Published:Updated:

கால்நடை காப்பீடு திட்டத்தில் குளறுபடி! குமுறும் விவசாயிகள்..!

கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
News
கால்நடை

கால்நடை

யிர்க் காப்பீடு திட்டம்போல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் காப்பீடு திட்டம் உள்ளது. ஆனால், இப்படியொரு திட்டம் இருப்பதே பெரும்பாலான விவசாயி களுக்குத் தெரியாது. விவரம் அறிந்த விவசாயிகள் கால்நடை மருத்துவமனையை அணுகினாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் காப்பீடு எடுக்காமல் செய்து விடுகிறார்கள். இதனால் கால்நடைகள் இறக்கும்போது விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, கிடைக்காமல் போய்விடுகிறது.

‘ஸ்கீம்’ முடிஞ்சு போச்சு

இதுகுறித்து மிகுந்த ஆதங்கத்தோடு பேசினார், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் கிராத்தைச் சேர்ந்த பெண் விவசாயி கலைவாணி, “நான், நிறைய ஆடு, மாடு, கோழிகளை வளர்த்துக்கிட்டு இருந்தோம். அதுல 11 மாடுகள் இருந்துச்சு. போன வருஷம் பெய்ஞ்ச மழையால ஒரு மாடு செத்துப் போயிடுச்சு. அதோட மதிப்பு 40,000 ரூபாய். அதனால மீதியிருக்க மாடுகளுக்காவது காப்பீடு செய்யலாம்னு எங்க பகுதியில இருக்க, பள்ளிவிருத்தி கால்நடை மருத்துவமனையிலப் போய்க் கேட்டேன். ‘இதுக்கான ‘ஸ்கீம்’ முடிஞ்சுப் போயிடுச்சு’னு சொல்லிட்டாங்க. நானும் மூணு மாசம் அலைஞ்சுப் பார்த்துட்டு, அலுத்துப்போயி விட்டுட்டேன்.

மாடுகள்
மாடுகள்

போன மாசம் தொண்டை அடைப்பான் நோயில ஒரு மாடு செத்துப் போயிடுச்சு. இனிமே தாமதிக்கக் கூடாது. உடனே மத்த மாடுகளுக் காவது காப்பீடு செஞ்சு வைக்கலாம்னு மறுபடியும் பள்ளிவிருத்தி கால்நடை மருத்துவமனைக்குப் போனேன். அங்க மருத்துவர் இல்லை. கோட்டூர் மருத்துவமனைக்குப் போயி, காப்பீடு பத்தி கேட்டேன். சரியான பதில் கிடைக்கல. இதனால என்னோட கணவர், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், கால்நடை பராமரிப்புத்துறை உயர் அலுவலர்களுக்கும் புகார் பண்ணினார். அதுக்கு பிறகு ஒரு கால்நடை மருத்துவர், எங்க பண்ணைக்கு வந்து மாடுகளைப் பார்த்தார்.

‘கன்று ஈன்று, பால் கொடுத்துக்கிட்டு இருக்கக்கூடிய மாடுகள், நிறை மாத சினையாக இருக்கக்கூடிய மாடுகளுக்கு மட்டும்தான் காப்பீடு செய்ய முடியும். அதனால சினையா இருக்க ஒரு மாட்டுக்கு மட்டும்தான் காப்பீடு செய்ய முடியும்’னு சொல்லிட்டார். காப்பீடு திட்டத்தோட பலன் எல்லா மாடுகளுக்கும் கிடைக்கணும். இப்படி பிரிச்சு வெச்சிருக்கிற விஷயமே இப்பத்தான் தெரியும். அதனாலதான் கால்நடைகள வளர்க்குற விவசாயிகளுக்குக் காப்பீடு திட்டத்தோட பலன் முழுமையா கிடைக்க மாட்டேங்குது’’ என்றார் வேதனையுடன்.

மாடுகள்
மாடுகள்

கண்டுகொள்ளாத கால்நடைத்துறை

கால்நடை காப்பீடு திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ‘‘பயிர் காப்பீடு திட்டம் பத்தி, ஒவ்வொரு வருஷமும் வேளாண்மைத் துறையினர் விரிவான விளம்பரங்கள் செய்றாங்க. ஆனா, ஆடு, மாடு, கோழிகளுக்கான காப்பீடு திட்டம் பத்தி, கால்நடை பராமரிப்புத்துறையினர், எந்த ஒரு அறிவிப்பையுமே வெளியிடுறதில்ல. இப்படியொரு திட்டம் இருக்குறதே பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரியாது. கால்நடை பராமரிப்புத்துறையினர் மூலம் காப்பீடு செஞ்சா, ‘பிரிமீயம்’ தொகை ரொம்ப குறைவு. மருத்துவ சான்றிதழுக்குச் செலவு செய்ய வேண்டியதில்ல. 40,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு மாட்டுக்குக் காப்பீடு செய்ய, அதிகபட்சம் 500 ரூபாய்தான் ‘பிரீமியம்’ செலுத்த வேண்டியதிருக்கும். ஆரோக்கிய மான நிலையில இருக்க மாடு தீடீர்னு இறந்தா, அதோட மதிப்புல 70 முதல் 80 சதவிகிதம் இழப்பீடாக் கிடைக்கும். ஆனா, எனக்குத் தெரிஞ்சு, ஒரு விவசாயிகூட, கால்நடை மருத்துவமனை மூலம் காப்பீடு செஞ்சதில்ல. காரணம், அரசாங்க கால்நடை மருத்துவர்கள் இதுல கொஞ்சம்கூட ஆர்வம் காட்டுறதில்ல. இது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு கால்நடை மருத்துவமனைக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாடு களுக்குத்தான் காப்பீடுனு ஒதுக்கீடு செய்யப் படுது. கால்நடை மருத்துவர்களுக்கு ரொம்ப வேண்டியப்பட்டவங்க, அரசியல் செல்வாக்கு உள்ளவங்க மாடுகளுக்குத்தான் காப்பீடு செய்யப்படுது. கால்நடை காப்பீட்டுத் திட்டத்துல எல்லா விவாயிகளும் பயனடைய, தமிழக அரசு உடனடியா நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

கலைவாணி, சுகுமாறன்
கலைவாணி, சுகுமாறன்

50 சதவிகிதம் ‘பிரீமியம்’ செலுத்தினால் போதும்

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் பேசினோம். ‘‘கால்நடை காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடியது. நிறைமாத சினை மாடுகளுக்கு மட்டுமே காப்பீடு செய்ய முடியும் என்பது தவறான தகவல். ஒரு ஈற்றுக் கன்று போட்டிருந்தால் போதும்... அந்த மாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் காப்பீடு செய்துகொள்ளலாம்.

ஒரு விவசாயி அதிகபட்சம் 5 மாடுகளுக்கு, அரசு கால்நடை மருத்துவமனைமூலம் காப்பீடு செய்து கொள்ளலாம், பட்டிய லினத்தைச் சேர்ந்த விவசாயிகள், ‘பிரீமியம்’ தொகையில் 30 சதவிகிதம் செலுத்தினால் போதும். மற்றவர்கள் 50 சதவிகிதம் ‘பிரீமியம்’ தொகை செலுத்த வேண்டும், மீதித் தொகையை, மானியமாக அரசு செலுத்திவிடும்’’ என்றார்.

கால்நடை காப்பீடு திட்டம் என்பது விவசாயிகள் பாதிக்கபடாமல் இருக்க உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை விவசாயிகளுக்குச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கால்நடை மருத்துவர்களின் கடமை. தன் கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.