பிரீமியம் ஸ்டோரி

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமீபத்தில் ஓர் ஆச்சர்ய நிகழ்வு. முதலமைச்சரைப் பாராட்டி, ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை, இதற்கு என்ன ரியாக்‌ஷன் காட்டுவது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார். சரி, எதற்காக முதலமைச்சரைப் பாராட்டி இப்படி ஒரு கொண்டாட்டம்?

இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச்சரும் செய்யாத சாதனையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை 750 ரூபாய் வழங்கியதுடன், மிகக் குறுகிய நாள்களில் அதிக அளவு கொள்முதல் செய்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர். விவசாயத்தைப் பொறுத்தவரை அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் நெல் கொள்முதல் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. நெல்லுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதற்கு செவிசாய்ப்பதே இல்லை. 2018-19ம் ஆண்டு ஒரு குவின்டால் நெல்லுக்கு ஆதரவு விலையாக 1,750 ரூபாயை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்தத் தொகையுடன் ஊக்கத்தொகையாக 750 ரூபாய் சேர்த்து வழங்கி நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர். இவ்வளவு பெரிய தொகையை இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும் வழங்கியதில்லை.

நெல் வள்ளல்!

இதனால், தற்போது ஒரே போகத்தில் மாநில அரசு 80.40 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் முதுநிலை மேலாண் இயக்குநராகப் பணிபுரிபவர் அன்பழகன். முதலமைச்சர் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து, விவசாயிகளின் பாராட்டைப் பெற பின்னணியில் இருந்தது இவர்தான் என்கிறார்கள் விவசாயிகள். அதற்காகத்தான் இப்படி ஒரு பாராட்டு... கொண்டாட்ட நிகழ்வு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாம் சரி... யார் அந்த முதலமைச்சர் என்கிறீர்களா? நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி கிடையாது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் போகல்தான் பாராட்டுக்குரிய அந்த முதல்வர். சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இப்படி ஒரு சாதனை நடந்துள்ளது. அதிகாரி அன்பழகன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே நமக்குப் பெருமை. பூபேஸ் போகல், ஒரு குவின்டால் நெல்லுக்கு 750 ரூபாய் வழங்கினார் என்றால், நம் முதலமைச்சர் 2018-19ம் ஆண்டுக்கு வழங்கிய ஊக்கத்தொகை வெறும் 70 ரூபாய் மட்டுமே. 1977-78ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ஒரு குவின்டால் நெல்லுக்கு 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அது, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச தொகையும் அதுதான். அதன் பிறகு வரலாறு திரும்பவேயில்லை. நெல் கொள்முதல் அளவிலும் தமிழக அரசு மிகவும் பின்தங்கியே உள்ளது. குறுவை, சம்பா, தாளடி மூன்று போகத்துக்கும் சேர்த்து சராசரியாக மொத்தம் 18 முதல் 19 டன் வரைதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனாலேயே தனியார் வியாபாரிகளை நாட வேண்டியிருக்கிறது தமிழக விவசாயிகள்.

ஹும்ம்ம்... ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர என்ன செய்ய?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு