அலசல்
சமூகம்
Published:Updated:

கானல்நீராகும் இழப்பீடு... கண்ணீரில் விவசாயிகள்!

விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகள்

காலதாமதப்படுத்தியே காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தைச் செலுத்திவந்ததால், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, விளைந்ததை சரிவர அறுக்க முடியாமலும் விற்க முடியாமலும் வேதனையில் தவிக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் இழப்பீட்டுப் பணத்தையும் உடனடியாக வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்தடிப்பது விவசாயிகளை விரக்தியின் உச்சத்துக்குத் தள்ளியுள்ளது.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதனிடம் பேசினோம். ‘‘சாகுபடி மற்றும் மகசூல் காலங்களில் இயற்கை இடர்பாடுகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் விவசாயிகள் சந்திக்கும் பொருளாதார இழப்பை ஈடுசெய்யும் பொருட்டே மத்திய அரசால் கடந்த 2016-ம் ஆண்டில் பயிர்க்காப்பீடு இழப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. ரபி (சம்பா, தாளடி பயிர்கள்), கரீப் (குறுவைப் பயிர் ) என இரண்டு பருவங்களாகப் பிரித்து இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சுந்தர விமல்நாதன் -  துரைக்கண்ணு
சுந்தர விமல்நாதன் - துரைக்கண்ணு

இதற்கு விவசாயிகள் நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 470 ரூபாய் வீதம் பிரீமியம் தொகையாகச் செலுத்திவருகின்றனர். இந்தத் திட்டத்தில் மகசூல் நேரங்களில் ஒரு வருவாய் கிராமத்தில் சில விவசாயி களின் வயல்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் துறை, வருவாய்த் துறை, புள்ளியியல் துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த வர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை சோதனை செய்யப்பட்டு மகசூல் இழப்பைக் கணக்கீடு செய்வதுடன், அதன்படி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்படும்.

ஆனால், இந்தப் பணம் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வந்ததே கிடையாது.

காலதாமதப்படுத்தியே காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தைச் செலுத்திவந்ததால், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

அரசு இதை கண்டுகொள்வதேயில்லை. தற்போது கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைவித்த பொருள்களை விற்க முடியாமலும், அறுவடையே செய்ய முடியாமலும் தவிக்கின்றனர்.

இது கடுமையான பேரிடர்காலம். இந்த நேரத்திலாவது காப்பீட்டுத் திட்டத்தில் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். கடந்த நிதியாண்டுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும் நெற்பயிர் அறுவடை சோதனை, ஜனவரியிலேயே முடிந்துவிட்டது. எவ்வளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது என்ற விவரமும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட நவீன கருவி மூலம் உடனடியாக காப்பீடு நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. டெல்டா விவசாயிகள், பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு முன்னரே முழு அறுவடையையும் முடித்துவிட்டனர்.

‘சோதனை அறுவடை செய்யப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இழப்பீட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பதுடன், அடுத்த நான்கு வாரங் களுக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்திவிட வேண்டும்’ என்பது மத்திய அரசு வகுத்துள்ள விதி. ஆனால், 2016-ம் ஆண்டுக்கான இழப்பீடே இன்னும் பல விவசாயிகளுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு வரையிலான பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத்தொகை ஏராளமான விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ளது.

விவசாயிகள்
விவசாயிகள்

நாங்கள் அரசிடம் மானியமோ உதவித்தொகையோ கேட்கவில்லை. எங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்கு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் தரவேண்டும். இது பிரதமருடைய திட்டம் என்பதால், அவரே நேரடியாகத் தலையிட்டு விரைவாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரும் இதற்கு வலியுறுத்த வேண்டும்.

ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்றால், மே மாதத்திலிருந்தே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். விவசாயிகள் வருமானத்துக்கு வழியின்றித் தவிக்கும் இந்த நேரத்தி லாவது எங்களின் துயரைத் துடைக்க வேண்டும்’’ என்றார்.

டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் இது பொதுவான பிரச்னையாகவே தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த விஷயத்தில் அசாத்தியமான தாமதம் இருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் (மதுரை) மத்திய, மாநில அரசுகள் மீது 40 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிலுவையில் உள்ளதே இதற்கு உதாரணம். தமிழக விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையாக ஆயிரம் கோடி ரூபாய் வரவேண் டியுள்ளதாகச் சொல்லி அதிரவைக்கிறார்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.

இந்தப் பிரச்னை குறித்து வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டதற்கு, ‘‘பயிர் சோதனை அறுவடை முடிந்து கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிந்துகொண்டு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இதுகுறித்துப் பேசுவோம். அவர்களிடம் அழுத்தம் கொடுத்து இழப்பீட்டுத்தொகையை விரைவாகப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

பயிர் சோதனை அறுவடை எப்போதோ முடிந்துவிட்டது. இதைகூட அறிந்து கொள்ளாமல் வேளாண் துறை அமைச்சர் இருக்கிறார். விவசாயிகளுக்கு அடுத்தடுத்து வரும் சோதனையும் -வேதனையும் எப்போதுதான் முடிவுக்கு வருமோ?