஆணி வேர்கள் இருக்காது. சல்லிவேர்கள்தான் இருக்கும். இம்மரங்களால் எப்படி நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்ச முடியும்?

ஆய்வு செய்தபோது
ஆய்வு செய்தபோது

தைல மரம் இயல்பிலேயே நீர்ச்சத்துக்கொண்ட மரம். இந்த நீர்ச்சத்துதான் இதன் தடிமனுக்கும், விரைவான வளர்ச்சிக்கும் காரணம். இம்மரத்தில் நீர்ச்சத்து குறையும்போது நிலத்தின் மேல்மட்டத்தில் உள்ள தண்ணீரை மட்டுமே உறிஞ்சும். எப்படி மனிதர்கள் நடைப்பயிற்சி அல்லது ஓடி முடித்த பிறகு, அதிகம் தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அப்படித்தான் தைல மரங்களும் நீர்ச்சத்துக் குறையும்போது மட்டுமே தண்ணீரை கூடுதலாக எடுத்துக்கொள்ளும். இது எப்பொழுதாவதுதான் நிகழும்.

இப்படி நீரை உறிஞ்சும் நேரத்தில் எடுத்த ஆராய்ச்சி முடிவை மட்டுமே வைத்துக்கொண்டு பரப்பிய தகவல்தான், இன்று தைல மரங்களுக்குத் தடை விதிக்கும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதால்தான், அந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி ஏற்பட்டதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. நான் ஆய்வு செய்ததில் 200 ஆண்டுகளைவிட கடந்த 20 ஆண்டுகளில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளது. நான் தைல மரங்களின் வேர்களை ஆய்வு செய்திருக்கிறேன். இது பூமிக்குள் 4 அடியிலிருந்து 5 அடிக்குள்தான் செல்கிறது. பக்கவாட்டிலும் இதே அளவுதான். அப்படியிருக்கும்போது எப்படி 200, 300 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்ச முடியும்? அதிக எண்ணிக்கையில் பெருகிய தொழிற்சாலைகளாலும், விவசாயத்துக்காகப் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளாலும்தான் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

தைல மரங்கள்
தைல மரங்கள்

இந்த மரத்தின்கீழ் பிற தாவரங்கள் வளர்வதில்லை என்று சொல்கிறார்கள். இதுவும் உண்மையல்ல. நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனத்துக்குள்ளே தைலமரங்களுக்கடியில் பல வகையான தாவரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதை நேரடியாகச் சென்று ஆவணப்படுத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20,000 ஹெக்டேரில் தைல மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நடவு செய்த 5 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். இந்த 5 ஆண்டுகளில் ஒரு மரம் 60-70 கிலோ வந்துவிடுகிறது. நல்ல மண்வளம் என்றல் 100 கிலோ கிடைக்கும். தைல மரங்களில் இருக்கும் பூக்களிலிருந்து தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை நடத்துகின்றன. பறவைகள் கூடு கட்டுகின்றன. பூச்சிகள் வருகை புரிகின்றன. இந்த மரத்துக்கு அடியில் மண்புழுக்கள் இருக்கின்றன. சூழல் சமநிலைக்கு 33 சதவிகிதம் வனப்பரப்பு இருக்கவேண்டிய இடத்தில் தற்போது 24 சதவிகிதம்கூட வனம் இல்லை. வறட்சி யான பகுதிகளிலும் மிக எளிதாக வளரக்கூடிய தைல மரங்களுக்குத் தடை விதிப்பது என்பது மிகவும் தவறான முடிவு.

கர்நாடகத்தில் தைல மரங்களுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டு, இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தைல மரங்களைச் சாகுபடி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

சுந்தரராஜ்
சுந்தரராஜ்

பெங்களூரில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்தின் வனப்பாதுகாப்பு பிரிவு விஞ்ஞானி முனைவர் சுந்தரராஜ், “மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் அரசுகள் மரங்களின் கழுத்தில் கத்தி வைப்பதற்குத் தயங்குவதே இல்லை. இப்போது நீதிமன்றமும் இந்தச் செயலில் இறங்கியுள்ளது. தைல மரங்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்களுக்கு எனச் சில சிறப்பு இயல்புகள் உள்ளன. இவற்றை எங்கே விதைத்தாலும் முளைத்து வந்துவிடும். இவற்றை வறட்சியான பகுதியில் பயிர் செய்யலாம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனிதர்களால்தான் இம்மரங்கள் வளர்க்கப்பட்டன.

எனவே இம்மரங்களை வில்லன்கள் போலப் பார்ப்பது நியாயமல்ல. மரங்களை வெட்டுவதற்கும், மரங்களில் ஆணி அடிப்பதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மரங்களை வளர்ப்பதற்குத் தடை விதிப்பதும், அதை அழிப்பதற்கு உத்தரவிடுவதும் ஏற்புடையதல்ல” என்றார்.

தமிழ்நாடு வனத்துறையின் ஓர் அங்கமாகச் செயல்படும் சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்ட செயல் இயக்குநரே, தைல மரங்கள் ஆபத்தானவை அல்ல என்று சான்றிதழ் கொடுக்கிறார், ஆய்வு மற்றும் அனுபவ அடிப்படையில். ஆனால், அதே வனத்துறைதான், அந்நிய மரம் என்கிற பட்டியலை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மரங்களில் ஒன்றுதான் இந்த தைல மரமும். அந்த மரத்தால் ஆபத்தில்லை என்று அதே துறையிலிருப்பவர் ஆய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கும்போது, எப்படி ஆபத்தான மரம் என்று நீதிமன்றம் தடை செய்யும். அப்படி நீதிமன்றம் தடை அறிவிப்பை வெளியிட்டபோது, வனத்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஏன் என்கிற கேள்விகளுடன் தமிழக வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். ‘அந்த அதிகாரியிடம் பேசுங்கள், இந்த அதிகாரியிடம் பேசுங்கள்’ என்று அலைகழிக்கிறார்களே ஒழிய யாரும் முறையாக இந்த விஷயம் குறித்து பேச முன்வரவில்லை.