
மாத்தியோசி
ஆடு சம்பந்தமான செய்தி அண்மையில் அதிக கவனம் பெற்றது. தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்ட குடும்பத்தினர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள மன்னவனூர், மத்திய அரசின் செம்மறி ஆடுகள் உரோம மற்றும் முயல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டனர். அங்கு வளர்க்கப்படும் உரோமங்கள் மிகுந்த ஆட்டுக் கூட்டத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முயல் பண்ணையில் அதிக எடை கொண்ட மெகா முயல்களைக் கண்டு ரசித்தனர் என்பதுதான் அந்தச் செய்தி.
மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையம் கொடைக்கானலிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள மன்னவனுாரில் 150 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் ஏன் இங்கு தொடங்கப்பட்டது? என்பதற்குப் பின்னால் ஒரு வரலாற்றுச் சம்பவம் உள்ளது.

1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனப்போரில் பெரும்பாலான ராணுவ வீரர்கள் குளிரால் இறந்தனர். நம்மிடம் போதுமான ‘கம்பளி’ ஆடைகள் இல்லாத தால்தான் வீரர்கள் இறந்தனர் என அறிந்தது மத்திய அரசு. மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் கடும் பனியால் பாதிக்கப்படுவதும் கண்டறியப் பட்டது. ஆகையால், ராணுவ வீரர்களுக்குத் தரமான ‘கம்பளி’ ஆடைகள் தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்துக்கு இந்தத் தகவல் சென்றது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு அப்போது மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம், அவிக்கா நகரில் தலைமை செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையம் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதே ஆண்டில் தமிழ்நாட்டிலும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.
தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில், மிதவெப்ப நிலை- குளிர்ச்சியான நிலை நிலவுவதால் ரஷ்யாவின் ‘மெரினோ’ செம்மறி ஆடுகள் வளர்வதற்கு ஏற்ற நிலை இருந்தது. இதை விஞ்ஞானிகள் சி.சுப்பிரமணியத்திடம் தெரிவித்தார்கள். உடனடியாக இங்கு தென்மண்டல செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையம் (Southern Regional Research Centre, Central Sheep and Wool Research Institute) தொடங்க நேரு உத்தரவிட்டார்.
இந்தியாவின் நேச நாடாக இருந்த அப்போதைய சோவியத் ரஷ்யாவிலிருந்து ‘மெரினோ’ ரகச் செம்மறி ஆடுகள் இங்கு கொண்டு வரப்பட்டன. மால்புறா, நாலி, சோக்லா, ஜாய் என ராஜஸ்தான் ரகச் செம்மறி ஆடுகளுடன் கலப்புச் செய்து, ‘இந்தியன் கலப்பின செம்மறி ஆடுகள்’ உருவாக்கப்பட்டன.
இந்தக் கலப்பின ஆடுகளுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ‘பாரத் மெரினோ’ எனப் பெயர் சூட்டினார்.
‘‘இந்தியாவில் உள்ள செம்மறியாடுகளின் இறைச்சி சுவையில் முதலிடத்தில் இருப்பது மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ‘பன்னூர்’ இனம்தான்.’’
ஆரம்பத்தில் இந்த ஆடுகளின் ரோமங்களால், கைகளால் பின்னப்படும் சால்வை, கம்பளி, உல்லன் துண்டு, ஸ்வெட்டர்... போன்றவை தயாரிக்கப்பட்டன. இந்த வகைச் செம்மறி ஆடுகளின் ரோமங்களைப் பக்குவப்படுத்தி, அவற்றுடன் குதிரை முடி, பருத்தி நூல், ஒட்டக முடிகளை இணைந்து பல்வேறு ஆடைகள் தயாரிக்கப்பட்டன.
எல்லையில் கடும்குளிரையும் தாங்கும் கம்பளிகளைத் தயாரிக்கும் தேவை அதிகரித்தது. கனத்த கம்பளி மற்றும் தரை விரிப்பான்களைப் பயன்படுத்த ஏற்ற, ‘அவிக்காலின்’ ரகச் செம்மறி ஆடுகள் பிரத்ேயகமாக வளர்க்கப் பட்டன. இந்த வகை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறையே ரோமங்கள் கிடைக்கும். அதைப் பக்குவப்படுத்தி ஏழு முறை பதப்படுத்திய பின், தரைவிரிப்பான்கள், கம்பளிகள் தயாரித்து ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்போதும் அனுப்பப் படுகின்றன.
ஆனால், தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ்நாட்டில் இப்படி ஓர் ஆராய்ச்சி நிலையம் உள்ள தகவல் பல விவசாயிகளுக்குத் தெரியாது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகள், இந்த ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒருமுறை கர்நாடகா மாநிலம், மாண்டியா பகுதிக்குச் சென்றபோது… அங்குள்ள விவசாயிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ‘உங்கள் மாநிலத்தில் உள்ள கொடைக்கானலுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்’ என்று பேச்சுவாக்கில் சொன்னார்கள். ‘சுற்றுலா வந்தீர்களா?’ என்ற என் கேள்விக்கு...
‘‘இல்லை, செம்மறி ஆடுகள் வாங்குவதற்கு வந்தோம்’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.
இந்திய அளவில் 46 வகைச் செம்மறி ஆடுகளும் தமிழ்நாட்டில் 8 வகையும் உள்ளன. இந்தியாவில் உள்ள செம்மறியாடுகளின் இறைச்சி சுவையில் முதலிடத்தில் இருப்பது மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ‘பன்னூர்’ இனம்தான்.

ஆனால், இந்த ஆடுகளின் எடை அதிகபட்சம் 10 கிலோவுக்கு மேல் தாண்டது. இந்தப் பகுதி விவசாயிகள் கொடைக் கானலிருந்து ‘பாரத் மெரினோ’ கிடாக்களை வாங்கி வந்து, பன்னூர் பெட்டைகளுடன் இனக்கலப்புச் செய்தார்கள். இதன் மூலம் உருவான ஆடுகள் 15-20 கிலோ எடையில் வளர்கின்றன. இதன் மூலம் நல்ல லாபத்தைக் கர்நாடகா விவசாயிகள் பெற்று வருகிறார்கள்.
இதுபோலத் தமிழ்நாட்டில் செய்ய முடியாதா? என்று கொடைக்கானலில் உள்ள மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.எஸ்.ராஜேந்திரனிடம் கேட்டோம்.
‘‘சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நான் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் முதன்மை விஞ்ஞானியாக உள்ளேன் என்பது நம் மாநிலத்துக்குப் பெருமை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மண்டல ஆராய்ச்சி மையம் இது.
இந்த நிலையம் தமிழ்நாட்டிலிருந்தாலும் கர்நாடகா விவசாயிகள்தாம் செம்மறி ஆடுகள் வளர்ப்பில் முனைப்புடன் உள்ளார்கள். இதைப் பயன்படுத்தி அதிக பலன் பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில், மேச்சேரி, சென்னை சிவப்பு, திருச்சி கறுப்பு, கோயம்புத்துார் குறும்பை, நீலகிரி... இன செம்மறி ஆடுகள் விவசாயிகளால் விரும்பி வளர்க்கப் படுகின்றன. இந்த ஆடுகளுடன் பாரத் மெரினோ இனத்தைக் கலப்பு செய்தால், கூடுதல் எடையில் ஆடுகள் வளரும்.
ஆனால், பாரத் மெரினோ ஆடுகள் குளிர் சூழ்நிலையில் வளரும் தன்மை கொண்டவை. எனவே, அதிக வெப்பநிலை கொண்ட மாவட்டங்களில் இதை வளர்க்க முடியாது. இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பாரத் மெரினோ இன கிடாக்களுக்கு வெப்பம் தாக்காத அளவுக்குக் கொட்டகை அமைத்து வளர்க்கலாம். தென்னந் தோப்புகளில் கொட்டகை அமைக்கலாம்.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்தினர், தங்கள் தோட்டத்தில், இப்படித்தான் கொட்டகை அமைத்து, பாரத் மெரினோ ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான், இந்த வகை ஆடுகளை வளர்க்கிறார்கள்.
ஆனால், இறைச்சி தேவை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. எங்கள் ஆராய்ச்சி நிலையம் ஒரு சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது. இதன்படி தினமும் சுமார் 2,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள்.

ஆனால், இதை வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. செம்மறி ஆடு, முயல் வளர்ப்புச் சம்பந்தமாக வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் எங்கள் விஞ்ஞானிகள் குழு தயாராகவே உள்ளது’’ என்று அக்கறையுடன் பேசினார் முனைவர் ஏ.எஸ்.ராஜேந்திரன். தொடர்புக்கு, செல்போன்: 99433 71164 (காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை).
இந்த ஆராய்ச்சி மையத்தில் ‘சோவியத் சின்ச்சிலா’ முயல்களும், ‘ஒயிட் ஜெயன்ட்’ முயல்களும் பராமரிக்கப்படுகின்றன. இம்முயல்களுக்கும், காட்டு முயல்களுக்கும் வேறுபாடு உள்ளது. காட்டு முயல்கள் பிறக்கும்போது பின்னங்கால்கள் உறுதியாகவும், ரோமத்துடனும் பிறக்கும். ஆராய்ச்சி மையத்தில் உள்ள முயல்கள் பிறக்கும்போது ரோமம் இருக்காது.
சரி, ஆடு விஷயத்துக்கு வருவோம். ஆடு வளர்ப்பை முறையாகச் செய்து கொழுத்த லாபம் பெறுபவர்களையும் பார்த்துள்ளேன். ஆடு வளர்ப்பில் போதிய அனுபவம் இல்லாமல், கையைச் சுட்டுக் கொண்டவர் களும் ஏராளம்.
ஆடு வளர்ப்புதானே என்று அசால்ட்டாக இறங்கினால் சேதாரம் அதிகமாகவே இருக்கும்.
சேலம் பக்கத்தில் ஒரு நண்பர், புதுமையான முறையில் ஆடு வளர்க்கப்போகிறேன் என்று பல லட்சங்களில் முதலீடு செய்து ஆடு வளர்ப்பில் இறங்கினார். ஆறு மாதங்கள்கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பண்ணையை மூடிவிட்டு, “ஆடு வளர்ப்பில் யாரும் இறங்காதீர்கள்’’ என்று ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.
அவரைப் பேச விட்டுப் பார்க்கும் போதுதான், விஷயம் புரிந்தது. ஜமுனா பாரி, பார்பாரி, ஜாலவாடி… என அத்தனையும் வெளி மாநில வகை ஆடுகள். இத்தனைக்கும் மேச்சேரி ஆடு ஆராய்ச்சி மையத்துக்கும் இவரது பண்ணைக்கும் அரை மணிநேரப் பயணத் தூரம்தான். எது நம் பகுதிக்கு ஏற்றது, வெளிமாநில ஆடுகளை வளர்க்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கவனிக்கத் தவறியதால் பணமும் காலமும் கரைந்து போனது.
ஆடு வளர்ப்பு என்பதை நேரடியாகத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. கிராமப்புறங்களில் வாரத்துக்கு/ஒத்திக்கு ஆடு வளர்ப்பது என்கிற ஒரு முறை இருக்கிறது. அதாவது ஓர் ஆடு வாங்கிக் கொடுத்தால், அதை அவர்கள் வளர்த்து பெரிதாக்குவார்கள். முடிவில் முதலீடு திரும்பி வந்துவிடும். லாபத்தில் ஆளுக்குப் பாதி. அதாவது, இரண்டு குட்டி போட்டால் ஒரு குட்டி வளர்த்தவருக்கு, இன்னொரு குட்டி முதலீடு செய்தவருக்கு. தமிழகம் முழுக்கவே இப்படியான வளர்ப்பு முறை இப்போதும்கூட ஆங்காங்கே வழக்கத்தில் இருக்கிறது.

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் திண்டுக்கல் பகுதியில் தங்க நேரிட்டது. அங்கே நண்பர்களின் ஆலோசனைபடி, ஆடு வளர்ப்புக்காக 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார். நான்கே மாதங்களில் முதலீட்டுடன் 10 ஆயிரம் ரூபாயும் கிடைத்தது. அதை ஆளுக்கு 5 ஆயிரம் என்று பகிர்ந்துகொண்டார்கள். வட்டிக் கணக்குப் போட்டால் ஆண்டுக்கு 33%. ‘ஆடுகள் சரியாக வளர்க்கப்படவில்லை. அப்படி வளர்த்திருந்தால், லாபம் இன்னும் கூடியிருக்கும்’ என்று பூரிப்புடன் பகிரும் அந்த நண்பர், தற்போது சென்னைக்குத் திரும்பிவிட்டார். என்றாலும் நண்பர்கள் மூலமாக ஆடு வளர்ப்பைத் தொடர்கிறார்.