Published:Updated:

கலகல அமைச்சர், லகலக விவசாயிகள்; கடுப்பேற்றிய கருத்துக்கேட்புக் கூட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஜெயரஞ்சன்

இந்த பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியவை சிலருக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், பலருக்கு சங்கடத்தையும் கொடுத்தது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 2021-22-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டுக்காக கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மாநில அளவிலான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று (8/08/2021) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்தில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாநில வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். கருத்துக்கேட்பு கூட்டம் என்பதைவிட, கலகல லகலக கூட்டம் என்றே சொல்லலாம்... அந்தக் கூட்டத்தின் ஹைலைட் விஷயங்களை. அந்த அளவுக்கு கலாய்த்துத் தீர்த்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதேசமயம், பலரும் சங்கடத்தில் நெளிந்தனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

காலை 9.30 மணிக்கே தமிழகம் முழுவதுமிருந்து அழைக்கப்பட்டிருந்த சுமார் 60 விவசாயிகள் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். சற்று தாமதமாக வந்து சேர்ந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். காலையிலிருந்து ஒருசிலரே நீண்டநேரமாகப் பேசிக் கொண்டிருக்க, ``இங்க பாருங்கப்பா... இன்னும் 40 பேருக்கு மேல பேசணும். அதனால 5 நிமிஷத்துக்கு மேல யாரும் பேசக்கூடாது. ``அமைச்சர் அவர்களே... கூடியிருக்கும் விவசாயிகளே"னு சொல்லிட்டிருக்காம, அனைவரும் வணக்கம்னு விஷயத்த மட்டும் பேசுங்க” என்றபடியே பேசுபவர்களின் பெயர்களைப் படித்தார் அமைச்சர். ஆனால், வழக்கம்போலவே அவர்களே... இவர்களே தொடரவே, ``எல்லாருக்கும் ஸ்டார்ட்டிங் பிராப்ளம்போல” என்று நொந்தபடியே அமைச்சர் சொல்லவும் சிரிப்பலையால் அதிர்ந்தது அரங்கம்.

``வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத்துல கொடுக்கிற டிராக்டர்கள் எல்லாம் 18 ஹெச்.பி, 38 ஹெச்.பினு இருக்கு. இதைக் கொண்டு உழவு ஓட்டும்போது நிலத்துல உழவு ஓட்டுறதுக்கு சரியா இருக்கு. ஆனா, சேடை உழவு ஓட்ட முடியுறதில்ல. அதனால ஹெச்.பி அதிகமாக கொண்ட டிராக்டர்களை கொண்டு வரணும்” என்று கேட்டார் ஒரு விவசாயி ஒருவர்.

``அது ஓடும்... ஆனா ஓடாது” என்று அமைச்சர் சொல்ல, மீண்டும் சிரிப்பலை. கூடவே, ``ஏம்ப்பா பொறியியல் துறை... இதைக் கொஞ்சம் கவனிங்கப்பா” என்றும் சொன்னார் அமைச்சர்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில்
கருத்துக் கேட்பு கூட்டத்தில்

விழுப்புரத்திலிருந்து வந்திருந்த விவசாயி, ``ஓடையை சரி செய்யணும், நீர்நிலைகள பாதுக்காக்கணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

``கலெக்டர் ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ்ல பேச வேண்டியதெல்லாம், இங்கே பேசக்கூடாது. இது மாநில அளவிலான கூட்டம். அதுக்கேத்த விஷயங்கள் இருந்தா பேசுங்க. இல்லைனா உக்காரங்க” என்றார் அமைச்சர் சற்று கோபமாக.

``கலெக்டர் ஆபிஸ்ல தீர்வு கிடைச்சா, நாங்க ஏன் இங்க அதைப்பத்தி பேசுறோம். கலெக்டர் ஆபிஸ்ல நடக்கிற குறைகேட்பு கூட்டத்த, குறைதீர்வு கூட்டம்னு மாத்துங்க. அப்பத்தான் விவசாயிகளோட கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும்” என்று பின்னாலிருந்து விவசாயிகள் குரல் எழுப்ப கூட்டத்தில் சலசலப்பு நிகழ்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கே.வி.ராஜ்குமார், ``சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகையை கொடுக்காம பாக்கி வெச்சிருக்கு. நாங்களும் போராட்டம் பண்ணி பார்த்திட்டோம். அரசாங்கத்துக்கிட்ட முறையிட்டும் பார்த்திட்டோம். தீர்வு கிடைத்தபாடியில்லை” என்றார்.

``ஆலைக்காரங்ககிட்ட கேட்டா இதோ இப்போவே கொடுத்திடுறேன்ங்கிறாங்க. அப்புறம் சத்தமே வர்றதில்ல. அதனாலதான் 40 ஏக்கர்ல கரும்பு விவசாயம் செஞ்சிட்டு இருந்த நான், இப்போ 5 ஏக்கர்லதான் கரும்பு விவசாயம் செய்றேன்" என்று பிரச்னைக்குத் தீர்வு சொல்லாத அமைச்சர்,

``என்ன பண்றது... கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கித்தானே ஆகணும்” என்றும் சொல்ல விவசாயிகளிடையே கொந்தளிப்பு அலை எழுந்து அடங்கியது.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
நெல் கொள்முதலில் லஞ்சம்; கேள்வி கேட்ட நிருபரை `கிறுக்கு’ ஆக்கிய அமைச்சர்!

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ``ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இருப்பது போன்று ரேக்ளா ரேஸுக்கும் அனுமதி கொடுக்கணும். அப்போதான் நாட்டு மாடுகளைக் காப்பாற்ற முடியும். குறிப்பா, காங்கேயம் மாடுகளைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

``ஏங்க... விவசாயிங்கள காப்பத்துறக்கு வழி சொல்லுங்கன்னா, அத காப்பாத்து, இத காப்பாத்துங்கிறீங்களே... உக்காருங்க, உக்காருங்க...” என்று அமைச்சர் சொன்னதை பலரும் ரசிக்கவில்லை.

அதே விவசாயி, ``சொட்டுநீர்ப் பாசனத்துல இதர விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயில 70,000 கொடுக்கிறீங்க. மீதி 30,000 நாங்க கொடுக்கிறோம். நாங்க தனியா போட்டாலே மொத்தமா 70,000-தான் ஆகும். மீதி 30,000 மிச்சமாகும். அதனால மானியத்தொகையை எங்க கையில கொடுத்திட்டா நாங்களே போட்டுக்குவோம்” என்றார்.

``ரொம்ப நன்றி... உக்காருங்க'' (அடிமடியிலேயே கை வைக்கிற யோசனையோ) என்று அமர வைத்துவிட்டார் அமைச்சர்.

தென்மாவட்ட விவசாயி எழுந்து, ``கருவிகளை பழுது பாக்குறதுக்கு கிராமங்கள்ல ஆட்கள் கிடையாது. அதைக் கையாள்வதற்கு பயிற்சி கொடுக்கணும். குறிப்பா நூறுநாள் வேலைத் திட்டத்தில் இருக்கிறங்கவங்களுக்கு இத கொடுக்கணும்” என்று சொன்னார்.

உடனே குறுக்கிட்ட மாநில வளர்ச்சிக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், ``நூறுநாள் வேலைத்திட்டத்துல பலபேர் கிழடு கட்டதான் வர்றாங்க. அவங்களுக்குப் போய் பயிற்சி அது இதுன்னு சொல்றீங்க” என்று கொதித்தார்.

அதற்கு அந்த விவசாயி, ``சரிங்க... வயசானங்களுக்கு இல்லைனாலும் வயசு குறைஞ்சவங்களுக்கு கொடுக்கலாமே” என்றார்.

``எல்லாம் பார்ப்போம்” என்றார் ஜெயரஞ்சன் பொத்தம் பொதுவாக.

``தி.மு.க தேர்தல் அறிக்கையில விவசாயிகள் வருமானத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும்படியா எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி உற்பத்திச் செலவோடு 50 சதவிகித விலையை நிர்ணயம் செய்வோம்னு சொல்லியிருந்தது. அதை இந்த பட்ஜெட்லயே நடைமுறைப்படுத்தணும்” ஒரு விவசாயி கேட்டார்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில்
கருத்துக் கேட்பு கூட்டத்தில்

உடனே குறுக்கிட்ட ஜெயரஞ்சன், ``எம்.எஸ்.பி மத்திய அரசுக்கிட்ட இருக்கு. அதுக்கான நிதியும் அவங்ககிட்டதான் இருக்கு. மாநில அரசை செயல்படுத்துங்கனு கேக்கிறீங்க. நெல், கோதுமை எம்.எஸ்.பிக்கே வருஷத்துக்கு 1,60,000 கோடி ஆகுது. அதையே எப்படிடா கழற்றி விடுறதுன்னு ஒன்றிய அரசு யோசிச்சிட்டு இருக்கு. ஜி.எஸ்.டி தொகையை ஒழுங்கா கொடுக்காம இழுத்தடிச்சிட்டு இருக்காங்க. இதுல எங்க எம்.எஸ்.பி செயல்படுத்துறது” என்று ஆவேசமானார்.

சுதாரித்துக் கொண்ட அமைச்சர். ``நாங்க வந்து இப்பதான் 3 மாசம் ஆகுது. நிறைய பேசிட்டு இருக்கோம். பார்ப்போம்” என்றார்.

மதுரை மாவட்டம், மேலூர் விவசாயி, ``அழகர்மலையிலிருந்து வர்ற மயில்கள், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்கள்ல வளர்ற பயிர்கள சேதப்படுத்தது. இதுக்கு அழகர்மலையை சரணாலயமா அறிவிச்சு. அங்கிருக்கிற விலங்குகள வெளியில விடாம பாதுகாக்கணும்” என்றார்.

``அரசாங்கத்த மயில் புடிக்கற வேலை பாக்கச் சொல்றீங்களா... உக்காருங்க” என்றார் அமைச்சர்.

``சூர்யா படத்துல வர்ற மாதிரி மனிதக் கழிவுகள விவசாய நிலத்துக்கு உரமாக்குற திட்டத்த கொண்டு வரணும்” என்று ஒரு விவசாயி பேசினார்.

``நீங்க நிறைய சினிமா பார்க்கிறவங்கனு தெரியுது. உக்காருங்க” என்று அவரையும் மடக்கினார் அமைச்சர்.

இப்படியே தொடர்ந்த கூட்டம் மாலை 5.30 மணி வரை சென்றது. 90 சதவிகித விவசாயிகள், இயற்கை வேளாண்மையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேளாண்துறையில் சீர்ப்படுத்த வேண்டிய விஷயங்களையும் பலரும் சுட்டிக்காட்டினர்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில்
கருத்துக் கேட்பு கூட்டத்தில்
தமிழக விவசாயிகள் தலைநிமிர ஸ்டாலின் செய்ய வேண்டியவை என்னென்ன? பட்டியலிடும் செயற்பாட்டாளர்!

அதற்கு அமைச்சரும், தமிழக வளர்ச்சிக்குழுத் துணைத் தலைவரும், ``எல்லாம் எங்களுக்குத் தெரியும். விவசாயத்துல எங்களுக்கு தெரியாத விஷயம் இல்ல. நீங்க பேசின விஷயங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நிறைய ஆய்வும் செஞ்சு வெச்சிருக்கோம். உங்ககிட்ட எதிர்பார்க்கிறது விவசாயிகள் காசு சம்பாதிக்கிறதுக்கு ஏதாவது ஐடியா இருக்கான்னுதான் கேக்கிறோம். ஆனா, அந்த பாயின்ட்டுக்கு யாருமே வரல. நிறைய விஷயங்களை அலசி ஆராய்ஞ்சிருக்கோம். முதற்கட்டமா 1 லட்சம் ஏக்கர் நிலத்தை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வர்றதுக்கான விஷயங்கள ஆரம்பிக்க இருக்கிறோம். படிப்படியா மத்த விஷயங்கள செய்வோம்” என்றனர்.

இதைக்கேட்டதும் பெரிதாக சலசலக்க ஆரம்பித்த விவசாயிகளும் சங்கப் பிரதிநிதிகளும், ``எங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்கள சொல்றோம். அது சரிபடுமா, படாதானு முடிவு பண்ண வேண்டியதுதான் உங்கள வேல. அத விட்டுட்டு வந்த விவசாயிகள இப்படி கடுப்பேத்தினா எப்படி? விவசாயிகள் அனுபவப்பட்டதை சொல்றாங்க. அதை பேச விடாம தடுக்கிறதும், உக்கார வெச்சிடுறதும் நடந்தா அடுத்த கூட்டத்துக்கு எப்படி வருவாங்க” என்று புலம்பியபடியே கலைந்தனர்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில்
கருத்துக் கேட்பு கூட்டத்தில்

ம்... இவ்வளவு நாளா யாரும் கருத்துக்கூட கேட்டதில்ல. இவர்கள் கேட்கவாவது செய்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்ய?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு