Published:Updated:

உழவர்களின் உறுதியை உலகுக்கு உணர்த்தும் போராட்டம்!

டெல்லி போராட்ட களத்திலிருந்து சில காட்சிகள்...
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி போராட்ட களத்திலிருந்து சில காட்சிகள்... ( AP )

அனுபவம்

உழவர்களின் உறுதியை உலகுக்கு உணர்த்தும் போராட்டம்!

அனுபவம்

Published:Updated:
டெல்லி போராட்ட களத்திலிருந்து சில காட்சிகள்...
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி போராட்ட களத்திலிருந்து சில காட்சிகள்... ( AP )

நான்கு மாதங்கள் கடந்தும் அமைதியான வழியில் போராடும் விவசாயிகள், டெல்லியின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்கும் முடிவுகளை எடுப்பதில் அலட்சியமாக இருக்கிறது மத்திய அரசு. டிக்ரி, சிங்கு, காசிப்பூர் ஆகிய போராட்ட களங்களுக்கு நேரில் சென்று, பல விவசாயிகளிடமும் பேசியதோடு அங்கு விவசாயிகள் எப்படி இருந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்தேன். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலையோரங்களில் புது நகரங்களையே உருவாக்கி இருக்கிறார்கள் போராடும் விவசாயிகள். டெல்லியின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நெடுஞ்சாலை முழுவதும் இப்படித்தான் இருக்கிறது. இது ஒவ்வொன்றும் அவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் சான்று. இது, ‘இந்தப் போராட்டம் நீண்ட காலத்திற்கு நடக்கும், நாங்கள் சளைக்க மாட்டோம்’ என்ற மன உறுதியின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

பஞ்சாப் சர்தார்ஜிகளின் பாரம்பர்யம், வழிமுறைகள், செல்வாக்குப் போன்ற பல விஷயங்கள் அங்கு இருப்பதைக் காண முடிந்தது. அவர்களைப் பொறுத்தவரை யாரும் உணவு இல்லாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. ‘லங்கர்’ என்பது அவர்களது கலாசாரத்துடன் ஒட்டிய எல்லோருக்கும் உணவு வழங்கும் முறை. அந்த நடைமுறை அங்கு செயல்பாட்டில் உள்ளது. அங்குள்ள அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. உள்ளூர் ஏழைகள், குறிப்பாக ஏழை குழந்தைகள் அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது.

என் போன்ற பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவருக்கும் லங்கர்களில்தான் உணவு. அதுவும் சாதாரண உணவு இல்லை. ரொட்டிகள், பிரியாணி, பீட்சா, பழச் சாறுகள் முதல் இனிப்புகள்வரை எல்லாம் கிடைக்கின்றன. அவை தவிர செல்போன் சார்ஜர்கள், தலையணைகள், கூடாரங்கள், குளிருக்கான ஆடைகள் ஆகியவற்றைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. எல்லாம் இலவசம். நீர் வடிப்பான்கள்(ஆர்.ஓ) மற்றும் நீர் குளிரூட்டிகளை அமைக்கும் இளம் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனை, இலவச மருந்துக்கடை எல்லாம் இருக்கிறது. இலவச ஷேர் ஆட்டோக்கள்கூட இயங்குவதைப் பார்த்தேன்.

டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து

ஒவ்வொரு இடத்திலும் நூலகங்கள் இருக்கின்றன. சில இடங்களில் பள்ளிகள்கூடத் தன்னார்வலர்களால் நடத்தப்படுவதை நான் பார்த்தேன். ‘உள்ளூர் ஏழை குழந்தைகளுக்குப் போதுமான உணவு இல்லை. நாங்கள் அவர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்தோம். அதனால் அவர்கள் இங்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள்’ என்கிறார்கள் அங்குள்ள தன்னார்வலர்கள்.

டெல்லியின் ஒவ்வொரு எல்லையிலும் அதன் 10-25 கி.மீ. தூரத்திற்கு டிராக்டர் ட்ராலிகள் இரண்டு பக்கமும் நிற்கின்றன. அவை அனைத்தும் மிக வலுவான கட்டமைப்பு உடையவை. சிலரிடம் மின் விசிறி, குளிரூட்டிகள்கூட இருந்தன. அனைவருக்கும் படுக்கை, சமையல் எரிவாயு, அடுப்பு மற்றும் போதுமான மளிகை சாமான்களை அவரவர் ட்ராக்டர் டிராலியில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் பொருள்கள் தீரத்தீர அவரவர் கிராமங்களிலிருந்து கொண்டு வந்து மீண்டும் நிரப்புகிறார்கள் உறவினர்கள். அரசு எப்போதும்போல் நீர் ஜெட்டுகள் அல்லது தடியடி, கண்ணீர்ப் புகையைப் பரிசாகக் கொடுத்தாலும் எதுவும் பலிக்காது. அவரவர் ட்ராலிக்குள் சென்று மூடிக்கொள்கிறார்கள்.

ஓர் இடத்தில் ஒரு போர்வெல் பம்ப் இருப்பதைப் பார்த்தேன். அது, நெடுஞ்சாலையின் மையத்திலிருந்தது. அதைப்பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, “ஆமாம்... அரசாங்கம் நீர் விநியோகத்தைத் துண்டித்துவிட்டது. தண்ணீருக்கு என்ன செய்வது? நாங்கள் சொந்த போர்வெல் போட்டுவிட்டோம்’’ என்றார்கள். இப்போது சொல்லுங்கள்... எந்தவொரு அரசாங்கமும் அத்தகைய போராட்டத்தை என்ன செய்ய முடியும்? அவர்கள் இங்கு தங்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக, அடுத்த தலைமுறைக்காகப் போராடுகிறார்கள். ஆனால், அதற்காக உணவின்றி, பரிதாபமாக இருக்க வேண்டியதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துகிறார்கள்.

‘இந்தப் போராட்டம் விவசாயிகளின் பிரச்னை தாண்டி ஜனநாயகம் குறித்த வலியுறுத்தலையும் காட்டுவதாக அமைந்துள்ளது.’’

அவர்களில் பலரின் உறவினர்கள் பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறார்கள். ஒருவர் சூப்பர் மாலில் இடம் கொடுக்கிறார். வேறொருவர் தனது பெரிய வணிக இடத்தை விவசாயிகளின் கூட்டமைப்பு அமர்வுகள் நடத்த கொடுத்துள்ளார். ஒருவரது கடையின் ஒரு பகுதிதான், இப்போதைய ‘நிரந்தர’ப் பத்திரிகையாளர் சந்திப்பு அறை. அப்படி நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ‘லங்கரி’லிருந்து தேநீர், உணவு எல்லாம் வருகிறது.

போராட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் 3 மசோதாக்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதன் உட்பிரிவு, உட்பிரிவுக்குள் இருக்கும் உட்பிரிவு என முழுமையாகத் தெரிகிறது. யாரிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் ஒரே மாதிரியான பதில் கிடைக்கிறது. ‘நீங்கள் இங்கே எத்தனை நாள்கள் தங்க முடியும்’ என நான் அவர்களிடம் கேட்டேன். ‘ஒரு வருடம் அல்லது 2 வருடம்’ என்றனர் அனாயாசமாக‌‌! ‘எவ்வளவு நாள்கள் ஆனாலும் நாங்கள் இங்கு தங்கியிருக்கத் தயார். வேளாண் சட்டங்கள் ரத்துச் செய்யப்படும் வரை, நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்கிறார்கள்.

அனந்து
அனந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து
டெல்லி போராட்ட களத்திலிருந்து

அமைதியான, நம்பிக்கை நிறைந்த, விவசாயிகளின் உறுதி நிறைந்த தளத்தை அங்கு கண்டேன். அனைத்து மாநிலங்களிலிருந்தும் உழவர் சங்கங்கள், குழுக்கள் மற்றும் விவசாயிகளும் சாத்தியமான எல்லா வழிகளிலும் விசாயிகளுடன் பங்கேற்பது முக்கியம். எல்லா இடங்களிலிருந்தும் அதிக அழுத்தம் ஏற்படுவதால் மட்டுமே, அந்த விவசாய விரோத சட்டங்கள் ரத்துச் செய்யப்படும்.

போராடும் விவசாயிகளுடன் அரசு, 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தின. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட 41 உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினர். நமக்கெல்லாம் பரிச்சியமான விவசாயப் போராளி (மரபணு மாற்றுப்பயிர்களுக்கான எதிர்ப்பில் முன்னணியில் நின்றவர்) கவிதா குருகண்டி தான் அந்த உறுப்பினர்.

இந்தப் போராட்டம் விவசாயிகளின் சிக்கல் தாண்டி ஜனநாயகம் குறித்த வலியுறுத்தலையும் காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர் கட்சிகள் தவறவிட்டதை விவசாயிகள் முன்னிறுத்தி வருகிறார்கள். இது விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல, கிராமப்புற இந்திய வாழ்வாதாரங்கள் பற்றிய போராட்டமும் ஆகும்.

எனவே அரசு அகங்காரத்தினை ஓரம்கட்டி வைத்துவிட்டு விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கும் இந்தச் சட்டங்களை நீக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், பயிர் பன்மயம், விதை இறையாண்மையைக் காக்க வேண்டும்.