Published:Updated:

`குஜராத் விவசாயிகளுக்கு இதுதானே நடந்தது?' - வேளாண் மசோதாக்களும், வல்லுநர்களின் கேள்விகளும்

ஒரு சந்தையில் அரசு ஏற்கெனவே குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. இப்போது தனியார் பெரு நிறுவனங்களும் வந்து வாங்கும் என்றால் அது என்ன மாதிரியான சந்தை?

மத்திய அரசு சமீபத்தில் விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த மசோதா ஆகிய மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்புக்கிடையிலும் சில வியாபார அமைப்புகள் மற்றும் பா.ஜ.க சார்ந்த அமைப்புகள் இவற்றிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்கள் சட்டமானால், விவசாயிகளுக்கு பெருத்த தீமையைத்தான் கொண்டு வரும் என்று வல்லுநர்கள் பேசி வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் பேசியபோது, ``அத்தியாவசியப் பொருள்கள் தடைநீக்க திருத்தச் சட்டத்தின் மூலம் விளைபொருள்களை எங்கே வேண்டுமென்றாலும் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும் என்று அரசு சொல்கிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை அருகிலுள்ள உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கே கொண்டு சென்று விற்க முடியாதவர்கள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கொண்டு சென்று விற்பனை செய்வார்களா என்பதை யோசிக்க வேண்டும்.

இப்போது இந்தமாதிரி தடைகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இப்போதும் அதுபோன்ற தடைகள் இல்லை. ஆந்திராவின் குண்டூர் மிளகாய் திருநெல்வேலியில் கிடைக்கிறது. காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஆப்பிள்கள் தமிழ்நாட்டில் எளிதாகக் கிடைக்கின்றன. கர்நாடக, ஆந்திராவில் தயார் செய்யப்படும் அரிசிதான் தமிழ்நாட்டில் அதிகம் புழங்குகிறது. தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள்தான் கேராளாவுக்கு அதிகம் செல்கின்றன. இப்படியிருக்கையில் இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது யாருக்கு உதவும் என்றால் பெரு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்குத்தான் அதிகம் உதவும். `ஒரே நாடு, ஒரே சந்தை’ என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு முறை.

Farmer
Farmer
AP Photo / Rajesh Kumar Singh

அந்த முறையைத்தான் இங்கே திணிக்கப் பார்க்கிறார்கள். அங்கே விவசாயி விதைக்க பயன்படுத்தும் விதை முதல் நுகர்வோர் தட்டில் விழும் உணவு வரை பெரிய வர்த்தக நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. அந்த முறையின் சாரம்சங்கள்தான் இந்த மூன்று மசோதாக்களின் உள்ளடக்கத்திலும் உள்ளன. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு மட்டும் எதிரானதில்லை. உணவு சாப்பிடும் ஒவ்வொவருக்கும் எதிரானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொன்று விவசாயிகளே வியாபாரிகளாக மாற வேண்டும் என்பதுதான் இந்தச் சட்டத்தின் அடிப்படை என்று சொல்லப்படுகிறது. அப்படி எண்ணமுடையவர்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செயல்படுத்திப் பார்த்துவிட்டு, பிறகு சட்டமாகக் கொண்டு வந்திருக்கலாம் அல்லவா? அருகிலுள்ள உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கே செல்ல முடியாதவர்கள், உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்து கொண்டிருக்க முடியுமா? இன்றைக்கு விவசாயிகளுக்கு இருக்கும் நெருக்கடியில் இவையெல்லாம் சாத்தியமே இல்லை. அதுவும் கீரை, காய்கறிச் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்குச் சற்றும் ஏற்றதல்ல. இவையெல்லாம் பெரிய நிறுவனங்களுக்குத்தான் சாத்தியப்படும். அதேமாதிரி ஒப்பந்த பண்ணைய முறை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

குஜராத்தில் பெப்சி நிறுவனம் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் தரத்துக்கு இல்லையென்று சொல்லி பல விவசாயிகளிடம் உருளைக்கிழங்கை எடுக்க மறுத்துவிட்டது. ஒப்பந்தம் போட்ட விவசாயிகள் நடுத்தெருவில் நின்றார்கள். இதுதானே அங்கு நடந்தது?

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

இந்த ஒப்பந்த விவசாயச் சட்டம் என்ன சொல்கிறது என்றால் விவசாயிகளின் விளைபொருள்களை வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட விலைக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளும். சந்தையில் விலை குறைந்து போனாலும், அதிக விலையாக இருந்தாலும் ஒப்பந்த விலைக்குத்தான் அந்த நிறுவனம் வாங்கிக்கொள்ளும். வணிக நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும்போது எந்தத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதையும் கூறிவிடும். விதை, உரம் போன்றவற்றையும் வழங்கிவிடும். இதன்படி உற்பத்தி செய்த விளைபொருள்களைத் தனியார் நிறுவனத்துக்கு விவசாயி தரக் கடமைப்பட்டவர் ஆவார். அதாவது, இதுவரை இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்து வந்த அரசு வேளாண்துறைப் பணிகளைத் தனியாரிடம் விட்டு விடுகிறது. எனவே, பா.ஜ.க ஆதரவு விவசாயிகள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். இந்தச் சட்டங்களிலுள்ள தீமையை பா.ஜ.க ஆதரவு விவசாயிகள் வெளிப்படையாகப் பேச வேண்டும்” என்றார்.

தமிழக பா.ஜ.க விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜிடம் பேசியபோது, ``இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் எதிர்க் கட்சிகளின் ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால், பாரத பிரதமர் மோடி வந்த பிறகு, விவசாயத்தில் செய்த சீர்திருத்தங்களால் விவசாயத் தற்கொலைகள் குறைந்திருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகத்தான் இந்த மூன்று சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையைச் செயல்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ்

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையைத்தான் வேறு வடிவத்தில் செயல்படுத்தி வருகிறோம். இதைப் பொறுக்க முடியாமல் காங்கிரஸும் தி.மு.க-வும் அரசியல் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்த நாடகத்தில் விவசாயிகளையும் உசுப்பிவிட்டு நடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நாடகத்தில் விவசாயிகள் பங்கேற்காமல் உஷாராக இருக்க வேண்டும்.

நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் தெரியும். தற்போதிருக்கும் வியாபாரிகள் எந்தளவுக்கு விவசாயிகளிடமிருந்து குறைத்து வாங்க முடியுமோ அந்தளவுக்கு குறைத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் வியாபாரிகளாக மாற வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். எத்தனை காலத்துக்குத்தான் விவசாயிகள் விளைந்ததை வந்த விலைக்கு விற்றுக்கொண்டிருப்பார்கள். அதை நல்ல விலைக்கு விற்க இச்சட்டங்கள் வழிகாட்டும். விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் பொருள்களை விற்க வழி செய்கின்றன இந்தச் சட்டங்கள்.

Farmer
Farmer
AP Photo / Rajesh Kumar Singh

இன்னொன்று அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு, கோதுமை, நெல் உள்ளிட்ட விளைபொருள்கள் நீக்கப்பட்டிருப்பதால், இனி பொருள்களுக்கு டிமாண்டு அதிகரிக்கும். அதன்மூலமாக விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளே நடத்தி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நாட்டில் பெருகி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கெல்லாம் நல்ல விற்பனை வாய்ப்பு கிடைக்கும். விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கு 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இனி விவசாயத்துறை இண்டஸ்ட்ரி முறையில் இயங்கும். அதனால் உற்பத்தியும் பெருகும் விலையும் கிடைக்கும்” என்றார்.

பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனிடம் பேசியபோது, ``ஒரு சந்தையில் அரசு ஏற்கெனவே குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. இப்போது தனியார் பெரு நிறுவனங்களும் வந்து வாங்கும் என்றால் அது என்னமாதிரியான சந்தை? விவசாய விளைபொருள்களின் ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்த மாதிரி அதற்கொரு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது. இப்படியிருக்கும்போது தனியார்காரன் வந்து வாங்குவான் என்றால் அவன் என்ன விலைக்கு வாங்குவான்.

ஜெயரஞ்சன்
ஜெயரஞ்சன்

விலை குறைவாக இருக்கும்போது குறைவாகவும், அதிகமாக இருக்கும்போது அதிகமாகவும் வாங்குவான். இதனால் விவசாயிகளுக்கு என்ன கிடைத்துவிட முடியும். ஒரு உத்தரவாதமான விலை கிடைக்கும்போது விவசாயிகள் அந்தக் குறிப்பிட்ட பயிரை சாகுபடி செய்ய முடிவெடுப்பார்கள். அந்த முறையையே இந்தச் சட்டம் கேள்விக்குறியாக்கிவிட்டது. இது முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கான சட்டங்களே. ஏற்கெனவே ஒப்பந்த பண்ணைய சட்டம் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கரும்பு, கோகோ உள்ளிட்ட பயிர்களுக்கு இருக்கிறது. ஒப்பந்தப்படி பணத்தை முறையாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களா? எத்தனை விவசாயிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் விவரம் தெரியாதவர்களே!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு